சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி, சர்வதேச கிரிக்கெட் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளுக்கான விதிமுறைகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்துள்ளது.
’எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கான Game-ஆகவே கிரிக்கெட் இருக்கிறது’ என்ற பொதுவான கருத்து இருந்துவரும் சூழலில், பவுலர்களுக்கு ஃபெனிஃபிட்டாக இருக்கும் சில விதிகளும், அதே நேரத்தில் பேட்ஸ்மேன்களுக்கு ஏதுவான சில மாற்றங்களும் செயலுக்கு வரவிருக்கின்றன.
இந்த புதிய விதிகளை சவுரவ் கங்குலி தலைமையிலான ஐசிசி குழுவினர்கள் ஒன்று சேர்ந்து பரிந்துரைத்துள்ளனர். இக்குழு ஒட்டுமொத்தமாக 2000 சர்வதேச போட்டிகளில் விளையாடியிருப்பதாக ஐசிசி தெளிவுபடுத்தி விதிகளுக்கான மாற்றங்களை வெளியிட்டுள்ளது.
வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கொண்டுவரப்பட்ட ஸ்டாப் கிளாக் விதிமுறை, பல குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகப்படுத்தப்பட விருக்கிறது.
அதன்படி பந்துவீசும் அணி ஒரு ஓவரை வீசிய பிறகு அடுத்த ஓவரை வீச 1 நிமிடத்திற்குள் தயாராக இருக்கவேண்டும். ஒருவேளை ஒவ்வொரு ஓவருக்கும் இடையேயான நேரம் ஒரு நிமிடத்தை கடந்தால் 2 முறை வார்னிங் கொடுக்கப்படும். முதல் 80 ஓவருக்குள் 3வது முறையாக பந்துவீச்சு அணி ஸ்லோ ஓவரை வீசினால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும்.
80 ஓவர்களுக்கு இடையில் 2 முறைக்குமேல் எத்தனை முறை தாமதமாக வீசினாலும் அத்தனை முறை பெனால்டியாக 5 ரன்கள் வழங்கப்படும்.
ஆனால் முதல் 80 ஓவர்கள் முடிந்தபிறகு மீண்டும் ஸ்லோ ஓவர் கவுண்ட் 0-வாக மாற்றப்பட்டு முதலிலிருந்து கணக்கில் கொள்ளப்படும்.
ஒரு கேட்ச் பிடிக்கப்படும்போது நோ-பால் என்று அறிவிக்கப்பட்டால், பேட்ஸ்மேன்கள் அந்தபந்தின்போது ஓடும் ரன்கள் கணக்கில் கொள்ளப்படாமல் டெட் பாலாக அறிவிக்கப்பட்டு நோ-பால் என்பதற்கான ஒரு ரன் மட்டுமே பேட்டிங் அணிக்கு வழங்கப்படும்.
ஆனால் இனிமேல் நோ-பால் என்றாலும் கேட்ச் சோதிக்கப்படும். அது சரியான கேட்ச்சாக இருந்தால், நோ-பாலுக்குரிய எக்ஸ்டிரா ஒரு ரன் எப்போதும் போல வழங்கப்படும். ஆனால் வீரர் கேட்ச்சை சரியாக பிடிக்கவில்லை என்று தெரியவந்தால், அந்த சமயத்தில் பேட்ஸ்மேன் ஓடியிருந்த ரன்களும் அவருக்கு வழங்கப்பட்டு, நோ-பாலுக்கான எக்ஸ்ட்ரா ஒரு ரன்னும் பேட்டிங் அணிக்கு வழங்கப்படும்.
பந்தின் மீது எச்சில் தடவுவதற்கு தடை என்ற விதிமுறை இருந்தபோதும், சில அணிகள் பந்தை மாற்ற வேண்டும் என்பதற்காக பந்தின் மீது எச்சில் தடவும் செயலை சில நேரங்களில் செய்கின்றனர்.
இதனை தடுக்கும்விதமாக எச்சில் தடவினாலும் பந்து அதிகமாக சேதமாகாத வரை அம்பயர் பந்தை மாற்றவேண்டிய அவசியமில்லை என புதியவிதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பந்து மோசமாக பாதிக்கப்பட்டிருந்தால் பந்தை மாற்றும் முடிவை அம்பயர் எடுக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
சில முறை பேட்ஸ்மேன்கள் விரைவாக ரன்களை எடுக்க வேண்டும் என்பதற்காக, க்ரீஸை தொடாமலே ரன்களை ஓடியிருப்பார்கள். இதற்கு முன் அப்படி நடந்திருந்தால் அந்த பேட்ஸ்மேன் க்ரீஸை தொடாமல் ஓடி எடுத்த ரன்கள் எத்தனையோ அதுமட்டும் குறைக்கப்படும்.
