Rohit- Kohli
Rohit- Kohli PT
கிரிக்கெட்

ரோகித்- கோலி இருவரும் 2024 டி20 உலகக்கோப்பையில் ஆடுவார்கள்! - சவுரவ் கங்குலி நம்பிக்கை

Rishan Vengai

2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் முடிவடைந்திருக்கும் நிலையில் இந்தியாவின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் பிரேக் எடுத்துள்ளனர். நடந்துவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகியிருக்கும் ரோகித் மற்றும் கோலி இருவரும், அடுத்துவரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இருந்து கூட விலகியுள்ளனர்.

virat kohli

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், ஒருநாள் தொடருக்கு கேஎல் ராகுல் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், ரோகித் சர்மா டெஸ்ட் தொடருக்கு மட்டுமே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் ரோகித் மற்றும் கோலி இருவரும் அவர்களுடைய டி20 எதிர்காலம் குறித்து அவர்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ தெரிவித்திருந்த நிலையில், தற்போது ரோகித் சர்மா டி20 மற்றும் ஒடிஐ போட்டிகளில் இருந்து விலகியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Rohit Sharma

ஒருவேளை டி20 போட்டிகளில் இருந்து ரோகித் மற்றும் கோலி இருவரும் விலகவிருக்கிறார்களா எனக் கேள்வி எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து பேசியிருக்கும் முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, ரோகித் மற்றும் கோலி இருவரும் 2024 டி20 உலகக்கோப்பை வரை விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார்.

2024 டி20 உலகக்கோப்பை வரை ரோகித் கேப்டனாக தொடர வேண்டும்!

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சவுரவ் கங்குலி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து, ரோகித் மற்றும் கோலி இருவரின் டி20 எதிர்காலம் குறித்து பேசினார். அப்போது, “ரோகித் மற்றும் கோலி இருவரும் இந்திய கிரிக்கெட்டின் முக்கியமான மற்றும் ஒருங்கிணைந்த பகுதிகளாகும். அவர்கள் இருவரும் உலகக்கோப்பை தொடரில் எப்படி விளையாடினார்கள் என்பதை பார்த்தோம். ரோகித் ஒரு கேப்டனாக சிறப்பாக வழிநடத்தினார். ஒரு பெரிய தொடருக்கு பிறகு மீண்டும் தொடர்ந்து விளையாடுவது மிகவும் கடினமான ஒன்று. அவர்களின் இந்த பிரேக் தேவையான ஒன்று தான்.

Virat Kohli - Rohit Sharma

இருதரப்பு தொடருக்கும் உலகக்கோப்பை தொடருக்குமான வித்தியாசம் அவர்களுக்கு தெரியும். அதனால் ஒடிஐ உலகக்கோப்பைக்கு பின் ஒரு நீண்ட ஓய்விற்கு பிறகு அவர்கள் டி20 உலகக்கோப்பைக்கு புதியதாக திரும்பி வருவார்கள். ரோகித் திரும்பும்போது அவர் அனைத்து விதமான வடிவத்திற்கும் கேப்டனாக செயல்பட வேண்டும். ஏனென்றால் அவர்தான் தலைவர், எதிர்வரும் 2024 டி20 உலகக்கோப்பை வரை கேப்டனாக தொடர்வார் என எதிர்ப்பார்க்கிறேன்” என்று கங்குலி கூறியுள்ளார்.