Vijay Hazare Trophy 2023
Vijay Hazare Trophy 2023  X
கிரிக்கெட்

விஜய் ஹசாரே டிரோபி: முதல்முறையாக கோப்பை வென்று வரலாறு படைத்த ஹரியானா! ராஜஸ்தான் அணி தோல்வி!

Rishan Vengai

உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் முக்கிய தொடரான விஜய் ஹசாரே தொடர் கடந்த நவம்பர் மாதம் 23ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இந்திய தலைநகரங்களை மையமாகக் கொண்ட 38 அணிகள் இந்த தொடரில் 5 பிரிவுகளின் கீழ் பங்கேற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற தொடரில் சிறப்பாக விளையாடிய தமிழ்நாடு அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கர்நாடகா, ஹரியானா, ராஜஸ்தான் முதலிய அணிகளும் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.

விறுவிறுப்பாக நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் ஹரியானாவிடம் தோல்வியுற்று ஏமாற்றத்துடன் வெளியேறியது. மற்றொரு போட்டியில் சாம்பியன் அணியான கர்நாடகாவை பந்தாடிய ராஜஸ்தான் அணி, தீபக் ஹூடாவின் 180 ரன்கள் என்ற வரலாற்று ஆட்டத்தால் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இரண்டு சாம்பியன் அணிகளை வெளியேற்றிய ஹரியானா மற்றும் ராஜஸ்தான் அணிகள் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தின.

டக் அவுட்டில் வெளியேறிய தீபக் ஹூடா! வரலாறு படைத்த ஹரியானா!

நேற்று நடைபெற்ற கோப்பைக்கான பைனலில் முதலில் பேட்டிங் செய்த ஹரியானா அணி, தொடக்க வீரர் அன்கிட் குமார் (88 ரன்கள்) மற்றும் கேப்டன் மெனரியாவின் (70) அபாரமான ஆட்டத்தால் 287 ரன்கள் என்ற நல்ல டோட்டலை எட்டியது. கடைசியில் களமிறங்கி அதிரடி காட்டிய ராகுல் டிவேடியா 3 பவுண்டரிகள், 1 சிக்சர்கள் என விளாசி அணிக்கு உதவினார்.

Vijay Hazare Trophy 2023

288 ரன்கள் என்ற சற்று கடினமான இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி, 12 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடந்த போட்டியில் வரலாறு படைத்த கேப்டன் தீபக் ஹூடா கோல்டன் டக்கில் வெளியேற ஆட்டம் கண்டது ராஜஸ்தான் அணி. ஆனால் 5வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த தொடக்கவீரர் அமிஜீட் மற்றும் விக்கெட் கீப்பர் குணால் சிங் இருவரும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டனர். அடுத்தடுத்து அரைசதமடித்த இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தது. 10 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என சிறப்பாக விளையாடிய அபிஜீட் 106 ரன்னில் வெளியேற, அதிக நேரம் நிலைக்காத குணாலும் 79 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். நிலைத்து நின்ற இரண்டு வீரர்களும் அவுட்டாக வெற்றியின் பாதையில் இருந்த ராஜஸ்தான் அணியை இழுத்து பிடித்தது ஹரியானா அணி.

Vijay Hazare Trophy 2023

முக்கியமான நேரத்தில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்சல் பட்டேல் ராஜஸ்தானின் கோப்பைக்கனவை தகர்த்தார். முடிவில் 257 ரன்னுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ராஜஸ்தான் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. பெரிய நட்சத்திர வீரர்கள் இல்லையென்றாலும் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹரியானா அணி முதல்முறையாக விஜய் ஹசாரே டிரோபியை வென்று வரலாறு படைத்துள்ளது.