என்னதான் பிரபலமாக விளங்கினாலும், வயதைப் பொருட்படுத்தாமல் சுட்டிச் செயல்களில் ஈடுபடுவது உண்டு. அந்த வகையில், இந்திய கிரிக்கெட்டில் இளம்புயலாக வலம் வரும் வைபவ் சூர்யவன்ஷி போட்டிக்கு முன்பாக சோட்டா பீம் கார்ட்டூனைப் பார்த்து மகிழ்கிறார் என செய்தி வெளியாகி இருக்கிறது. அவரும் குழந்தைப் பருவத்தைச் சேர்ந்தவர் என்றாலும், அவருடைய இந்தச் செயல் இணையத்தைக் கலக்கி வருகிறது.
இந்திய அணியின் இளம் புயலாகக் கருதப்படுகிறார், பீகாரைச் சேர்ந்த 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி. ஏற்கெனவே தாம் விளையாடும் போட்டிகளில் எல்லாம் சதம் அடித்து சாதனை படைத்து வரும் வைபவ், சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக, 16 போட்டிகளில் 776 ரன்கள் குவித்து அதிக ரன் எடுத்தவருக்கான ஆரஞ்சு தொப்பியை வென்றார்.
ஐபிஎல் தொடருக்கு முன்பாக வைபவ் சூர்யவன்ஷி ஆட்டத்திறன் குறித்து பலரும் சந்தேகம் எழுப்பிய நிலையில், ஜஸ்பிரித் பும்ரா, பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் காகிசோ ரபாடா போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களின் பந்துகளை கொஞ்சமும் பயமின்றி நாலாபுறமும் சிதறடித்ததுடன், விமர்சித்த வல்லுநர்களின் வாயையும் மூடவைத்துள்ளார். இப்படி ஐபிஎல் தொடரில் அவர் காட்டிய அதிரடியும் சரவெடியுமே அவரை அடுத்தநிலைக்கு கொண்டு சென்றுள்ளது.
ஆம், இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் ஆசிய தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம்பெற்றுள்ளார். இதன்மூலம் இந்திய அணியில் இடம்பெற்ற மிக இளம் வயது வீரர் என்ற வரலாற்றுப் பெருமையையும் அவர் பெற்றுள்ளார். தவிர, பிசிசிஐ அவருக்கு வேறு சில சலுகைகளையும் வழங்கியுள்ளது. இந்த நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன்பு, வைபவ் தன் பதற்றத்தைத் தணிக்க என்ன செய்வார் என லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கோ சுட்டிக் காட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், “இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி, ஒரு போட்டிக்கு முன்பு அமைதியாகவும் கவனமாகவும் இருக்க, அவர் தனது கைப்பேசியில் தனக்குப் பிடித்தமான சோட்டா பீம் கார்ட்டூன்களைப் பார்த்து மகிழ்கிறார். அவர் தனது குழந்தைப் பருவத்தை இன்னும் பற்றிக்கொண்டிருக்கிறார்” என அவர் பதிவிட்டுள்ளார். அவருடைய இந்தப் பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில், பயனகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.