Rohit Sharma - Hardik Pandya
Rohit Sharma - Hardik Pandya IPL
கிரிக்கெட்

ரோகித்தின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த MI! புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிப்பு!

Rishan Vengai

2024 ஐபிஎல் தொடருக்கான ஏலம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே வீரர்களின் வர்த்தகமானது சூடுபிடிக்கத்தொடங்கியது. ஒவ்வொரு அணிகளும் அவர்களுக்கு தேவையான வீரர்களுக்கு போட்டிப்போட்ட நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும் அடுத்த கேப்டனுக்கான போட்டியில் இறங்கியது. யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ரூ15 கோடி விலை கொடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியாவை வாங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, ஒட்டுமொத்த ஐபிஎல் அணிகளையும் ஆட்டம் காண வைத்தது.

Hardik Pandya

ஆனால் "எதற்காக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை இவ்வளவு விலை கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி வாங்க வேண்டும்? அப்போ தற்போது கேப்டனாக இருந்துவரும் ரோகித்தின் நிலை என்ன? ஒருவேளை 2025 ஐபிஎல் தொடருக்கான கேப்டனுக்காக ஹர்திக்கை கொண்டுவந்துள்ளதா? ரோகித்திற்கு இதுதான் கேப்டனாக கடைசி ஐபிஎல் தொடரா?" என பல்வேறு குழப்பம் ரசிகர்களிடையே ஏற்படுத்தியது.

ஹர்திக் வருகையை ரோகித் சர்மா ரசிகர்கள் வரவேற்றாலும், ரோகித் சர்மாவே கேப்டனாக கடைசி ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்ற ஆசையில் இருந்தனர். ஆனால் ரோகித் ரசிகர்களின் அனைவரது ஆசையையும் நிராசையாக்கியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

MI-ன் கேப்டனாக ஹர்திக் செயல்படுவார்! - தலைமை பயிற்சியாளர் ஜெயவர்த்தனே

நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மஹிலா ஜெயவர்த்தனே, எதிர்வரும் 2024 ஐபிஎல் தொடரில் ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மாவிற்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவே கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவித்துள்ளார். கேப்டன்சிப் மாற்றம் குறித்து பேசியிருக்கும் அவர், “இது மும்பை இந்தியன்ஸ் அணியின் பாரம்பரியத்தை கட்டியெழுப்புதல் மற்றும் எதிர்காலத்திற்கு தயாராக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்ட முடிவாகும். மும்பை இந்தியன்ஸ் அணி இதற்கு முன் சச்சின் டெண்டுல்கரின் விதிவிலக்கான தலைமைத்துவத்தை பெற்றிருந்தது. பின்னர் அது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஹர்பஜன் சிங், ரிக்கி பாண்டிங் என மாறி பின்னர் ரோகித் சர்மாவின் கைகளுக்கு சென்றது. இந்நிலையில்தான், தற்போது ரோகித் சர்மாவிற்கு பிறகு ​​எதிர்காலத்திற்கான MI அணியை வலுப்படுத்துவதில் எப்போதும் ஒரு கண் உள்ளது. இந்த தத்துவத்தின் அடிப்படையில் எதிர்வரும் 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்பார்” என்று கூறியுள்ளார்.

Rohit Sharma

மேலும் ரோகித் சர்மாவின் கேப்டன்சியை பாராட்டி பேசியிருக்கும் ஜெயவர்த்தனே, ”ரோகித் சர்மாவின் விதிவிலக்கான தலைமை பொறுப்பிற்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 2013 முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக அவரது செயல்பாடு சாதாரணமானது அல்ல. கேப்டனாக அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இணையற்ற வெற்றியைத் தந்தது மட்டுமல்லாமல், ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக அவரது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார். அவரது வழிகாட்டுதலின் கீழ், MI மிகவும் வெற்றிகரமான மற்றும் விரும்பப்படும் அணிகளில் ஒன்றாக மாறியது. இந்நிலையில் MI அணியை மேலும் வலுப்படுத்த அவரது வழிகாட்டுதல் மற்றும் அனுபவத்தை களத்திலும் வெளியிலும் எதிர்பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார்.

Hardik Pandya

மேலும், “MI-ன் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நாங்கள் வரவேற்கிறோம், அவருக்கு நல்வாழ்த்துக்கள்" என கூறியிருப்பதாக க்றிக்பஸ் செய்திவெளியிட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த முடிவு ரோகித் சர்மாவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. மேலும் ரோகித் சர்மா எதிர்வரும் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தற்போது இதை உறுதிசெய்திருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு நன்றி பதிவையும் பதிவிட்டுள்ளது.