2024 டி20 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்கா வெற்றிபெற 30 பந்துகளுக்கு 30 ரன்கள் மட்டுமே தேவை என்ற இடத்திலிருந்து, இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச்சென்றதில் பெரிய பங்கு பும்ராவின் திறமையையே சேரும்.
அதுமட்டுமில்லாமல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியா vs இந்தியா என்றில்லாமல், ஆஸ்திரேலியா vs பும்ரா என்ற விதத்தில் தான் போட்டி அனைத்தும் இருந்தது. தனியாளாக ஆஸ்திரேலியா அணிக்கு கடும் சவால்கள் கொடுத்தார் ஜஸ்பிரித் பும்ரா.
கடைசி டெஸ்ட் போட்டியில் பும்ரா காயத்தால் விளையாட முடியாமல் போனது, ஆஸ்திரேலியா தொடரை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தது. அதை டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா போன்ற வீரர்களுமே ஒப்புக்கொண்டனர்.
இந்நிலையில் காயத்தால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட முடியாமல் போன பும்ரா, ஐபிஎல்லில் சில போட்டிகளை தவறவிடும் நிலையில் உள்ளார்.
இந்தசூழலில் பும்ராவிற்கு இருக்கும் வேலைப்பளு மற்றும் மன அழுத்தத்தை மாற்றுவதற்கு க்ளென் மெக்ராத் சில வார்த்தைகளை பகிர்ந்துள்ளார்.
பும்ரா குறித்து சமீபத்தில் பேசியிருக்கும் கிளென் மெக்ராத், “மற்ற பந்து வீச்சாளர்களை விட பும்ரா அவருடைய பவுலிங் ஆக்ஷனால் தனது உடலில் அதிக அழுத்தத்தை செலுத்துகிறார். அதை நிர்வகிப்பதற்கான வழிகளை அவர் கண்டுபிடித்துள்ளார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக எல்லா நேரங்களிலும் அவரால் அது முடியாது.
அவர் ஏற்கனவே காயத்திலிருந்து மீண்டுவந்துள்ளார். அதனால் அவர் உடலை தயார்செய்து மீட்டு எடுத்துவருவதற்கான நேரம், ஜிம்மில் செலவிடும் நேரம் பற்றி யாரையும் விட அவருக்குதான் நன்றாகத் தெரியும். முன்பு போல் அவர் இளமையாக இருக்கப்போவதில்லை என்பதால், இனி அவர் என்ன செய்யவேண்டும் என்பதில் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும்.
பும்ரா மைதானத்திற்கு வெளியே இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். வேகப்பந்து வீச்சாளராக இருப்பது கார் ஓட்டுவதை போன்றது. நீங்கள் எரிபொருள் நிரப்பவில்லை என்றால், விரைவில் உங்களுடைய எரிபொருள் தீர்ந்துவிடும். ஜஸ்பிரித் பும்ராவின் எரிபொருள் டேங்க் பெரிதாக இருக்கவேண்டும்.
ஏனென்றால் பும்ராவின் எரிபொருள் டேங்கை விட என்னுடைய எரிபொருள் டேங்க் பெரியதாக இருந்தது. அதனால் தான் என்னால் சிறப்பாக செயல்பட முடிந்தது. ஏனென்றால் நான் பும்ராவை போல வேகமாக பந்துவீசவில்லை. அப்படி வேகம் இல்லாதபோது நான் பேட்ஸ்மேன்களை பீட்செய்யும் எரிபொருளை என் டேங்கில் நிரப்பிகொண்டே இருந்தேன்.
பும்ரா போன்ற வீரர்களுக்கும் தங்களை சிறந்த முறையில் எவ்வாறு செயல்படுத்தவேண்டும் என்பது அவர்களுக்கே தெரியும். ஏனென்றால் இந்தியா நெருக்கடியில் இருந்தால், அவர்களுக்கு பும்ரா தேவை” என்று பேசியுள்ளார்.