Ashwin
Ashwin Twitter
கிரிக்கெட்

“அந்த இடத்தில் அஸ்வினை தவிர வேறு யாரும் கீ ப்ளேயராக இருக்க முடியாது” - கவாஸ்கர் நம்பிக்கை

Rishan Vengai

2011 மற்றும் 2015 என இரண்டு முறை ஒருநாள் உலகக்கோப்பை தொடர்களில் விளையாடியிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், தற்போது மூன்றாவது முறையாக 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முதலாக அறிவிக்கப்பட்ட உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அஸ்வின் இடம்பெறவில்லை, அது குறித்து அவரும் எதையும் அலட்டிக்கொள்ளவில்லை. “நம்ம பசங்க கப்ப அடிச்சிட்டு வரனும், ஃபேன் பாய் சண்டலாம் போடாம எல்லாரும் நம்ம இந்திய அணிக்கு சப்போர்ட் பண்ணனும்” என்று தன்னுடைய யு-டியூப் சேனலில் கூட ரசிகர்களுக்கு வீடியோவில் அட்வைஸ் செய்திருந்தார்.

உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்திருந்த அக்சர் பட்டேல் காயம் காரணமாக வெளியேறிய நிலையில், அவருக்கான இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது இணைக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலிரண்டு போட்டிகளில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதற்கு பிறகு, அவருக்கான உலகக்கோப்பை இடத்தை அஸ்வின் சீல் செய்தார். அக்சர் பட்டேலுக்கு பிறகு வாஷிங்டன் சுந்தர் மாற்று வீரராக பார்க்கப்பட்டாலும், அஸ்வின் ஒருநாள் போட்டிகளில் வைத்திருக்கும் அனுபவமும், 155 ODI விக்கெட்டுகளும், கடைசி நேரத்தில் களமிறங்கி ஹிட்டிங் செய்யக்கூடிய எபிலிடியும் அவரை உலகக்கோப்பைக்கான தேர்வில் முன்னுக்கு தள்ளியுள்ளது.

இந்த இடத்தில் அஸ்வின் கீ ஃபேக்டராக இருப்பார்!- சுனில் கவாஸ்கர்

அஸ்வின் இந்திய அணிக்கு பெரிய பலமாக இருப்பார் என தெரிவித்திருக்கும் கவாஸ்கர், “புதிய பந்தில் தொடங்குவதற்கு முகமது சிராஜ், முகமது ஷமி மற்றும் பும்ரா உள்ளனர். இவர்கள் மூவரும் உலகக் கோப்பையில் விளையாடுவார்களா என்று தெரியவில்லை, ஆனால் இந்த மூவரும் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ராஜ்கோட்டில் பும்ரா ஒரு சிறிய சறுக்கலை கண்டதை பார்த்தோம். அந்தத் தவறுகளை மீண்டும் ஒரு அனுபவ பந்துவீச்சாளர் செய்யக்கூடாது. மற்றப்படி வேகப்பந்துவீச்சு நன்றாகவே இருக்கிறது.

Sunil Gavaskar

அதனால் அதுகுறித்து கவலைப்படுவதில் ஒன்றும் இல்லை. இந்திய அணியின் பெரிய கவலை மிடில் ஓவர்கள் தான். கடந்த சில போட்டிகளில் ஆடுகளங்கள் எப்படி செயல்பட்டது என்று பார்த்தோம். டர்னிங், பவுன்ஸ், ஸ்பின் என எதுவும் இல்லாமல் பேட்டிங்கிற்கு இலகுவானதாக இருந்தது. இது போன்ற போட்டிகளில் தான் அஷ்வின் தனது அனுபவம் மற்றும் சாமர்த்தியத்தால் இந்திய அணிக்கு ஒரு முக்கிய காரணியாக மாறுவார். ஒருவேளை நிர்வாகம் அஸ்வினை பெரிய போட்டிகளுக்கான XI-ல் விளையாடுவார்களா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் மிடில் ஓவர்களில் உங்களுக்கு விக்கெட்டுகளைப் பெற்றுத்தரக்கூடிய ஒரு பந்துவீச்சாளராக இருப்பார்” என்று கவாஸ்கர் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் கூறியுள்ளார்.