கம்பீர் - கோலி
கம்பீர் - கோலி Twitter
கிரிக்கெட்

INDvPAK | ஆட்டநாயகன் விருதை கோலிக்கு கொடுத்திருக்கக் கூடாது! - கவுதம் கம்பீர் விளக்கம்

Rishan Vengai

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது என்றாலே அங்கே கொண்டாட்டத்திற்கும், உணர்ச்சி பெருக்கிற்கும் பஞ்சமில்லாமல் இருக்கும். போட்டியின் வெற்றியில் எந்தளவு கொண்டாட்டங்கள் இருக்கிறதோ, அதே அளவு தோல்வியில் விமர்சனங்களும் இருக்கும்.

அந்தவகையில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா வெற்றிபெற்றதை அடுத்து நாக்பூர், மஹாராஷ்டிரா மற்றும் ஜம்மு-காஷ்மீர் போன்ற இடங்களில் இந்திய ரசிகர்களின் கொண்டாட்டங்கள் அதிகமாகவே இருந்தன. அப்படி ஒரு போட்டியை இந்திய வீரர்கள் ரசிகர்களுக்கு விருந்தாக கொடுத்தனர்.

Virat

ரோகித் சர்மா மற்றும் கில் இருவரின் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப், விராட் கோலி மற்றும் கேஎல் ராகுலின் கிளாசிக் சதங்கள், பும்ராவின் அசத்தல் கம்பேக், ஹர்திக் பாண்டியாவின் பாபர் அசாம் விக்கெட் மற்றும் குல்தீப் யாதவின் 5 விக்கெட்டுகள் என இந்திய ரசிகர்கள் பார்த்து கொண்டாடுவதற்கு பல விசயங்கள் போட்டியில் இருந்தன. இந்நிலையில் இந்தியாவின் அபாரமான வெற்றிக்கு பிறகு, ஆட்டநாயகன் விருது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 13000 ரன்களை கடந்த விராட் கோலிக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கோலிக்கு வழங்கப்பட்ட ஆட்டநாயகன் விருது குறித்து பேசியிருக்கும் முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர், ஆட்டநாயகன் விருதை கோலிக்கு வழங்கியிருக்கக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

கோலியை விட குல்தீப் யாதவிற்கே வழங்கியிருக்க வேண்டும்! - கவுதம் கம்பீர் விளக்கம்

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடன் பேசியிருக்கும் கவுதம் கம்பீர், “என்னைப்பொறுத்தவரை ஆட்டநாயகன் விருது குல்தீப் யாதவிற்குதான் வழங்கியிருக்க வேண்டும். போட்டியில் அவரைத்தாண்டி எதையும் பார்க்க முடியாது. எனக்கு தெரியும் விராட் கோலி அபாரமான சதத்தை அடித்தார். கேஎல் ராகுல் கூட சதமடித்தார். ஏன் ரோகித் மற்றும் கில் இருவரும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். ஆனால் இவர்களை எல்லாம் தாண்டி பாகிஸ்தான் போன்ற சுழற்பந்துவீச்சை சிறப்பாக விளையாடக்கூடிய ஒரு அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகள் எடுப்பது அபாரமான விசயமாகும்.

Kuldeep Yadav

இது ஒரு பவுலரின் தரத்தை வெளிக்காட்டுகிறது. இதுவே ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற அணிகளுக்கு எதிராக குல்தீப் 5 விக்கெட் எடுத்திருந்தால் இதைக்கூறியிருக்கமாட்டேன். ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் குல்தீப் பந்தை காற்றில் திருப்பினார், விக்கெட்டை சரியாக பயன்படுத்திக்கொண்டார். இந்தியாவின் பேட்டர்கள் சிறந்த ஃபார்மில் உலகக்கோப்பைக்கு செல்வதை விட, இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களுடன் இதே ஃபார்மோடு குல்தீப் சென்றால் இந்தியாவிற்கு அது சாதகமாக அமையும். 3 வீரர்கள் உங்களுக்கு விக்கெட் டேக்கராக இருந்தால் அதிக பலம் சேர்க்கும்” என்று கூறியுள்ளார்.