harry brook england cricket
கிரிக்கெட்

42 பந்தில் சதம்.. இலங்கையை பந்தாடிய ஹாரி ப்ரூக்.. 254 ரன்கள் குவித்து ENG வெற்றி!

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 254 ரன்கள் குவித்து மிரட்டியது இங்கிலாந்து அணி.

Rishan Vengai

சவுத்தாம்டனில் நடந்த முதல் டி20யில் இங்கிலாந்து, இலங்கை பந்துவீச்சை சிதறடித்து 20 ஓவரில் 254 ரன்கள் குவித்தது. ஜோஸ் பட்லர் 80 ரன்கள், கேப்டன் ஹாரி ப்ரூக் 42 பந்தில் சதம் உட்பட 49 பந்தில் 114 ரன்கள் குவித்தார். பதிலுக்கு இலங்கை 19 ஓவரில் 135 ரன்களுக்கு ஆல்அவுட்; சோனி பேக்கர் 3 விக்கெட். தொடரில் இங்கிலாந்து 1-0 முன்னிலை.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி சவுத்தாம்டனில் நேற்று நடைபெற்றது.

பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி இலங்கை பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சிதறடித்தது. தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டிய ஜோஸ் பட்லர் 8 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என விளாசி 80 ரன்கள் அடித்து அவுட்டாகினார். ஆனால் மறுமுனையில் காட்டடி பேட்டிங்கை வெளிப்படுத்திய இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக் 10 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என துவம்சம் செய்து 42 பந்தில் சதமடித்ததோடு 49 பந்தில் 114 ரன்கள் குவித்தார். ஹாரி ப்ரூக்கின் ருத்ரதாண்டவ பேட்டிங்கால் இங்கிலாந்து அணி 20 ஓவரில் 254 ரன்களை குவித்தது.

255 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 19 ஓவரில் வெறும் 135 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. அதிகபட்சமாக ஆல்ரவுண்டர் துனித் வல்லேலகே 34 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து அணியில் இளம் வேகப்பந்துவீச்சாளர் சோனி பேக்கர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து.