ஆசிய கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணிதான் கிட்டத்தட்ட 2026 டி20 உலகக்கோப்பையிலும் விளையாடபோகிறது என்று சொல்லப்படுகிறது.
அப்படியான சூழலில் துபாயில் இருக்கும் ஆடுகளத்தின் தன்மையும், இந்தியா-இலங்கையில் இருக்கும் ஆடுகளத்தின் தன்மையும் எப்படி பொருந்திப்போகும்? ஆசிய கோப்பையில் விளையாடும் அதே அணியை டி20 உலகக்கோப்பைக்கும் தேர்வுசெய்வது சரியான முடிவா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
2025 ஆசிய கோப்பை தொடரானது டி20 வடிவத்தில் செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 28 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கிறது. மொத்தம் 19 போட்டிகள் துபாய் மற்றும் அபுதாபி மைதானங்களில் நடைபெற உள்ளன.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஹாங்ஹாங், ஓமன் முதலிய 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, ஓமன் முதலிய அணிகள் ஏ பிரிவிலும், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் முதலிய அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
இந்தியா அணி தங்களுடைய பெரும்பாலான போட்டிகளை துபாய் மைதானத்தில் விளையாடவிருக்கிறது.
பொதுவாகவே உலகக்கோப்பை வருவதற்கு முன்பாக ஆசிய கோப்பை தொடர் நடைபெறுவது வழக்கமாக இருந்துவருகிறது. அப்படி ஆசிய கோப்பையில் சிறப்பாக விளையாடுவது, எதிர்வரும் உலகக்கோப்பைக்கு உதவும் என்பதால் ஆசிய அணிகள் ஆசிய கோப்பை வெல்வதில் அதிகமாகவே ஆர்வம் காட்டிவருகின்றன.
ஆனால் இந்திய அணியை பொறுத்தவரையில், ஆசிய கோப்பை அணியில் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் ஒட்டுமொத்த வீரர்களும் களமிறங்குவது இதுவே முதல்முறை. சுப்மன் கில் ஏன் ஆசிய கோப்பைக்கான அணிக்குள் எடுத்துவரப்பட்டார் என்ற கேள்வி பெரும்பாலான ரசிகர்களுக்கு எழுந்திருக்கலாம்.
சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா போன்ற மேட்ச் வின்னிங் வீரர்கள் அனைவரும் ஆசிய கோப்பை அணியில் எடுத்துவரப்பட்டது டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் யுக்தியாகவே பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் செப்டம்பரில் நடைபெறும் ஆசிய கோப்பை முடிவடைந்த சில மாதங்களிலேயே 2026 பிப்ரவரி - மார்ச் இடைவெளியில் டி20 உலகக்கோப்பை நடைபெற உள்ளது. அதன் காரணமாக நிச்சயம் ஆசிய கோப்பை அணியில் இடம்பெறும் 90% வீரர்களே 2026 டி20 உலக கோப்பையிலும் இடம்பெறுவார்கள்.
2025 ஆசிய கோப்பை போட்டிகளானது துபாய் மற்றும் அபுதாபி மைதானங்களில் நடைபெறவுள்ளது. இரண்டு மைதானங்களின் ஆடுகளங்களை பொறுத்தவரையில் இரண்டுமே சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களாகவே இதுவரை இருந்துள்ளன.
ஆனால் சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா விளையாடிய ஆடுகளத்திற்கும், தற்போது இருக்கும் ஆடுகளத்திற்கும் நிச்சயம் நிறைய வித்தியாசங்கள் இருக்கப்போகின்றன.
தற்போது யுஏஇ-ல் அதிகப்படியான வெப்பம் இருப்பதால், மாலை நேரத்தில் அதிகப்படியான பனிபொழிவு வர வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை ஆடுகளத்தின் வெப்பம் குறையவில்லை என்றால், இரண்டாம் பாதியில் விரிசல்கள் விழவும் வாய்ப்பு உள்ளது. அது சுழற்பந்துவீச்சுக்கு மேலும் சாதகமான சூழலை உருவாக்கும்.
தற்போதைய பிட்ச்கள் புல் நிறைந்த ஆடுகளங்களாகவும், அதேநேரத்தில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகவும் உருவாக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வீரர்கள் தெரிவிக்கின்றனர்.
வெப்பநிலை அதிகமாக இருப்பதால் ஆடுகளங்கள் நாள் முழுவதும் கவர்செய்யப்பட்டு வைக்கப்படுகின்றன. அதனால் ஈரப்பதம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், அதனுடன் புல் இருப்பதால் முதலில் பந்துவீசும் அணிக்கு வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான சூழல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் போகப்போக எப்போதும் போல ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் எனவும் சொல்லப்படுகிறது. இரண்டாம் பாதியில் பனி வரும் என்பதால் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணியே வெல்வதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது என்றும், டாஸ் வெல்வதில் பனி பெரிய ரோல் செய்யப்போகிறது என்றும் கூறப்படுகிறது.
அபுதாபி மைதானத்தை பொறுத்தவரையில் காற்றின் வேகம் மாலையில் அதிகம் இருக்கும் என சொல்லப்படுவதால் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான சூழல் இருக்கும் என சொல்லப்படுகிறது. துபாயை விட அபுதாபியில் பனிபொழிவு குறைவாக இருக்கும் என்றும், ஒருவேளை பனிபொழிவு ஏற்பட்டால் துபாயை விட அதிகமான பனிபொழிவு அபுதாபியில் ஏற்படும் என்றும் சொல்லப்படுகிறது.
துபாய் மைதானத்தில் விளையாடப்போகும் ஆசியக்கோப்பை அணியை கருவாக வைத்து டி20 உலகக்கோப்பை அணியை உருவாக்குவது சரிதானா? என்று கேட்டால், அது சரியான முடிவாகவே இருக்கிறது.
2026 பிப்ரவரி-மார்ச் மாதங்களில் உலகக்கோப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அப்போதைய காலகட்டங்களில் இலங்கை மற்றும் இந்தியாவில் ஆடுகளங்கள் பெரும்பாலும் வெப்பமாகவும், காய்ந்த பிட்ச்களாகவுமே இருக்கப்போகின்றன. இரண்டு நாட்டு மைதானத்தின் ஆடுகளங்களும் சுழற்பந்துவீச்சுக்கே சாதகமாக இருக்கப்போகின்றன.
அதிலும் இலங்கை ஆடுகளங்கள் பெரும்பாலும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகவே உருவாக்கப்படுகின்றன. துபாய், அபுதாபி போன்ற ஸ்பின்னுக்கு சாதகமான ஆடுகளங்களில் விளையாடுவது இந்திய அணி டி20 உலகக்கோப்பைக்கு தயாராவதற்கு சிறந்த முன்னேற்பாடாகவே இருக்கப்போகிறது. அதன்படி பார்த்தால் ஆசியக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருக்கும் 90% வீரர்களே டி20 உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பெறவிருக்கின்றனர்.