மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை தொடர்வதற்குப் பதிலாக, சூர்யகுமார் யாதவ் போன்ற வெற்றிகரமான கேப்டனை நியமிக்க வேண்டும் என முன்னாள் கேப்டன் பரிந்துரைக்கிறார். சூர்யா இந்திய அணியை 90% வெற்றி சதவீதத்துடன் உலகக்கோப்பை வென்றுள்ளார். இதனால், அவருக்கு மும்பை அணியின் கேப்டன்சியை வழங்குவது சரியான முடிவாக இருக்கும் என அவர் கூறினார்.
2013 முதல் 2020 வரை ரோகித் சர்மா தலைமையில் 5 ஐபிஎல் கோப்பைகள் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, கடந்த 5 ஆண்டுகளாக கோப்பை வெல்ல முடியாமல் திணறிவருகிறது. கடப்பாரை பேட்டிங், ஸ்டார் வீரர்கள், மிரட்டலான பந்துவீச்சு என அனைத்தும் இருந்தும் மும்பை அணியால் ஏன் கோப்பை வெல்ல முடியவில்லை என்று கருத்து பொதுவாக இருந்துவருகிறது.
2024 டி20 உலகக்கோப்பை வென்ற கையோடு ரோகித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிய மும்பை அணி நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது. இவ்விவகாரம் சுற்றி நிறைய விசயங்கள் நடந்த நிலையில், ரோகித் சர்மா வேறு அணிக்கு செல்லாமல் மும்பை அணியிலேயே ஒரு வீரராக தொடர்ந்து விளையாட முடிவு செய்தார்.
இதற்கிடையில் தற்போது இந்திய டி20 அணியை 80% வின்னிங் ரேட்டிங் உடன் வழிநடத்தி 2026 டி20 உலகக்கோப்பையை சூர்யகுமார் யாதவ் வென்றுள்ளார். இந்தசூழலில் தான் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் என 2 டி20 உலகக்கோப்பை வென்ற கேப்டன்கள் இருந்தும் மும்பை அணியில் கேப்டனாக இல்லாமல் இருப்பது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி குறித்த உரையாடலில் பேசிய முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், மும்பை அணியில் பேட்டிங், பவுலிங் மற்றும் ஆல்ரவுண்டர் என அனைத்தும் இருந்தபோதும் அவர்களால் கோப்பை வெல்லமுடியவில்லை. தற்போது அவர்களுக்கு அனைத்துமே ஒன்று சேர்ந்துவந்துள்ளது, சூர்யகுமார், பும்ரா, ஹர்திக், திலக் வர்மா, வில் ஜாக்ஸ், மிட்செல் சாண்ட்னர், டி காக் என அனைவரும் டி20 உலகக்கோப்பையிலிருந்து நல்ல ஃபார்மில் திரும்பியுள்ளனர். இந்தமுறை அவர்கள் டாப் 4-க்கு நிச்சயம் செல்வார்கள் என்று குறிப்பிட்டார்.
அவரிடம் ஹர்திக் பாண்டியாவிற்கு இன்னும் கேப்டன்சி கொடுக்கவேண்டுமா? என்றும், சூர்யகுமார் யாதவ் இந்திய அணியை தோல்வியே இல்லாமல் கிட்டத்தட்ட 90% வெற்றி சதவீதத்துடன் உலகக்கோப்பை வென்று கொடுத்துள்ளார், அவர் கேப்டனாக இருப்பது தானே சரி என்றும் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இதே தான் ரோகித் சர்மா விசயத்திலும் நடந்தது. ரோகித்தும் உலகக்கோப்பை வென்றபோது தான் கேப்டன் பதவி ஹர்திக்கிற்கு வழங்கப்பட்டது. இது அவர்களுடைய பாலிஸியா என்ன என்று புரியவில்லை. ஆனால் ஹர்திக் பாண்டியாவே சென்று சூர்யகுமார் யாதவ் கேப்டனாக இருக்கட்டும், நான் வீரராக விளையாடுகிறேன் என்று சொல்லவேண்டும். அப்படி நடந்தால் தான் சூர்யா கேப்டனாக் செயல்பட முடியும் என்று தெரிவித்தார்.