ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடிவருகிறது.
பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நடப்பு WTC சாம்பியனான ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.
இந்நிலையில், இந்திய அணி குறித்து பேசியிருக்கும் ஹர்பஜன் சிங் ஆஸ்திரேலியாவை அவர்களின் பலமாக கருதப்பட்ட பெர்த்தில் வைத்தே தோற்கடித்தது இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்ததாக வெளிப்படுத்தினார்.
இந்தியா-ஆஸ்திரேலியா குறித்து பேசிய ஹர்பஜன் சிங், “இந்திய அணி அடிலய்டில் நடைபெறவிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றிபெற்றால் நிச்சயம் WTC இறுதிப்போட்டிக்கு செல்லும் என்று நினைக்கிறேன். ஆனால் இறுதிப்போட்டிக்கு செல்வது முக்கியமல்ல அங்குசென்று சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும்” என்று ஹர்பஜன் கூறினார்.
மேலும், ஆஸ்திரேலியா அணி பெர்த் மைதானத்தை அவர்களுடைய கோட்டையாக கருதுகிறார்கள். அவர்களை அங்கு வைத்தே வீழ்த்தியது இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியா நிச்சயம் 4-1 என பார்டர் கவாஸ்கர் தொடரை வெல்லும் என்று ஹர்பஜன் பிடிஐ உடன் கூறியுள்ளார்.