ஹர்திக் பாண்டியா எக்ஸ் தளம்
கிரிக்கெட்

IND Vs SA T20 | கதகளி ஆடிய ஹர்திக் பாண்டியா.. ஒரே போட்டியில் இவ்வளவு சாதனையா?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஹர்திகா பாண்டியா 16 பந்துகளில் அரைசதம் அடித்து அபிஷேக் சர்மாவின் சாதனையை முறியடித்தார்.

Prakash J

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஹர்திகா பாண்டியா 16 பந்துகளில் அரைசதம் அடித்து அபிஷேக் சர்மாவின் சாதனையை முறியடித்தார்.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி, அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பே செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 42 பந்துகளில் 10 பவுண்டரி, 1 சிக்ஸ்ருடன் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா 25 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ஸருடன் 63 குவித்தார். இதனையடுத்து 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக் (65) மற்றும் பிரெவிஸ் (31) ஆகியோரைத் தவிர பிற வீரர்கள் சோபிக்கத் தவறினர். இதையடுத்து அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, தொடரையும் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டன. அதுகுறித்து பார்க்கலாம்.

hardik pandya
  • கடைசிப் போட்டியில், தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை வெளுத்து வாங்கிய ஹர்திக் பாண்ட்யா வெறும் 16 பந்துகளில் அரைசதம் விளாசினார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசிய 2-வது இந்திய வீரர் என்ற அபிஷேக் சர்மாவின் (17 பந்துகள்) சாதனையை அவர் முறியடித்தார். இந்தப் பட்டியலில் யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதம் அடித்ததே இதுவரை சாதனையாக உள்ளது.

  • டி20 சர்வதேசப் போட்டிகளில் 50+ ரன்கள் மற்றும் 1+ விக்கெட்டுகளை இருமுறைக்கு மேல் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில், ஹர்திக் பாண்டியா முதல் இடத்தில் உள்ளார். இத்தகைய சாதனையை அவர் 4 முறை நிகழ்த்தியுள்ளார். 2வது இடத்தில் யுவராஜ் சிங் உள்ளார். அவர் 3 முறை இதைச் செய்துள்ளார்.

  • இந்தியா - தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் திலக் வர்மா முதலிடம் பிடித்தார். அவர் 10 இன்னிங்ஸ்களில் 496 ரன்கள் எடுத்துள்ளார். 2வது இடத்தில் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 429 ரன்கள் உள்ளார். 3வது இடத்தில் தற்போதைய கேப்டன் சூர்யகுமார் (406) உள்ளார்.

  • டி20 போட்டிகளில், முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த பட்டியலில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. அது, 34 முறை இத்தகைய ரன்களை எடுத்துள்ளது.

  • இந்தியா - தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான டி20 போட்டிகளில், இந்தியா 3வது முறையாக அதிக ரன்களை எடுத்துள்ளது. முன்னதாக, 2024 ஆம் ஆண்டு 283 ரன்களையும், 2022ஆம் ஆண்டு 237 ரன்களையும் எடுத்த இந்திய அணி, நேற்றைய போட்டியில் 231 ரன்கள் எடுத்தது.

  • 2025ஆம் ஆண்டில் டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் வருண் சக்கரவர்த்தி, 36 விக்கெட்களுடன் பாகிஸ்தான் வீரர் முகமது நவாஸுடன் முதல் இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அதேபோல், டி20 சர்வதேசப் போட்டிகளில் ஒரு காலண்டர் ஆண்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவரும் வருண் சக்கரவர்த்தியே ஆவார்.

  • டி20 போட்டியில், ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகபட்ச வெற்றிகளை வெற்றிபெற்றுள்ளது. அது, 22 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள நிலையில், இரண்டாவது இடத்தை இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்காவுடன் பகிர்ந்துகொள்கிறது. இந்த இரு அணிகளுக்கு எதிராக தலா 21 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.