இந்தியாவின் வரலாற்று தோல்விக்கு கவுதம் கம்பீரே காரணம் web
கிரிக்கெட்

’இது முழுக்க முழுக்க கம்பீரால் வந்த அழிவு..’ அனைத்து முடிவுகளுமே கேலிக்குரியது!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் அணி வீரர்களுக்கு நம்பிக்கை கொடுக்காததே தென்னாப்பிரிக்கா தொடரின் தோல்விக்கு காரணம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது..

Rishan Vengai

தென்னாப்பிரிக்காவிடம் சொந்த மண்ணில் 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒயிட்வாஷ் அடைந்த இந்தியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கவுதம் கம்பீரின் தலைமையில் வீரர் தேர்வில் குழப்பம், அனுபவமிக்க வீரர்கள் இல்லாமை, தொடர்ச்சியற்ற அணிக்கட்டமைப்பு ஆகியவை தோல்விக்கு காரணமாக விமர்சனம் எழுந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் இழந்திருக்கும் இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பை இழக்கும் நிலைக்கு சென்றுள்ளது..

25 ஆண்டுகளுக்கு பிறகு சொந்தமண்ணில் தென்னாப்பிரிக்காவிடம் டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆகியிருக்கும் இந்தியா, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக (408) ரன்கள் வித்தியாசத்தில் தோற்று மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது..

இந்தியாவில் தொடரை வென்ற தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்கா வீரர்கள் 2வது டெஸ்ட்டில் 700 ரன்களுக்கு மேல் அடித்த நிலையில், இந்திய வீரர்களால் வெறும் 341 ரன்கள் மட்டுமே அடிக்கமுடிந்தது சொந்தமண் அவர்களுக்கா? இந்தியாவுக்கா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது..

அன்று ஒரு பேச்சு.. இன்று ஒரு பேச்சு!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தேர்வு செய்யப்பட்டதற்கு பிறகு, இலங்கை மண்ணில் ஒருநாள் தொடரில் தோல்வி, நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் தோல்வி, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் தோல்வி மற்றும் தென்னாப்பிரிக்காவிடம் சொந்த மண்ணில் தோல்வி என இந்தியாவின் டெஸ்ட் பயணம் படுமோசமானதாகவே இருந்துவந்துள்ளது..

கம்பீர்

இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக பேசியிருந்த பயிற்சியாளர் கவுதம் கம்பீர், இந்திய டெஸ்ட் அணியில் மூத்தவீரர்கள் இல்லாததால் இது அணியை கட்டமைப்பதற்கான மாற்றத்திற்கான நேரமா என்ற கேள்விக்கு, என்னை பொறுத்தவரை அணியின் மாற்றத்திற்கான (Transition) நேரம் என்பதில் நம்பிக்கை இல்லை, இது இந்திய அணி, நான் அந்த வார்த்தையை பயன்படுத்தவிரும்பவில்லை, அவர்களுக்கு அனுபவம் மட்டுமே குறைவாக இருக்கிறது என பேசியிருந்தார்..

ஆனால் இரண்டாவது முறையாக சொந்தமண்ணில் டெஸ்ட் தொடரை இழந்ததற்குபிறகு பேசிய கவுதம் கம்பீர், இது அணிக்கான மாற்றத்திற்கான (Transition) நேரம், அனுபவமற்ற இளம் வீரர்கள் தவறுகளில் இருந்துதான் கற்றுக்கொள்வார்கள், அவர்களுக்கு நாம் நேரம் கொடுக்க வேண்டும் என முன்பு பேசியதிலிருந்து மாற்றி பேசியுள்ளார்..

தோல்விக்கு முழுபொறுப்பும் கம்பீர் உடையது..

இந்திய அணியின் வரலாற்று தோல்விக்கு கவுதம் கம்பீர் பொறுப்பேற்காத நிலையில், அணியில் செய்யப்பட்ட மாற்றங்கள், எந்த வீரர் எந்த இடத்தில் விளையாடப்போகிறார் என்ற தெளிவின்மை, ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர் அடுத்த போட்டியில் இல்லாமை போன்ற பல்வேறு காரணிகள் கவுதம் கம்பீரால் நிகழ்த்தப்பட்டவையே.. அணியின் கேப்டன் இல்லாத சூழலில், அணியின் தோல்விக்கு பயிற்சியாளரே பொறுப்பேற்க வேண்டும்..

வாஷிங்டன் சுந்தர்

முதல் போட்டியின் தோல்வியின் போது இதே ஆடுகளத்தில் தான் அக்சர் பட்டேல் சிறப்பாக விளையாடினார் என்று சொன்ன கம்பீர், அடுத்தப்போட்டியில் அவரை பிளேயிங் லெவனிலேயே கொண்டுவரவில்லை.. ஒருபோட்டியில் வாஷிங்டன் சுந்தரை நம்பர் 3 இடத்தில் களமிறக்கவிட்டு, அடுத்தப்போட்டியில் மீண்டும் நம்பர் 8 இடத்தில் பேட்டிங்கில் களமிறக்கப்பட்டார். சாய் சுதர்சன் நன்றாக விளையாடினாலும் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை.. ஆஸ்திரேலியா டெஸ்ட்டில் சிறப்பாக செயல்பட்ட நிதிஷ்குமார் ரெட்டிக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்காமல், அவரை அங்கொரு போட்டி இங்கொரு போட்டியாக களமிறக்குவது.. அணி வீரர்கள் அனைவருமே சொதப்பியபோது கருண் நாயர் மட்டும் தண்டிக்கப்பட்டது.. சர்பராஸ் கான், அபிமன்யு ஈஸ்வரன் போன்ற வீரர்கள் காரணமே இல்லாமல் வாய்ப்பு பெறாமல் இருந்துவருகின்றனர்..

ஜடேஜா - சர்பராஸ் கான்

போதாக்குறைக்கு விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் அஸ்வின் போன்ற தலைசிறந்த வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டனர்.. அணியில் பல வருடங்களாக கிரிக்கெட் விளையாடி வரும் கேஎல் ராகுல், ஜடேஜா, பும்ரா, சிராஜ், ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்கள் இருந்தும் இளம் வீரர்கள் கொண்ட அணி என கம்பீர் சொல்லிக்கொள்வது கேலிக்குரியதாகவே இருக்கிறது..

ஒரு வீரரை அடுத்த போட்டியில் நாம் அணியில் இருப்போமா இருக்க மாட்டோமா என்ற குழப்பத்தில் தள்ளிவிட்டுவிட்டு, அவரிடமிருந்து சிறந்த ஆட்டத்தை எதிர்ப்பார்ப்பது என்னமாதிரியான அணுகுமுறை என்று புரியவில்லை.. மேலும் யார் எந்த இடத்தில் விளையாடப்போகிறார்கள் என்ற புரிதல் வீரர்களுக்கே இல்லாதபோது, அவர்கள் எந்த இடத்தில் எப்படி விளையாட வேண்டும் என்ற புரிதலை எப்படி எட்டுவார்கள் என்பதும் புரியவில்லை

நிதிஷ்குமார் ரெட்டி

ஒயிட்பால் கிரிக்கெட்டில் கம்பீரின் முடிவுகள் சாம்பியன்ஸ் டிராபி, ஆசியக்கோப்பையை வெல்ல காரணமாக இருந்தாலும், இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டை அழிவின் பாதைக்கு கொண்டுசென்றிருக்கும் பெருமை கம்பீர் ஒருவருக்கே சேரும் என்றால் பொய்யாகாது..