இந்திய மகளிர் கிரிக்கெட்டானது மிதாலி ராஜ், அஞ்சும் சோப்ரா, நீது டேவிட், ஜுலன் கோஸ்வாமி, ஸ்மிரிதி மந்தனா போன்ற தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களை கொடுத்துள்ளது. தனிப்பட்ட சாதனைகளால் சிக்ரம் தொட்ட இந்திய வீராங்கனைகளால் ஒருமுறை கூட உலகக்கோப்பை என்ற மகடத்தை சூடிக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொருமுறையும் ஏமாற்றமே மிஞ்சியது.
2005 ஒருநாள் உலகக்கோப்பையில் மிதாலி ராஜ் தலைமையில் இறுதிப்போட்டிவரை முன்னேறிய இந்திய அணி, இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மகளிர் அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. அதற்குபிறகு 2017-ம் ஆண்டு அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த பிறகு கோப்பை இந்தியாவிற்கு தான் என்ற சூழல் உருவான போது, இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தோல்வியை கண்டது மிதாலி ராஜ் தலைமையிலான இந்தியா.
இதற்கு இடையில் 2009-ம் ஆண்டு அரையிறுதிவரை முன்னேறிய இந்தியா 3வது அணியாக முடிந்தது. இதுவரை கோப்பையே வென்றதில்லை என்ற சோகம் இன்னும் இந்திய மகளிர் அணிக்கு தொடர்கதையாக இருந்துவருகிறது.
இந்நிலையில் இம்முறை சொந்த மண்ணான இந்தியாவிற்கு உலகக்கோப்பை தொடர் திரும்பியிருக்கும் நிலையில், ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்தியா கோப்பை வெல்லும் முனைப்பில் உள்ளது. பக்கத்துணையாக ஸ்மிரிதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் போன்ற வீராங்கனைகள் உள்ளனர்.
2025 மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையானது செம்படம்பர் 30 தேதி முதல் நவம்பர் 2-ம் தேதிவரை, இந்தியா மற்றும் இலங்கை மைதானங்களில் நடக்கவிருக்கிறது. விசாகப்பட்டினம், இந்தூர், குவஹாத்தி, பெங்களூரு மற்றும் கொழும்பு முதலிய 5 நகரங்களில் 31 போட்டிகள் நடத்தப்படவிருக்கின்றன. கோப்பைக்காக ‘இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் வங்கதேசம்’ முதலிய 8 அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன.
இன்று ஐசிசி தலைவர் ஜெய் ஷா தலைமையில் 50 நாட்கள் சிறப்பு கவுன்ட் டவுன் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஜெய் ஷா உடன் யுவராஜ் சிங், மிதாலி ராஜ், தேவஜித் சைகியா, ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், சஞ்சோக் குப்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு பிறகு பேசிய இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், சொந்தமண்ணில் கோப்பையை வெல்வது குறித்து பேசினார். அப்போது பேசுகையில், “சொந்த நாட்டு மக்களுக்கு முன்னால் விளையாடுவது எப்போதுமே சிறப்பு வாய்ந்தது. இந்த முறை நாங்கள் எங்கள் 100 சதவீதத்தையும் வழங்கி, அனைத்து இந்திய ரசிகர்களும் காத்துக்கொண்டிருக்கும் தடையை நிச்சயம் உடைப்போம்” என்று கூறினார்.
மேலும் 2017 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் 171 ரன்கள் குவித்து அசத்திய ஹர்மன்ப்ரீத், இறுதிப்போட்டியில் அடைந்த துயரத்தையும் நினைவு கூர்ந்தார். அதுகுறித்து பேசுகையில், “அந்த ஆட்டம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது - அது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதன் பிறகு எனக்குள் தனிப்பட்ட முறையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. அந்த நேரத்தில், என்ன நடந்தது என்பதை நான் முழுமையாக உணரவில்லை. ஆனால் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பிறகு நாங்கள் இந்தியா திரும்பியபோது, எங்களுக்காகக் காத்திருந்து ஆரவாரம் செய்த மக்களின் எண்ணிக்கை உண்மையிலேயே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது” என்று கூறினார்.