இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசையில், யுவராஜ் சிங் கொடுத்த அதிகப்படியான நம்பிக்கையை தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் கொடுத்துவருகிறார்.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்தவிதம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற சாம்பியன் அணிகளை டாமினேட் செய்தவிதம் அனைத்தும் அவர் எப்படியான வீரர் என்பதை உலகமேடையில் நிரூபிக்கும் தருணங்களாக அமைந்தன.
பிசிசிஐ-ன் வருடாந்திர ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட பிறகு உள்நாட்டு கிரிக்கெட் தொடர்கள் தொடங்கி ஐபிஎல் தொடர் வரை ரன்களை மலைபோல் குவித்திருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர், 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு கம்பேக் கொடுத்து இந்தியாவிற்கு கோப்பை வென்று கொடுத்ததெல்லாம் தனிகதை.
2024 ஐபிஎல் கோப்பையை கேப்டனாக வென்ற ஸ்ரேயாஸ் ஐயர், 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியை இறுதிப்போட்டிவரை அழைத்துச்சென்றார். அதுமட்டுமில்லாமல் தொடர் முழுவதும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர், 175 ஸ்டிரைக்ரேட்டுடன் 604 ரன்கள் குவித்தார். இது ஐபிஎல்லில் 600 ரன்களுக்கு மேல் அடித்த வீரர்கள் வைத்திருக்கும் அதிகபட்ச ஸ்டிரைக்ரேட்டாகும்.
இப்படி தன் வாழ்நாளின் சிறந்த ஃபார்மில் இருந்துவரும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்திய டெஸ்ட் அணியில் இடம் கொடுக்கப்படவில்லை. தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஸ்ரேயாஸ் ஐயருக்கான இடம் டெஸ்ட் அணியில் இல்லை என பகிரங்கமாக தெரிவித்தார்.
இந்நிலையில் இங்கிலாந்து சென்றிருக்கும் இந்திய டெஸ்ட் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் நிச்சயம் இடம்பெற்றிருக்க வேண்டும் என தேர்வுக்குழுவை சாடியுள்ளார் சவுரவ் கங்குலி.
ரெவ் ஸ்போர்ட்ஸ் உடன் பேசியிருக்கும் சவுரவ் கங்குலி, சிறந்த ஃபார்மில் இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயரை நான் என்னுடைய அணியில் இங்கிலாந்துக்கு அழைத்துச்சென்றிருப்பேன் என கூறினார். கேப்டனாக இருந்தபோது தன்னுடைய பிரதான பவுலராக அஜித் அகர்கரை கங்குலி பயன்படுத்தியிருந்தாலும், தேர்வுக்குழு தலைவராக அவரின் முடிவை பகிரங்கமாக சாடினார்.
ஸ்ரேயாஸ் ஐயர் குறித்து பேசியிருக்கும் கங்குலி, ”கடந்த ஒரு வருடமாக ஸ்ரேயாஸ் ஐயர் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதன்படி இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியிலும் அவர் இருந்திருக்க வேண்டும். கடந்த ஒரு வருடம் அவருக்கு அருமையாக இருந்தது. அவர் விடுவிக்கப்பட வேண்டிய வீரர் அல்ல. அவர் தற்போது அழுத்தத்தின் கீழ் அற்புதமாக ஸ்கோர் செய்கிறார், அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார், முன்பை விட ஷார்ட் பந்துகளை நன்றாக விளையாடுகிறார். வெள்ளை பந்து கிரிக்கெட்டிலிருந்து டெஸ்ட் கிரிக்கெட் மாறுபட்டிருந்தாலும், சிறந்த ஃபார்மில் இருக்கும் அவரால் இங்கிலாந்து தொடரில் என்ன செய்திருக்க முடியும் என்பதைப் பார்க்க நான் அவரை அழைத்துச் சென்றிருப்பேன்” என கங்குலி தேர்வுக்குழுவின் முடிவை சாடினார்.