2026 டி20 உலகக்கோப்பையிலிருந்து காயம் காரணமாக ஹசரங்கா விலகல் cricinfo
கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை| இலங்கைக்கு விழுந்த பெரிய அடி.. காயம் காரணமாக ஹசரங்கா விலகல்!

2026 டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து காயம் காரணமாக இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Rishan Vengai

2026 டி20 உலகக்கோப்பையில் இலங்கை அணிக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. முக்கிய ஸ்பின்னர் வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக துஷான் ஹேமந்தா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஹசரங்காவின் விலகல், அணியின் வெற்றி வாய்ப்புகளை பாதிக்கக்கூடியது.

2026 டி20 உலகக்கோப்பை தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் நடந்துவருகிறது. 20 அணிகள் பங்கேற்று விளையாடிவரும் இத்தொடரானது பிப்ரவரி 7ஆம் தேதி முதல் மார்ச் 8ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது.

ஹசரங்கா

கடந்த 8ஆம் தேதி இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே கொழும்புவில் நடைபெற்ற போட்டியில், இலங்கை ஸ்பின்னர் வனிந்து ஹசரங்காவிற்கு காயம் ஏற்பட்டது. ஆனால் அணிக்காக தொடர்ந்து பந்துவீசிய ஹசரங்கா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு பங்காற்றினார்.

இந்தசூழலில் காயத்திற்கு பிறகு மருத்துவமனையில் ஸ்கேனுக்கு ஹசரங்கா அனுமதிக்கப்பட்ட நிலையில், MRI ஸ்கேனில் தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் காயம் பெரிய அளவில் இருப்பதால் டி20 உலகக்கோப்பையில் தொடர்ந்து விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் நடந்துவரும் டி20 உலகக்கோப்பை தொடரிலிந்து வனிந்து ஹசரங்கா விலகுவதாகவும், அவருக்கு பதிலாக லெக் ஸ்பின்னர் ஆல்ரவுண்டர் துஷான் ஹேமந்தா அணியில் சேர்க்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியில் இன்ஃபார்மில் இருந்துவந்த வீரர் ஹசரங்கா விலகியிருப்பது, அந்த அணிக்கு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.