Hardik Pandya - Virat Kohli Twitter
கிரிக்கெட்

“மிடில் ஆர்டர் வீரராக என்ன செய்யவேண்டும் என கோலி கூறினார்”- ODI தொடரை வென்ற பின் ஹர்திக் நன்றி!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியை 200 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 2-1 என கைப்பற்றியது.

Rishan Vengai

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடிவருகிறது. டெஸ்ட் தொடரை 1- 0 என்ற கணக்கில் இந்தியா வென்றதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. முதல் ODI போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதை தொடர்ந்து, 2வது ஒருநாள் போட்டியில் ரோகித் மற்றும் கோலி இருவருக்கும் ஓய்வளிக்கப்பட்டு கேப்டன் பொறுப்பு ஹர்திக் பாண்டியாவிற்கு வழங்கப்பட்டது.

மூத்த வீரர்கள் இருவரும் இல்லாமல் களமிறங்கிய இந்திய அணியால் 2வது ஒருநாள் போட்டியில் வெறும் 181 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஓப்பனர்களான இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் இருவரும் அதிரடியாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 90 ரன்களை சேர்த்த போதும் இந்திய அணியால் பெரிய ரன்களை ஸ்கோர் போர்டில் சேர்க்க முடியவில்லை. முடிவில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்றது.

3வது போட்டியிலும் கோலி, ரோகித் இல்லாமல் களமிறங்கிய இந்தியா!

இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக மூத்தவீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இளம் இந்திய அணி படுதோல்வியடைந்தது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. இந்நிலையில் 3வது போட்டிக்கு ரோகித் மற்றும் கோலி திரும்பிவிடுவார்கள் என்று எதிர்ப்பார்த்த நிலையில், மீண்டும் இந்திய அணி கோலி, ரோகித் இல்லாமலேயே களம் கண்டது. தொடரை முடிவு செய்யும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

Ishan Kishan - Gill

2-வது போட்டியை போலவே இருக்குமென நினைத்த விண்டீஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான கில் மற்றும் இஷான் கிஷன் இருவரும் பதிலடி கொடுத்தனர். ஒருபுறம் கில் நிலைத்து நின்று விளையாட, இஷான் கிஷனோ சிக்சர் பவுண்டரிகளாக பறக்கவிட்டு ரன்களை வேகமாக எடுத்துவந்தார். இரண்டு ஓபனர்களும் அரைசதம் அடித்து அசத்த, இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்தது. 8 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என வெளுத்து வாங்கிய கிஷன் 77 ரன்கள் இருந்த போது ஸ்டம்ப் அவுட் மூலம் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ருதுராஜ் 8 ரன்களில் வெளியேற, அவரை தொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எதிர்கொண்ட பந்தை எல்லாம் சிக்சர்களாக பறக்கவிட்ட சஞ்சு, 51 ரன்கள் அடித்து வெளியேறினார். சஞ்சுவை தொடர்ந்து களத்திற்கு வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா உடன் கைக்கோர்த்த சுப்மன் கில் அதிரடியை தொடர்ந்தார்.

Hardik Pandya

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கில் சதமடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் 85 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். இறுதியாக ஜோடி சேர்ந்த சூர்யகுமார் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் சிக்சர், பவுண்டரிகள் என அட்டாக்கிங் கிரிக்கெட் ஆட இந்திய அணி 300 ரன்களை தொட்டது. சூர்யா 2 சிக்சர்களை அடிக்க, ஹர்திக் பாண்டியாவோ 5 சிக்சர்களை பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டினார். 4 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என விளாசி 52 பந்துகளில் 70 ரன்களை கேப்டன் ஹர்திக் பாண்டியா அடிக்க 50 ஓவர் முடிவில் இந்திய அணி 351 ரன்களை எட்டியது.

Mukesh Kumar

352 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய விண்டீஸ் அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் ஓவரிலேயே பிரண்டன் கிங்கை வெளியேற்றிய முகேஷ் குமார் கலக்கினார். அடுத்தடுத்த ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை எழவே விடாமல் அடிக்குமேல் அடிகொடுத்த முகேஷ் 17 ரன்களுக்குள்ளாகவே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பின்னர் மிடில் ஆர்டர் வீரர்களை குல்தீப் யாதவ் மற்றும் ஷர்துல் தாக்கூர் பார்த்துக்கொள்ள, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க... விண்டீஸ் வெறும் 151 ரன்னிலேயே சுருண்டது. இந்திய அணியில் அபாரமாக பந்துவீசிய ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகள், முகேஷ் குமார் 3 விக்கெட்டுகள், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகள் என கைப்பற்றி அசத்தினர். முடிவில் 200 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்து தொடரை கைப்பற்றியது இந்திய அணி.

“எப்படி செயல்பட வேண்டுமென விராட் கோலி கூறினார்!” - ஹர்திக் பாண்டியா

டெஸ்ட் தொடரை 1 - 0 என வென்றதோடு, ஒருநாள் தொடரை 2-1 என்று வென்றதற்கு பிறகு பேசிய இந்திய கேப்டன் ஹர்திக்பாண்டியா, விராட் கோலிக்கு நன்றி கூறினார். போட்டிக்கு பிறகு ஹர்திக் பேசுகையில், “ருதுராஜ் ஹெய்க்வாட் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால் கோலி, ரோகித்திற்கு ஓய்வளிக்கப்படுவது அவசியம் என்று நினைக்கிறேன். ஒரு கேப்டனாக இதுபோன்ற போட்டிகளை தான் விரும்புகிறேன். 351 ரன்கள் என்பது மிகப்பெரிய Total. அது எப்போதும் எதிரணிக்கு அழுத்தத்தை கொடுக்கக்கூடியது. அதிக இலக்கை எதிர்கொண்டு விளையாடும்போது எதிரணி வீரர்கள் அடித்து ஆட முயற்சித்து தவறுகளை செய்து விக்கெட்டுகளை பறிகொடுப்பார்கள்.

போட்டிக்கு முன்னதாக விராட் கோலியோடு உரையாடினேன். அவர் 50 ஓவர் கிரிக்கெட்டை எப்படி முழுமையாக பயன்படுத்தவேண்டும் என கூறினார். போட்டியின் இடையில் நிலைத்து நின்று விளையாடும்படி அறிவுறுத்தினார். உண்மையில் அந்த அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு கோலிக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.