Hardik Pandya
Hardik Pandya Twitter
கிரிக்கெட்

“அடிப்படை தேவைகளையாவது வெஸ்ட் இண்டீஸ் செய்து தரவேண்டும்”-வசதியின்மை குறித்து குற்றஞ்சாட்டிய ஹர்திக்!

Rishan Vengai

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1- 0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்திய அணி வென்று அசத்தியுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்குகிறது.

Ishan Kishan - Gill

நேற்று நடைபெற்ற இறுதி மற்றும் 3-வது ஒருநாள் போட்டியில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா இந்திய அணி 351 ரன்களை எட்டுவதில் முக்கிய பங்கு வகித்தார். 4 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய பாண்டியா 52 பந்துகளில் 70 ரன்கள் குவித்து அசத்தினார். அவருடன் மற்ற இந்திய பேட்டர்களான இஷான் கிஷன் 77 ரன்கள், சுப்மன் கில் 85 ரன்கள், சஞ்சு சாம்சன் 51 ரன்கள் என அரைசதங்கள் அடித்து இந்தியாவை 200 ரன்கள் வித்தியாசத்திலான வெற்றிக்கு அழைத்துச்சென்றனர்.

Hardik Pandya

பந்துவீச்சை பொறுத்தவரையில் சிறப்பாக செயல்பட்ட ஷர்துல் தாக்கூர் 37 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். போட்டி முடிந்ததற்கு பிறகு பேசிய இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா, அடிப்படை வசதிகளை கூட ஏற்படுத்தி தரவில்லை என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நிர்வாகத்தை குற்றஞ்சாட்டி பேசினார்.

“நாங்கள் ஆடம்பரமான சூழல் கேட்கவில்லை.. அடிப்படை தேவைகளை தான் கேட்கிறோம்..”- ஹர்திக்

போட்டி முடிந்து வீரர்களுக்கான அசௌகரியம் குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, “நாங்கள் விளையாடிய சிறந்த மைதானங்களில் இதுவும் ஒன்று. அடுத்த முறை நாங்கள் வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் வரும்போது தற்போது இருக்கும் சூழல் மாற்றமடைந்து நன்றாக இருக்கும் என நம்புகிறோம். பயணம் செய்வது முதல் பல்வேறு விஷயங்களை நிர்வகிப்பது வரை நிறைய அசௌகரியங்கள் இம்முறை இருந்தன. கடந்த ஆண்டு பயணத்தின் போதும் இதுபோன்ற பிரச்னைகள் இருந்தது. இதை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நிர்வாகம் கவனத்தில் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

Hardik Pandya

நாங்கள் மட்டுமல்ல எந்த ஒரு அணி பயணம் செய்யும் போதும் அவர்களுக்கான அடிப்படை தேவைகளுக்கான சூழலாவது இருக்க வேண்டும். நாங்கள் ஆடம்பரத்தைக் கேட்கவில்லை, சில அடிப்படைத் தேவைகள் தான் கேட்கிறோம். இதை தவிர்த்து, இங்கு வந்து சில நல்ல கிரிக்கெட் போட்டிகளை விளையாடுவதை நாங்கள் எப்போதும் விரும்புகிறோம்” என்று கூறினார்.

“அழுத்தமான போட்டிகளில் விளையாடாமல் நீங்கள் ஹீரோவாக முடியாது!”

போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர்களை பாராட்டி பேசிய ஹர்திக், “இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் அவசியமானது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஒரு கேப்டனாக இதுபோன்ற போட்டியை தான் விரும்புகிறேன். எங்களுக்கான அனைத்து விஷயங்களும் சரியான நேர்கோட்டில் சென்றது. ஒரு பெரிய சர்வதேச போட்டியை விட அழுத்தம் நிறைந்த போட்டியாகவே இது இருந்தது.

ஒருவேளை இதில் நாங்கள் தோற்றுவிட்டால் அது எங்களுக்கு எவ்வளவு பெரிய ஏமாற்றத்தையும், சறுக்கலையும் தரும் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். இளம் வீரர்கள் அனைவரும் இதுபோலான அழுத்தம் நிறைந்த போட்டிகளில் விளையாட வேண்டும். இப்படியான போட்டிகளில் விளையாடாமல் நீங்கள் ஹீரோவாக மாற முடியாது” என்று பேசியுள்ளார்.