சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த பிறகு, ஆஸ்திரேலியாவிற்கு சென்ற இந்திய அணி பார்டர் கவாஸ்கர் தொடரிலும் தோற்று WTC இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை பறிகொடுத்தது.
இரண்டு அடுத்தடுத்த தோல்விகளுக்கு பிறகு இங்கிலாந்துக்கு சென்றிருக்கும் இந்திய அணி வெற்றிப்பாதைக்கு திரும்ப முடியாமல் போராடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 சதங்களை அடித்தபோதும் தோற்றது ஏமாற்றத்தை கொடுத்தது.
இந்நிலையில், இரண்டாவது போட்டியில் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் களம்கண்டுள்ளது இந்திய அணி.
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 87 ரன்கள் அடித்து வெளியேறினார்.
மறுமுனையில் கேஎல் ராகுல் 2 ரன்கள், கருண் நாயர் 31 ரன்கள், ரிஷப் பண்ட் 25 ரன்களில் அவுட்டாகி வெளியேற அழுத்தம் களத்தில் இருந்த சுப்மன் கில்லின் தோள்களில் சேர்ந்தது.
பொறுப்பை தனதாக்கிக் கொண்ட சுப்மன் கில், ஜடேஜா உடன் கைக்கோர்த்து 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட இந்தியா 400 ரன்களை கடந்தது. சதமடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட ஜடேஜா 89 ரன்னில் வெளியேற, 21 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் விளாசிய சுப்மன் கில் இரட்டை சதமடித்து அசத்தினார்.
இதன் மூலம் SENA நாடுகளில் இரட்டை சதமடித்த முதல் ஆசிய கேப்டன் என்ற வரலாற்று சாதனையை படைத்தார் சுப்மன் கில். அதுமட்டுமில்லாமல் இங்கிலாந்து மண்ணில் இரட்டை சதமடித்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையையும் படைத்து அசத்தியுள்ளார். அதேபோல விராட் கோலிக்கு பிறகு வெளிநாட்டு மண்ணில் சதமடித்த இரண்டாவது இந்திய கேப்டன் என்ற சாதனையையும் படைத்துள்ளார். 23 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை சதமடிக்கும் இந்திய வீரராகும் கில் சாதனை படைத்தார்.
இந்திய அணி 133 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 537 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. கில் 251 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.