ஆனால் தற்போது அமலுக்கு வரவிருக்கும் புதிய விதிமுறையின் படி, பேட்ஸ்மேன் அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்பதற்காக க்ரீஸை தொடாமல் எக்ஸ்ட்ரா ரன்னிற்கு சென்றால் பெனால்டியாக 5 ரன்கள் குறைக்கப்படும். அதுமட்டுமில்லாமல் ஸ்ட்ரைக்கில் இருந்த பேட்ஸ்மேன் அல்லது நான் ஸ்டிரைக் பேட்ஸ்மேன் இருவரில் யார் அடுத்த பந்தை எதிர்கொள்ளலாம் என்ற முடிவை பந்துவீச்சு கேப்டன் எடுக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
எல்லைக்கோட்டில் கேட்ச் பிடிக்கும்போது சில நேரம் ஃபீல்டர் பந்தை காற்றில் தூக்கிப்போட்டுவிட்டு, பவுண்டரி லைனுக்கு வெளியே சென்றுவிட்டு மீண்டும் உள்ளே வந்து பந்தை பிடிப்பார். அதற்கு விக்கெட் வழங்கப்படும்.
மாற்றப்பட்டிருக்கும் புதிய விதிமுறையின் படி பவுண்டரி லைனில் பந்தை தூக்கிப்போட்டுவிட்டு எல்லைக்கோட்டிற்கு வெளியே செல்லும் வீரர், ஒருமுறை மட்டுமே காற்றில் பந்தை தொட அனுமதிக்கபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இரண்டு வீரர்கள் இணைந்து கேட்ச் பிடித்தாலும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வீரர் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்ததற்கான ரிவ்யூ எடுக்கிறார் என்றால், எடுக்கப்பட்ட ரிவ்யூவில் நாட் அவுட்டாக இருந்தாலும், LBW வாய்ப்பையும் அம்பயர் பரிசோதிக்க வேண்டும் என்ற விதிமுறை வரவிருக்கிறது. அதன்படி கேட்ச் ரிவ்யூ எடுத்து அது நாட் அவுட்டாக இருக்கும் பட்சத்தில், LBW ரிவ்யூவில் அவுட்டாக இருந்தால் பேட்ஸ்மேன் அவுட் கொடுக்கப்படுவார்.
மூளை அதிர்வால் வீரர் களத்தில் பாதிக்கப்பட்டால், அவருக்கு பதிலாக மாற்றுவீரரை பயன்படுத்திக்கொள்ளலாம். அந்த மாற்றுவீரர் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டையும் செய்ய அனுமதிக்கப்படுவார். இத்தகைய மாற்றுவீரர்களின் பெயரை அணி பட்டியல் கொடுக்கப்படும்போதே தெரிவிக்க வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் ஒரு வீரர் கன்கஸ்ஸனால் பாதிக்கப்பட்டால் அடுத்த 7 நாட்களுக்கு கட்டாயம் ஓய்வில் இருக்க வேண்டும் என்ற விதிமுறை கொண்டுவரப்படுகிறது.
ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் 34 ஓவர் வரை இரண்டு புதிய பந்துகள் அனுமதிக்கப்படும், ஆனால் மீதமிருக்கும் ஓவர்களுக்கு ஒரு புதிய பந்து மட்டுமே பந்துவீச்சு அணியால் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பயன்படுத்தப்பட்ட ஒயிடு ஃபிக்ஸிங் பாய்ண்ட் விதி, சர்வதேச கிரிக்கெட்டிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஒரு பேட்ஸ்மேனின் கால்களே பவுலர் பந்துவீசும்போது ஒயிடு ஃபிக்ஸிங் பாய்ண்டாக கருதப்படும்.
ஒருவேளை வீரர் லெக் சைடு அல்லது ஆஃப் சைடு எங்கு நகர்ந்து நின்றிருந்தாலும், அவரின் கால்களின் பொசிஷனே ஒயிடு ஃபிக்ஸிங் பாய்ண்ட்டாக இருக்கும். அதற்கான சோதனை ஒயிடு லைன்கள் ஒயிடு அறிவிப்பதற்கு ஏதுவாக டிஸ்பிளே செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.