Harmanpreet Kaur Honoured with Wax Statue at Jaipur's Nahargarh Museum PTI
கிரிக்கெட்

ஹர்மன்ப்ரீத் கவுருக்கு மெழுகுச் சிலை! உலகக் கோப்பை வெற்றிக்குக் கிடைத்த கௌரவம்!

2025 ஒருநாள் உலகக் கோப்பையை வென்று இந்திய மகளிர் அணியின் வெற்றியைப் போற்றும் வகையில், இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு மெழுகுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

PT WEB

2025 ஒருநாள் உலகக் கோப்பையை வென்று இந்திய மகளிர் அணி வரலாறு படைத்தது. இந்த வெற்றியைப் போற்றும் வகையில், இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு (Harmanpreet Kaur) மெழுகுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு, ஜெய்ப்பூரில் உள்ள நஹர்கர் வரலாற்று அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை தனது மெழுகுச் சிலையைத் திறந்து பார்வையிட்ட அவர், இது தனது வாழ்க்கையின் மிகவும் பெருமையான தருணம் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூரில் உள்ள நஹர்கர் வரலாற்று அருங்காட்சியகத்தால் உருவாக்கப்பட்ட இந்த மெழுகுச் சிலையை வடிவமைத்த கலைஞர்கள் மற்றும் குழுவினருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

Harmanpreet Kaur Wax Statue Unveiled at Jaipur Museum

ஹர்மன்ப்ரீத் கவுரின் மெழுகுச் சிலை விரைவில் பொதுமக்களின் பார்வைக்காகக் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

இந்திய மகளிர் கிரிக்கெட்டில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியவர்களில் ஹர்மன்ப்ரீத் கவுரும் ஒருவர். கடந்த 2017-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 171 ரன்கள் குவித்து, இந்திய அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார். அவரது அதிரடி ஆட்டம் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, 2025 நவம்பரில் அவரது தலைமையிலான இந்திய அணி, இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதன்முறையாக மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தது. இதன் மூலம் பல ஆண்டுகளாக இந்திய அணி எதிர்பார்த்த உலகக் கோப்பைக் கனவு நனவானது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, ஜெய்ப்பூர் மெழுகுச் சிலை அருங்காட்சியகம் அவருக்குச் சிலை அமைக்கத் திட்டமிட்டிருந்தது. தற்போது அந்தத் திட்டம் நிறைவேறியுள்ள நிலையில், ஹர்மன்ப்ரீத் கவுரின் மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் இடம்பெறவுள்ளது.

Harmanpreet Kaur Wax Statue Unveiled at Jaipur Museum

சுமார் 10 ஆண்டுகள் இந்திய அணியை வழிநடத்திய ஹர்மன்ப்ரீத் கவுர், 2026 அக்டோபர் மாதம் அனைத்து வகையான போட்டிகளுக்குமான கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக ஸ்மிருதி மந்தனா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். இருப்பினும், தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவேன் என்று ஹர்மன்ப்ரீத் தெரிவித்துள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கும், உலகக் கோப்பை வெற்றிக்கும் முக்கியப் பங்காற்றிய ஹர்மன்ப்ரீத் கவுரின் சாதனையைப் போற்றும் வகையில், தற்போது அவருக்கு மெழுகுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.