2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பிப்ரவரி 19-ம் தேதி முதல் தொடங்கி மார்ச் 9-ம் தேதிவரை நடைபெற்றது. பாகிஸ்தான் மற்றும் துபாய் என கலப்புமுறையில் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், நடப்பு சாம்பியனாக பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் என 8 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தின.
தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், மார்ச் 9-ம் தேதி துபாய் மைதானத்தில் ஃபைனல் நடைபெற்றது.
பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் நியூசிலாந்து 251 ரன்கள் அடிக்க, அடுத்து விளையாடிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
2002 சாம்பியன்ஸ் டிராபி, 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருந்த இந்திய அணி 3வது முறையாக 2025 சாம்பியன்ஸ் டிராபியையும் வென்று மகுடம் சூடியது.
தொடர் முடிவுக்கு வந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி, 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான சிறந்த அணியை அறிவித்துள்ளது. அந்த அணியில் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், முகமது ஷமி மற்றும் வருண் சக்கரவர்த்தி என 5 இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். கேப்டனாக ரோகித் சர்மாவிற்கு பதிலாக நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பெயரிடப்பட்டுள்ளார்.
தொடக்க வீரர்களாக தொடர் நாயகன் ரச்சின் ரவீந்திரா மற்றும் இப்ராஹின் ஜத்ரானும், ஆல்ரவுண்டர்களாக க்ளென் பிலிப்ஸ் மற்றும் அஸ்மதுல்லா ஓமர்சாய் இடம்பெற்றுள்ளனர். பவுலர்களாக மேட் ஹென்றி, முகமது ஷமி மற்றும் வருண் சக்கரவர்த்தி இடம்பெற்றுள்ளனர். 12வது வீரராக இந்தியாவின் அக்சர் பட்டேலின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
தொடர் முழுவதும் சிறந்த கேப்டன்சியை ரோகித் சர்மா செயல்படுத்திய நிலையில், அவருடைய பெயர் அணியில் இடம்பெறவில்லை.