nz vs ind
nz vs ind Twitter
கிரிக்கெட்

”இந்த முறை தவறவிட்டால்” நியூசிக்கு எதிரான அரையிறுதிப் போட்டி - எச்சரிக்கும் முன்னாள் இந்திய வீரர்கள்

Rishan Vengai

நடப்பு உலகக்கோப்பையில் விளையாடிய 9 லீக் போட்டிகளிலும் வென்று 9-0 என தோல்வியையே சந்திக்காமல் முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது இந்திய அணி. இருப்பினும் அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்டு விளையாடவிருக்கும் இந்திய அணி மீது, 2019 உலகக்கோப்பை தோல்வியின் அழுத்தம் அதிகமாகவே இருக்கிறது.

Ind vs Nz

20 வருடங்களாக நியூசிலாந்துக்கு எதிராக உலகக்கோப்பையில் தோல்வியையே சந்தித்து வந்த இந்திய அணி, நடந்து முடிந்த 5வது லீக் போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2003-ஆம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக வெற்றிபெற்று அசத்தியிருந்தது. இந்நிலையில் உலகக்கோப்பை போட்டிகளில் 5-4 எனவும், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 59-50 எனவும் இரண்டு அணிகளும் சரிசமமான நிலையிலேயே வெற்றியை பதிவுசெய்துள்ளால், நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் இந்திய அணிக்கு அழுத்தம் நிச்சயம் இருக்கும் என முன்னாள் மற்றும் இந்நாள் இந்திய பயிற்சியாளர்களான ரவி சாஸ்திரி மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் தெரிவித்துள்ளனர்.

இந்த வாய்ப்பை தவறவிட்டால்.. இன்னும் 3 உலகக்கோப்பைகள் தேவைப்படும்! - ரவி சாஸ்திரி

ரோகித் மற்றும் கோலி இரண்டு வீரர்களால் மட்டும் நியூசிலாந்தை வீழ்த்த முடியாது என தெரிவித்திருக்கும் முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய அணியின் அனைத்து வீரர்களும் வெற்றிக்காக பங்களிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து கிளப் ப்ரேரி ஃபயர் போட்காஸ்ட்டில் பேசியிருக்கும் ரவி சாஸ்திரி, “இந்த உலகக்கோப்பை வெற்றிக்காக இந்திய நாடே காத்துக்கொண்டிருக்கிறது. கடைசியாக சொந்த மண்ணில் கோப்பை வென்று 12 வருடங்கள் ஆகிறது. மக்கள் மீண்டும் ஒரு வெற்றிக்காக காத்திருக்கின்றனர். நடப்பு இந்திய அணியும் அதற்காக சிறப்பாகவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

ரவி சாஸ்திரி

ரோகித் மற்றும் கோலி இருவரால் மட்டுமே நியூசிலாந்தை வீழ்த்தி விட முடியாது. இந்த முறை வாய்ப்பை விட்டுவிட்டால் இன்னும் 3 உலகக்கோப்பைகள் இந்திய அணி காத்திருக்க வேண்டியிருக்கும். நடப்பு உலகக்கோப்பையில் அவர்களின் 7-8 வீரர்கள் உச்சத்தில் இருக்கின்றனர். இதுகூட சிலரின் கடைசி உலகக்கோப்பையாக இருக்கலாம். இந்திய அணி அழுத்தத்தை மீறி சிறப்பாக விளையாடும் என்று நினைக்கிறேன். அதற்கு முக்கிய காரணமாக பவுலர்கள் இருப்பார்கள், இந்த மூன்று வேகப்பந்துவீச்சாளர்களும் திடீரென சிறப்பாக செயல்படவில்லை. கடந்த 4 வருடங்களாக அதற்காக உழைத்து வருகின்றனர். சிராஜ் கடந்த 3 வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்” என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

அழுத்தம் நிச்சயமாக இந்திய அணி மீது இருக்கிறது! - ராகுல் டிராவிட்

2019 உலகக்கோப்பை குறித்து பேசியிருக்கும் இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், “ இது மீண்டும் ஒரு 2019 உலகக்கோப்பை போட்டியாக இருக்காது என்பதில் நம்பிக்கையோடு இருக்கிறேன். நிச்சயம் இந்திய அணி மீது அழுத்தம் இருக்கிறது. அதை வீரர்கள் உத்வேகமாக எடுத்துகொண்டு செயல்படுவார்கள். இதற்கு முன்பு அழுத்தமான நேரங்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட்ட விதம் எங்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும் என நம்புகிறேன்.

rahul dravid

இது ஒரு அரையிறுதி, நியூசிலாந்துக்கு எதிரான போட்டி என்பதால் நாங்கள் எதையும் மாற்றப்போவதில்லை. இதுவரை ஆடிய சிறந்த கிரிக்கெட்டை செமிபைனலிலும் வெளிப்படுத்துவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

விரைவாக 2-3 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்! - குல்தீப் யாதவ்

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி குறித்து பேசியிருக்கும் குல்தீப் யாதவ், “நியூசிலாந்துக்கு எதிரான 2019 அரையிறுதி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அதற்குப் பிறகு நாங்கள் நிறைய இருதரப்பு தொடர்களில் விளையாடியுள்ளோம், எனவே இந்தியாவில் இருக்கும் நிலைமைகள் இரண்டு அணிகளுக்குமே நன்றாகவே தெரியும். நியூசிலாந்துக்கு எதிராக சிறந்த கிரிக்கெட்டை விளையாடியுள்ளோம். அதே போல நடப்பு உலகக்கோப்பையிலும் சிறப்பாகவே செயல்பட்டுவருகிறோம்.

Kuldeep Yadav

மும்பை வான்கடே மைதானம் நிச்சயம் பந்துவீச்சாளர்களுக்கு கடினமான ஒன்றாக இருக்கும். ஆனால் டி20-ஐ போல் இல்லாமல், பந்துவீச்சாளர்களால் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் விக்கெட் எடுத்து கம்பேக் கொடுக்க முடியும். எப்படி இருப்பினும் எதிரணிக்கு எதிராக விரைவாகவே 2-3 விக்கெட்டுகள் வீழ்த்துவது அவசியமான ஒன்று” என தெரிவித்துள்ளார்.