தனது வாழ்வில் எந்தவிதமான தொழில்முறை கிரிக்கெட்டையும் விளையாடாமலேயே ஐபிஎல் 2026 ஏலப் பட்டியலில் 20 வயது இளைஞர் ஒருவர் இடம்பிடித்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.
திறமை இருப்பவரை களம் விடாது என்பதற்கு உதாரணமாக இதோ ஓர் இளைஞர் புறப்பட்டுள்ளார். கிரிக்கெட் விளையாடமலேயே ஐபிஎல் அணிக்குள் இடம்பெற இருக்கிறார் அந்த இளைஞர். யார் அவர்? அவரைப் பற்றி இங்கு பார்ப்போம்.
2026 ஐபிஎல்லுக்கான மினி ஏலம் இன்று அபுதாபியில் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் 240 இந்தியர்கள் உட்பட மொத்தம் 350 கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க உள்ளனர். அதே நேரத்தில், அணிகளிடம் 77 வீரர்களுக்கான இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.
350 பெயர்களில், 40 கிரிக்கெட் வீரர்கள் அதிகபட்ச அடிப்படை விலையான ரூ.2 கோடியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். 227 புதிய உள்நாட்டு வீரர்கள் தங்கள் அடிப்படை விலையான ரூ.30 லட்சத்தை நிர்ணயித்துள்ளனர். இந்த நிலையில், தனது வாழ்வில் எந்தவிதமான தொழில்முறை கிரிக்கெட்டையும் விளையாடாமலேயே ஐபிஎல் 2026 ஏலப் பட்டியலில் 20 வயது இளைஞர் ஒருவர் இடம்பிடித்துள்ளார்.
வடக்கு கர்நாடகாவில் உள்ள பிதார் என்ற சிறிய நகரத்தில் வளர்ந்தவர் இசாஸ் சவாரியா. தற்போது அவர், ராஜஸ்தானில் உள்ளார். ஆனால், இவர் தனது வாழ்வில் எந்தவிதமான கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை. எனினும், கிரிக்கெட்டில் சாதிக்கும் வண்ணம் அவர் வேறொரு பாதையைத் தேர்ந்தெடுத்தார். சுழற்பந்து வீச்சாளராகத் தனது திறமையை உருவாக்கிக் கொண்ட அவர், அதற்காக தனிப்பட்ட பயிற்சிகளை மேற்கொள்ளும் வீடியோவை தனது இன்ஸ்டா தளத்தில் வீடியோவாக வெளியிட்டு வந்தார். அதன் பலன், இன்று அவருக்கு கைகூடியிருக்கிறது. ஆம், அது தற்போது அவருக்குத் தகுதியான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது. அவருடைய இன்ஸ்டா ரீல்ஸ் ஒன்றை இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷீத் பார்த்துள்ளார். அது, அவரது கனத்தை ஈர்த்ததுடன், அவர் பந்துவீசும் இதர வீடியோக்களையும் மேலும் இடுகையிட தூண்டியது.
இது, நாளடைவில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளரான சுனில் ஜோஷி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸின் ஸ்கவுட்களின் கவனத்தை ஈர்த்தது. தவிர, சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) ஆகிய அணிகளின் பந்துவீச்சு சோதனைகளுக்கும் அவர் அழைக்கப்பட்டுள்ளார். குறிப்பாக, அந்தச் சோதனையின்போது பஞ்சாப்பை வெகுவாகவே கவர்ந்துள்ளார். இதன்மூலம் அவர்கள் ஐபிஎல் 2025 ஏலத்தில் பதிவு செய்ய அவருக்கு உதவியுள்ளனர். ஏலத்தில் நான்காவது மற்றும் இறுதிப் பிரிவில் இடம்பெறாத சுழற்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் சவாரியா 265வது இடத்தில் உள்ளார். இதன் அடிப்படை விலை ரூ.30 லட்சம். ஏலத்தின்போது சுழற்பந்துவீச்சாளர்களுக்கு அதிக தேவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், சவாரியாவும் அவரது அசாத்தியான திறமையாக ஐபிஎல் உரிமையாளர்களை ஈர்க்க முடியும் என நம்பப்படுகிறது. இதன்மூலம் ஐபிஎல்லில் அவர் புதிய சரித்திரத்தை எழுதுவார் என்கின்றனர் கிரிக்கெட் வல்லுநர்கள்.