zadran - sachin PT
கிரிக்கெட்

”இனியும் ஆப்கானிஸ்தானை அப்படி சொல்லாதீங்க..” - சச்சின் வார்த்தைகளால் நெகிழ்ந்த ஜத்ரான்!

இங்கிலாந்துக்கு எதிரான மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஆப்கானிஸ்தான் அணியை சச்சின் டெண்டுல்கர் பாராட்டி பேசியுள்ளார். அதற்கு ஆப்கானிஸ்தானின் நட்சத்திர வீரர் இப்ராஹிம் ஜத்ரான் நெகிழ்ச்சியான பதிலை அளித்துள்ளார்.

Rishan Vengai

நாட்டில் அரசியல் மாற்றங்கள், வறுமைகள் என பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும், சிரிக்கவும், மகிழவும் இருக்கும் ஒரே வழியாக கிரிக்கெட்டை பார்த்து வருகிறார்கள் ஆப்கானிஸ்தானின் ரசிகர்கள். அதற்கு உண்மையாக இருக்கும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியும், வீரர்களும் தொடர்ந்து தங்களுடைய நாட்டு மக்களுக்கான சந்தோஷத்தை உறுதிப்படுத்த பெரிய கிரிக்கெட் நாடுகளையும் தோற்கடித்து வருகின்றன.

afghanistan

இந்த சூழலில் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 8 அணிகளில் ஒன்றாக பங்கேற்ற ஆப்கானிஸ்தான் அணி, உலக சாம்பியன் இங்கிலாந்து அணியை லீக் போட்டியில் வீழ்த்தி அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

இந்த சூழலில் நேற்று நடந்த இங்கிலாந்து எதிரான போட்டியில் பல்வேறு சாதனைகளை ஆப்கானிஸ்தான் படைத்த நிலையில், ஆப்கானிஸ்தானின் சிறப்பான ஆட்டத்தை கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி பேசியுள்ளார்.

புகழ்ந்த சச்சின்.. நெகிழ்ந்து போன ஜத்ரான்..

இங்கிலாந்துக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் அபார வெற்றியை பாராட்டி பேசியிருக்கும் சச்சின் டெண்டுல்கர், “சர்வதேச கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானின் திடமான மற்றும் நிலையான எழுச்சி ஊக்கமளிக்கிறது. இனிமேலும் அவர்களின் வெற்றிகளை நீங்கள் அப்செட் என்று சொல்ல முடியாது, அவர்கள் இப்போது வெற்றிபெறுவதை ஒரு பழக்கமாக மாற்றியுள்ளனர்.

ஜத்ரானின் சிறப்பான சதம் மற்றும் அஸ்மதுல்லாவின் அற்புதமான 5 விக்கெட்டுகள் என ஆப்கானிஸ்தான் மற்றொரு மறக்கமுடியாத வெற்றியை பெற்றுள்ளது. நன்றாக விளையாடியது” என எக்ஸ் தளத்தில் ஜத்ரானையும், அஸ்மதுல்லா ஓமர்சாய் இருவரையும் டேக் செய்து பாராட்டியிருந்தார்.

இந்நிலையில் சச்சினின் மிகப்பெரிய பாராட்டை பார்த்து நெகிழ்ந்து போன ஜத்ரான், “பேட்டை எடுத்து கிரிக்கெட் விளையாட தலைமுறைகளை கடந்து ஊக்கப்படுத்திய மனிதரால் பாராட்டப்படுவது எவ்வளவு பெரிய மரியாதை.

உங்கள் வார்த்தைகள் எனக்கும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டுக்கும் நிறைய அர்த்தம் சேர்க்கிறது. நன்றி சார்” என பதிவிட்டுள்ளார்.