ஹாங்காங் கிரிக்கெட் சிக்ஸஸ் தொடருக்கு இந்தியா சார்பில் புவனேஸ்வர் குமார் தலைமையிலான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு அக்டோபர் 30 முதல் நவம்பர் 2 வரை ஹாங்காங்கில் நடைபெற இத்தொடரில் 12 அணிகள் பங்கேற்க உள்ளன.
ஹாங்காங் கிரிக்கெட் சிக்ஸஸ் (Hong Kong Cricket Sixes) என்பது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் (ICC) அங்கீகரிக்கப்பட்டு, 'ஹாங்காங் கிரிக்கெட்' அமைப்பால் நடத்தப்படும் ஒரு குறுகிய வடிவ சர்வதேச கிரிக்கெட் தொடராகும். டி20 மற்றும் அதன் அதிரடி ஆட்ட பாணிக்கு முன்பே, சிறிய ஆடுகள எல்லைகள் மற்றும் வேகமான ரன் குவிப்பு காரணமாக ரசிகர்கள் மத்தியில் இத்தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வழக்கமான 11 பேர் ஆடும் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட, சுவாரசியமான பல விதிகளைக் கொண்டது இந்தத் தொடர். முதன்முதலில் இத்தொடர், 1992-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2017 பதிப்பிற்குப் பிறகு இடைநிறுத்தப்பட்டது. இதனால், 2024 பதிப்பானது 7 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் முதல் போட்டியாக அமைந்தது. இதில் பாகிஸ்தான் அணி அதிகபட்சமாக 6 முறையும், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா தலா 5 முறையும், இலங்கை 2 முறையும், இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளன. சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, ஷேன் வார்ன், வசிம் அக்ரம், ஷோயப் மாலிக், சனத் ஜெயசூரியா, அனில் கும்ப்ளே, உமர் அக்மல், கிளென் மேக்ஸ்வெல் மற்றும் டேமியன் மார்ட்டின் போன்ற வீரர்கள் ஹாங்காங் கிரிக்கெட் சிக்ஸஸில் பங்கேற்று விளையாடியுள்ளனர்.
இந்தப் போட்டிகளில் தலா ஆறு வீரர்களைக் கொண்ட இரண்டு அணிகள் இடம்பெறும், மேலும் ஒவ்வொரு ஆட்டமும் ஓர் அணிக்கு அதிகபட்சமாக 6 ஓவர்களைக் கொண்டிருக்கும். விக்கெட் கீப்பரைத் தவிர, களத்தில் உள்ள ஒவ்வொரு வீரரும் ஒரு ஓவர் பந்துவீச வேண்டும். ஒரு பந்துவீச்சாளர் அதிகபட்சமாக 2 ஓவர்கள் வீசலாம், மற்ற நால்வரும் தலா 1 ஓவர் வீசுவர். வைடுகள் மற்றும் நோ-பால்களுக்கு இரண்டு ரன்கள் அபராதம் விதிக்கப்படும்.
ஒரு பேட்ஸ்மேன் 50 ரன்களை எட்டியதும் 'Retire Not Out' முறையில் களத்தைவிட்டு வெளியேற வேண்டும். மற்ற பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்த பிறகு அவர் மீண்டும் பேட்டிங் செய்ய வரலாம். 5 விக்கெட்டுகள் வீழ்ந்தபிறகும் ஆட்டமிழக்காத கடைசி பேட்ஸ்மேன் தனியாக பேட்டிங் செய்ய அனுமதிக்கப்படுவார். ஆட்டமிழந்த வீரர்களில் ஒருவர் அவருக்கு ரன்னராக (Runner) செயல்படுவார். அவரும் ஆட்டமிழந்தால் ஆட்டம் முடிவுக்கு வரும்.
நடப்பாண்டு அக்டோபர் 30 முதல் நவம்பர் 2 வரை ஹாங்காங்கில் நடைபெற இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங், ஓமன், வங்கதேசம், ஸ்காட்லாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 12 சர்வதேச அணிகள் பங்கேற்க உள்ளன. இதில் இந்தியா சார்பில் இந்த முறை புவனேஸ்வர் குமார் தலைமையிலான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது அணியில் க்ருனால் பாண்டியா, ஷஷாங்க் சிங், ராகுல் திவேதியா, நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, டி. நடராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.