Ex Pakistan Player - Aishwarya rai
Ex Pakistan Player - Aishwarya rai Twitter
கிரிக்கெட்

ஐஸ்வர்யா ராயை அவமதிக்கும் வகையில் பேசிய முன்னாள் பாக். வீரர்! கொந்தளித்த நெட்டிசன்ஸ்! என்ன நடந்தது?

Rishan Vengai

2023 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்புவரை அரையிறுதிக்கு முன்னேறக்கூடிய ஒரு அணியாகவும், கோப்பையை வெல்லக்கூடிய ஒரு அணியாகவும் பாகிஸ்தான் அணி பார்க்கப்பட்டது. ஆனால் அதையெல்லாம் (ஏ)மாற்றி, விளையாடிய 9 லீக் போட்டிகளில் 4-ல் மட்டுமே வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலில் 5வது இடம்பிடித்த பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறும் தகுதியை இழந்து தொடரை விட்டே வெளியேறியது.

ind vs pak

இந்நிலையில் பல்வேறு முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் தற்போதைய பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதில் சமீபத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற ஷாகித் அப்ரிடி, அப்துல் ரசாக் மற்றும் உமர் குல் போன்ற முன்னாள் பாகிஸ்தான் வீரர்களிடம் தற்போதைய பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாடு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் பேசிய அப்துல் ரசாக் கூறிய கருத்து, ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் முன்னாள் பாகிஸ்தான் அணியையும், தற்போதைய பாகிஸ்தான் அணியையும் ஒப்பிட்டு இந்திய நடிகை ஐஸ்வர்யா ராயை உவமையாக்கி கருத்து கூறியிருந்தார். இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அப்படி அவர் என்ன சொன்னார்? பார்ப்போம்...

ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துகொண்டால்..

பாகிஸ்தானும் உலகக்கோப்பை கனவும்...

1992ஆம் ஆண்டு இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை வென்று அசத்தியது. அதற்கு பிறகு வாசிம் அக்ரம் கேப்டன்சியில் காலிறுதி மற்றும் 1999-ல் இறுதிப்போட்டிவரை சென்ற பாகிஸ்தான் அணி தோற்று வெளியேறியது. பின்னர் வாகர் யூனிஸ், இன்சமாம், ஷாகித் அப்ரிடி, மிஸ்பா உல் ஹக் மற்றும் ஷர்ஃப்ராஸ் அகமது போன்ற பல கேப்டன்கள் பாகிஸ்தானை உலகக்கோப்பையில் வழிநடத்தினாலும் அந்த அணியால் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியவில்லை.

2011-ல் மட்டும் ஷாகித் அப்ரிடி தலைமையில் அரையிறுதிக்கு முன்னேறிய பாகிஸ்தான் அணி இந்தியாவோடு தோற்று வெளியேறியது. அதற்கு பிறகு தற்போது பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் அரையிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறியிருப்பது, பல விமர்சனங்களை பெற்றுவருகிறது.

1992 world cup pakistan squad

முன்னர் இருந்த பாகிஸ்தான் அணியுடன் தற்போதிருக்கும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை ஒப்பிட்டு பேசிய அப்துல் ரசாக், “யூனிஸ் கான் ஒரு கேப்டனாக நல்ல எண்ணம் கொண்டிருந்தார். அது எனக்கு சிறப்பாக செயல்பட நம்பிக்கையை அளித்தது. தற்போது அனைவரும் அதேபோலான எண்ணத்தையும், பாகிஸ்தான் அணியின் வெற்றியையும் பேசுகிறார்கள். உண்மையில், பாகிஸ்தானில் இப்போது வீரர்களை உருவாக்கி மெருகூட்ட வேண்டும் என்ற நல்ல எண்ணம் நம்மிடம் இல்லை.

ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து கொண்டால், நல்ல மற்றும் குணமுள்ள குழந்தை பிறக்கும் என்று நீங்கள் நினைத்தால், அது எப்போதும் நடக்காது” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

அவர் சொல்ல வந்தது - ‘முன்னாள் பாகிஸ்தான் அணி போல் எண்ணம் இருந்துவிட்டால் மட்டும் வெற்றி கிடைத்துவிடாது, அதற்காக நீங்கள் உழைத்து வீரர்களை உருவாக்க வேண்டும். மாறாக நன்றாக இருந்தால் போதும் ரிசல்ட் வந்துவிடும் என நினைத்தால் முடியாது’ என்பது. ஆனால் இதற்கு, ஐஸ்வர்யா ராயை ஒரு மோசமான உவமையாக்கி அப்துல் ரசாக் கருத்து தெரிவித்திருப்பது இந்திய ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. பல பாகிஸ்தானை சேர்ந்த நெட்டிசன்களும்கூட அப்துல் ரசாக் கருத்துக்கு அதிருப்தி தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் அப்துல் ரசாக்கின் அந்த கருத்துக்கு உடன் அமர்ந்திருந்த ஷாகித் அப்ரிடி மற்றும் உமர் குல் இருவரும் கைத்தட்டி சிரித்திருப்பது மேலும் இந்தியர்களின் கோவத்தை கிளப்பியுள்ளது.

அப்துல் ரசாக் மன்னிப்பு கேட்க வேண்டும்! சிரித்ததை மறுத்த உமர் குல்!

அப்துல் ரசாக்கின் மோசமான கருத்து, அதற்கு கைத்தட்டியிருந்த ஷாகித் அப்ரிடி மற்றும் உமர் குல்லை விமர்சிக்கும் வகையில், “இதற்குதான் கல்வி என்பது முக்கியமானதாக இருக்கிறது. இந்த கருத்துக்கு வன்மையான கண்டனங்கள்” என பஷித் சுபானி என்பவர் எழுதியுள்ளார். அவருடைய அந்த பதிவுக்கு ரிப்ளை செய்திருக்கும் உமர் குல், அப்ரிடியும் தானும் ஐஸ்வர்யா குறித்த கருத்துக்கு சிரிக்கவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.

உமர் குல் பதிவிட்டிருக்கும் ரிப்ளையில், “அன்புள்ள சகோதரரே, அப்துல் ரசாக் கூறியதை ஆமோதிப்பதற்காக நானும் ஷாகித் பாயும் கைத்தட்டவில்லை. அங்கிருந்த யாரும் அவர் சொன்னதை பாராட்டவோ அல்லது ஆமோதிக்கவோ செய்யவில்லை. அவருடைய அந்த கருத்து நெறிமுறை மற்றும் தார்மீக ரீதியாக தவறானதுதான். அது அவருடைய கண்ணோட்டம். ஆனால் அந்த உரையாடலின் ஒரு பகுதியாக கூட இல்லாத எங்களுடைய பெயரை பதிவிடுவது தவறு” என்று கூறியுள்ளார்.

அதற்கு ரிப்ளை செய்திருக்கும் பஷித், “சரி சகோதரரே. குறைந்தபட்சம், நீங்கள் தவறை தவறென்றாவது கூறுகிறீர்களே. ஆனால் அப்துல் ரசாக் அவருடைய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” என பதிலளித்துள்ளார்.