பும்ராவிற்கு காயம் web
கிரிக்கெட்

திடீரென மைதானத்தில் இருந்து வெளியேறிய பும்ரா.. மருத்துவனையில் ஸ்கேன்.. நாளை பந்துவீசுவது சந்தேகம்!

இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் அவதியுற்று மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட செய்தி இந்திய ரசிகர்களுக்கு பேரிடியாக விழுந்துள்ளது.

Rishan Vengai

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில், ஆஸ்திரேலியா அணி 2-1 என முன்னிலை பெற்றுள்ள நிலையில், இந்திய அணி 5வது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெறும் வகையில் போராடி வருகிறது.

தொடர் முழுவதும் இந்தியாவிற்கு சிறப்பாக செயல்பட்ட ஒரே வீரராக வேகப்பந்துவீச்சாளர் பும்ரா ஜொலித்த நிலையில், இறுதிப்போட்டியான சிட்னி டெஸ்ட் போட்டியில் முதுகுப்பிடிப்பு காரணமாக பும்ரா மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச்செல்லப்பட்டது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பும்ரா

இந்த தொடர் முழுவதும் அபாரமாக செயல்பட்ட பும்ரா 32 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் 4 முறை 4 விக்கெட்டுகளும், 3 முறை 5 விக்கெட்டுகளும் அடங்கும். அவருடைய பந்துவீச்சு சராசரி 9 இன்னிங்ஸ்கள் முடிந்த நிலையில் வெறும் 13-ஆக மட்டுமே இருந்துவருகிறது. அதவாது 13 பந்துகளுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருக்கிறார் பும்ரா. இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராகவும் நீடிக்கிறார்.

பும்ராவின் காயத்தின் நிலை என்ன?

தொடர் முழுவதுமே பும்ராவிற்கு சப்போர்ட் பவுலராக இந்திய அணியிலிருந்து ஒருவர் கூட செயல்படவில்லை. சிராஜ் அவ்வப்போது விக்கெட்டை வீழ்த்தினாலும், பும்ராவின் தோள்களின் மேல் அதிகப்படியான பாரம் ஏற்றப்பட்டது. இது இந்திய ரசிகர்களிடமே கவலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதன் நீட்சியாக தற்போது எல்லோரும் கவலைப்பட்டதை போலவே பும்ரா காயத்திற்கு உள்ளாகியுள்ளார்.

பும்ரா

இன்றைய ஆட்டம் தொடங்கப்பட்டதிலிருந்தே பும்ரா அவ்வப்போது பெவிலியனுக்கு சென்று திரும்பிய நிலையில், அவருக்கு மாற்றாக விராட் கோலியே கேப்டனாக களத்தில் செயல்பட்டார். இறுதியாக மதிய உணவிற்கு பிறகு களத்திற்கு வந்த பும்ரா ஒரேயொரு ஓவரை வீசியிருந்த நிலையில், மீண்டும் களத்திலிருந்து வெளியேறினார். பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

இன்னிங்ஸ் முடிந்தபிறகு பேசிய பிரசித் கிருஷ்னா, பும்ரா முதுகுப்பிடிப்பால் அவதியடைந்ததை உறுதிப்படுத்தினார். அவர் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச்செல்லப்பட்டதாகவும், பிசியோ தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவர்கள் சொன்ன பிறகுதான் பும்ராவின் கண்டிசன் தெரியும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், பும்ராவின் காயம் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியாகியிருக்கும் தகவலின் படி, பும்ரா பேட்டிங் செய்யுமளவிற்கு நன்றாக இருப்பதாகவும், ஆனால் அவரால் பந்துவீச முடியுமா என்பது சந்தேகம் தான் என்றும், பந்துவீசுவதற்கான கடைசி முடிவு நாளை அதிகாலையே மருத்துவக்குழுவினரால் முடிவெடுக்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது.