Glenn McGrath about india web
கிரிக்கெட்

”அவர்களுக்கு எந்த சாதகமான சூழலும் இல்லை..” இந்தியாவை பாராட்டிய கிளென் மெக்ராத்!

2025 சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவிற்கு எந்த சாதகமான சூழலும் இல்லை என்று கிளென் மெக்ராத் கூறியுள்ளார்.

Rishan Vengai

2025 சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர்கள், மிடில் ஆர்டர் வீரர்கள், லோயர் ஆர்டர் மற்றும் பினிசிங் வீரர்கள் தொடங்கி வேகப்பந்துவீச்சாளர்கள், ஸ்பின்னர்கள் மற்றும் விக்கெட் கீப்பர் என அனைத்து வீரர்களும் தலைசிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விளையாடிய 11 வீரர்களும் மேட்ச் வின்னர்களாக இருந்ததால், மற்ற எந்த அணியாலும் இந்தியாவை வீழ்த்த முடியவில்லை.

தொடர் முழுவதும் தோல்வியே அடையாமல் கோப்பை வென்ற இந்திய அணி, 3வது முறையாக சாம்பியன்ஸ் டிராபி வென்று சாதனை படைத்தது.

2025 சாம்பியன்ஸ் டிராபி

இந்த நிலையில், 2025 சாம்பியன்ஸ் டிராபியில் ஒரே மைதானத்தில் இந்தியா விளையாடியதால் அவர்களுக்கு அது சாதகமாக அமைந்தது என்ற குற்றச்சாட்டுகள் நிறைய வைக்கப்பட்டன. ஆனால் இந்தியாவிற்கு எந்த சாதகமான சூழலும் இருந்ததாக நான் நினைக்கவில்லை என்று ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு ஜாம்பவான் கிளென் மெக்ராத் மறுத்து பேசியுள்ளார்.

இந்தியாவிற்கு எப்படி ஆடவேண்டும் என்பது தெரியும்..

இந்திய அணி குறித்து பேசியிருக்கும் கிளென் மெக்ராத், “இனிமேலும் பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா விளையாடாது. எனவே அவர்களது போட்டிகளை துபாயில் விளையாடுவது மட்டுமே ஒரே வழி. அங்கே சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் விளையாடிய இந்தியாவை நீங்கள் பாராட்ட வேண்டும். சுழலுக்கு சாதகமான மைதானத்தில் எப்படி விளையாடுவது என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்களுக்கு சாதகம் இருந்ததாக எனக்கு தெரியவில்லை.

ஐ.பி.எல். மற்றும் டி20 போட்டிகளை தொடர்ந்து விளையாடுவதால் அதன் தாக்கம் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு நேர்மறையான விஷயத்தைக் கொண்டுவந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி

இந்தியா தங்களது விளையாட்டை நன்றாக தெரிந்து தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றுவது எவ்வளவு முக்கியமோ, அதேபோல ஒருநாள் போட்டிகளை காப்பாற்றுவதும் முக்கியம். இந்தியா ஒருநாள் போட்டிகளை நன்றாக தெரிந்து வைத்துள்ளனர். அப்படிப்பட்ட இந்திய அணியை தாண்டி சிறப்பாக விளையாடி வெல்வது மற்ற அணிகளுக்கு சவாலாக இருக்கும். இந்தியாவுக்கு சவால் விடுக்கப்படுவதை நான் விரும்புகிறேன். ஆனால் இந்தியா தரமான அணி" என்று கூறியுள்ளார்.