Sourav Ganguly & Virat Kohli
Sourav Ganguly & Virat Kohli File Image
கிரிக்கெட்

"கோலியை வலுக்கட்டாயமாக கேப்டன் பதவியிலிருந்து நீக்கவில்லை"- சர்ச்சை கேள்விக்கு கங்குலி நேரடி பதில்!

Rishan Vengai

கடந்த 2021 டி20 உலகக்கோப்பையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அரையிறுதிக்கு கூட தகுதிபெறாமல் லீக் சுற்றோடு தோல்வியடைந்து வெளியேறியது. ஐபிஎல் தொடரிலும் கேப்டனாக வெற்றிபெறமுடியவில்லை, டி20 உலகக்கோப்பையிலும் அதேநிலையே தொடர்ந்ததால் விரக்தியடைந்த விராட் கோலி டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதேநேரம் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கேப்டனாக தொடர விரும்புவதாக கோலி தெரிவித்தார்.

Ganguly

ஒருநாள் கிரிக்கெட்டை அதிகம் விரும்பக்கூடிய வீரர் மற்றும் கேப்டன் என்பதாலும், 2019 உலகக்கோப்பையில் அணியை சிறப்பாக வழிநடத்தியதாலும் 2023 உலகக்கோப்பை வரை கேப்டனாக தொடர விராட் கோலி நிச்சயம் ஆர்வம் காட்டினார். ஆனால் அப்போது பிசிசிஐ தலைவராக பொறுப்பிலிருந்த சவுரவ் கங்குலி ஒடிஐ கேப்டனாக விராட் கோலி தொடர்வதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. அதனால் விரக்தியடைந்த கோலி ODI கிரிக்கெட் மட்டுமில்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

virat kohli, ganguly

விராட் கோலியின் இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்களுக்கு கங்குலி மீது வெறுப்பை ஏற்படுத்த வழிவகை செய்தது. அதுமட்டுமல்லாமல் நடப்பாண்டு தொடக்கத்தில் கோலி மற்றும் கங்குலியின் பல்வேறு ஸ்டேட்மெண்ட்கள் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக இருந்தது. இந்நிலையில் விராட் கோலியின் கேப்டன்சி குறித்து பேசியிருக்கும் சவுரவ் கங்குலி ஒப்பனாக பேசியுள்ளார்.

கோலியை வலுக்கட்டாயமாக கேப்டன் பதவியிலிருந்து நீக்கவில்லை! - கங்குலி

ஒரு ரியாலிட்டி ஷோவில் பேசியிருக்கும் சவுரவ் கங்குலி, “நான் விராட்டை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவில்லை. இதை நான் பலமுறை கூறியுள்ளேன். அவர் டி20 அணிக்கு தலைமை வகிக்க ஆர்வம் காட்டவில்லை. அதனால் தான் அவரின் அந்த முடிவுக்கு பிறகு, “டி20-ல் உங்களுக்கு கேப்டனாக இருக்க விருப்பமில்லை என்றால், ODI கிரிக்கெட்டிலிருந்தும் நீங்கள் கேப்டன் பதவிலிருந்து விலகுவது தான் நல்லது என நான் கூறினேன். ஏனென்றால் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இருவேறு கேப்டன்கள் இருப்பது நல்லதல்ல என்று எனக்கு தோன்றியது. அதனால் ஒயிட்-பால் கிரிக்கெட்டிற்கு ஒரு கேப்டனும், ரெட்-பால் கிரிக்கெட்டிற்கு ஒரு கேப்டனும் என தனித்தனியே இருப்பது நல்லது எனக்கு தோன்றியது" என்று தாதாகிரி அன்லிமிடெட் சீசன் 10-ல் கங்குலி கூறியுள்ளார்.

Rohit Sharma - Virat Kohli

மேலும், “ரோகித் சர்மா ஒருநாள் அணிக்கான கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை, அதனால் அவரை கேப்டன் பொறுப்பை எடுத்துக்கொள்ளுமாறு நான் தான் தள்ளினேன். அதனால் ரோகித் சர்மா கேப்டனானதில் எனக்கும் பங்களிப்பு இருக்கிறது. யார் நிர்வாகம் செய்தாலும், களத்தில் சிறப்பாக செயல்பட வேண்டிய பொறுப்பு வீரர்களுடையது. இந்திய கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்காக அப்போது என்னை BCCI-ன் தலைவராக நியமித்தார்கள். அந்த வேலையில் இது ஒரு சிறிய பகுதி” என்று அவர் மேலும் கூறினார்.