Heinrich Klaasen
Heinrich Klaasen X
கிரிக்கெட்

வெறும் 4 டெஸ்ட் போட்டிகள்! ஓய்வை அறிவித்த தென்னாப்பிரிக்க அதிரடி வீரர் க்ளாசன்! என்ன நடந்தது?

Rishan Vengai

கடந்த 2023ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத ஒரு வீரராக அதிரடியில் மிரட்டியவர் ஹென்ரிச் க்ளாசன். 2023 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாகவே ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்த க்ளாசன், உலகக்கோப்பையிலும் அதே மரண அடியை தொடர்ந்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் 67 பந்துகளில் 12 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய க்ளாசன் 109 ரன்கள் குவித்து அசத்தினார். அதேபோல இலங்கைக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் 49 பந்துகளில் 2 பவுண்டரிகள் 8 சிக்சர்களை பறக்கவிட்ட அவர், 90 ரன்களை குவித்து மிரட்டிவிட்டார். உடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான செமி பைனலிலும் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் க்ளாசன் தான்.

Zampa - Klaasen

2023 ஆண்டில் மட்டும் 42 சிக்சர்களை பறக்கவிட்ட அவர், தென்னாப்பிரிக்காவின் ஒயிட்பால் கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத ஒரு வீரராக மாறியுள்ளார். ஆனால் அதேசமயம் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார் க்ளாசன்.

4 டெஸ்ட் போட்டிகள் தான்.. எதனால் ஓய்வு?

இதுவரை 50 சர்வதேச ஒருநாள் போட்டிகள், 39 டி20 போட்டிகள் என விளையாடியிருக்கும் க்ளாசன், டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். ஆனால் முதல்தர கிரிக்கெட் போட்டிகள், லிஸ்ட் ஏ போட்டிகள் என எடுத்துக்கொண்டால் 9000 ரன்களுக்கு மேல் அடித்திருக்கும் க்ளாசனுக்கு வாய்ப்புகள் கிடைக்காமலேயே போயுள்ளது. முதல் தர கிரிக்கெட்டில் அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 292 ரன்களாகும், இருப்பினும் 2012 தொடங்கிய அவருடைய முதல்தர கிரிக்கெட் பயணம் 2018ஆம் ஆண்டு தான் சர்வதேச கிரிக்கெட்டை எட்டிப்பார்த்தது.

க்ளாசன்

அதிகப்படியான வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தும் விதமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார் க்ளாசன். இதுகுறித்து அவர் பேசுகையில், ”நான் சரியான முடிவை எடுக்கிறேனா என்று பல நாட்கள் தூங்காமல் இருந்து எடுத்த முடிவுதான், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவது. இது எனக்கு மிகவும் கடினமான ஒரு முடிவு. ஏனென்றால் எனக்கு மிகவும் பிடித்த வடிவம் டெஸ்ட் கிரிக்கெட் ஆகும். ஆடுகளத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நான் சந்தித்த யுத்தங்கள் தான் என்னை உங்களிடம் ஒரு கிரிக்கெட் வீரராக மாற்றியுள்ளது. இது ஒரு சிறந்த பயணம் மற்றும் எனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தியதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்” என்று பேசியுள்ளார்.

க்ளாசன்

மேலும், “என்னுடைய டெஸ்ட் தொப்பி எனக்குக் கிடைத்த விலைமதிப்பற்ற ஒன்று எனத்தெரிவித்திருக்கும் அவர், அவருடைய கிரிக்கெட் பயணத்தில் பக்கபலமாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.