இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பணியாற்றிய வெளிநாட்டு பயிற்சியாளர்களை பாகிஸ்தான் கோச்சாக நியமிப்பதற்கு முன், அவர்களின் பின்னணியை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவர் பேசியுள்ளார். தற்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் பயிற்சியாளரை இந்தியாவின் ஏஜெண்ட் என்றும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இம்ரான் கான், வாசிம் அக்ரம், ஜாவேத் மியாண்டட், வக்கார் யூனிஸ், சோயப் அக்தர், யூனிஸ் கான், இன்சமாம் போன்ற பல தலைசிறந்த வீரர்களை கிரிக்கெட் உலகிற்கு கொடுத்த பெருமை பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு உண்டு. 1992 ஒருநாள் உலகக்கோப்பை, 2009 டி20 உலகக்கோப்பை, 2017 சாம்பியன்ஸ் டிராபி என 3 ஐசிசி கோப்பைகளை வென்றிருக்கும் அந்த அணி, சமீப ஆண்டுகளாக படுமோசமாக விளையாடிவருகிறது. செல்லும் இடமெல்லாம் அடிவாங்கி தோல்வி முகத்தோடு திரும்பும் அந்த அணி, சொந்தமண்ணில் கூட வங்கதேசத்திற்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்து மலிவான ஒரு அணியாக உருமாறியுள்ளது.
2023, 2024 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றோடு வெளியேறியதோடு மட்டுமில்லாமல், வெளிநாடு, உள்நாடு என வெற்றிகளை விட பாகிஸ்தான் அணியின் தோல்வி சதவீதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாதவகையில் வெற்றி-தோல்வியின் சதவீதம் 1-க்கும் கீழ் சென்றுள்ளது. அதோடு வெற்றிகளின் சதவீதம் 4 ஆண்டுக்கு முன்பு 75-லிருந்து தற்போது 28% சதவீதமாக சரிந்துள்ளது. இப்படி பாகிஸ்தான் கிரிக்கெட் அதள பாதாளத்திற்கு சென்றதற்கு, அணியில் வீரர்களிடையே ஒற்றுமையின்மை, அதிக கேப்டன்சி மாற்றங்கள் மற்றும் அதிக பயிற்சியாளர்கள் மாற்றங்கள் என பல்வேறு காரணங்கள் உள்ளன.
ஆனால் இவற்றையெல்லாம் விட்டுவிட்டு பாகிஸ்தானின் பயிற்சியாளர் ஒரு இந்தியாவின் ஏஜெண்ட் என்றும், அதனால் தான் பாகிஸ்தான் தொடர்ந்து தோற்றுவருகிறது என்றும், அவருக்கு பாகிஸ்தான் மீது விஸ்வாசம் இல்லை என்றும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரஷீத் லத்தீஃப் பகிரங்கமாக கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மூன்றிலும் தோற்று நாடு திரும்ப உள்ளது. 8 ஆண்டுகளாக வெளிநாட்டு மண்ணில் ஒரு வெற்றியை கூட பெறமுடியாத அந்த அணியின் செயல்பாடு மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. ஆனால் பாகிஸ்தானின் தோல்விக்கு அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசனே காரணம் என்றும், அவர் இந்தியாவிலிருந்து வந்த ஏஜெண்ட் என்றும் முன்னாள் வீரர் ரசீத் லதீஃப் விமர்சித்துள்ளார்.
தற்போதைய பாகிஸ்தான் வெள்ளைப்பந்து பயிற்சியாளர் மைக் ஹெசனின் நேர்மை மற்றும் விசுவாசத்தைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கும் லதீஃப், ஐபிஎல்லில் தங்கள் பணிகளை முடித்துவிட்டு பயிற்சியாளர்கள் பாகிஸ்தானுக்கு வரும்போது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு முழுமையான பின்னணிச் சோதனையை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு முன் பல பயிற்சியாளர்கள் இருந்திருக்கிறார்கள், அவர்கள் எல்லாம் பாகிஸ்தானுக்கு விசுவாசமாகவே இருந்தார்கள். அவர்கள் மீதெல்லாம் எந்த சந்தேகமும் இருந்ததில்லை. ஆனால் ஐபிஎல்லில் வேலைசெய்த பிறகு வந்த பயிற்சியாளரைத்தான் நான் குறை சொல்கிறேன். அவர் மீது எப்போதும் சந்தேகம் இருந்துகொண்டே இருப்பதை தவிர்க்க முடியாது. நான் நேரடியாகக் குற்றம் சாட்டவில்லை. ஆனால், ஐபிஎல் அமைப்புகளுடன் நேரடியாகத் தொடர்புடைய பயிற்சியாளர்களை சிலர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும், இதன் மூலம் ஏஜெண்ட்கள் உருவாக வாய்ப்புள்ளது. இதனால் வெளிநாட்டு பயிற்சியாளர்களின் தொழில்முறையை ஆராய்வது அவசியமானது" என்று எச்சரித்துள்ளார்.
மைக் ஹெசன் இதற்கு முன்பு ஐபிஎல் தொடரில் RCB அணியுடனும், நியூசிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.