india team bcci
கிரிக்கெட்

இந்திய அணி தோல்வி.. காரணம் சொன்ன கவுதம் காம்பீர்.. உண்மையை விமர்சிக்கும் ஜாம்பவான்கள்!

வெறும், 30 ரன்கள் வித்தியாசத்தில் சொந்த மண்ணில் இந்தியா தோல்வியடைந்ததை அடுத்து அவ்வணி மீது கடுமையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

Prakash J

வெறும், 30 ரன்கள் வித்தியாசத்தில் சொந்த மண்ணில் இந்தியா தோல்வியடைந்ததை அடுத்து அவ்வணி மீது கடுமையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

தென்னாப்பிரிக்காவிடம் இந்திய அணி படுதோல்வி

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 உள்ளிட்ட தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது. அந்த வகையில், இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 159 மற்றும் 153 ரன்கள் அடித்தது. முதல் இன்னிங்ஸில் 189 ரன்னுக்கு ஆட்டமிழந்த இந்தியா, 124 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ஆனால், மிகக் குறைந்த இலக்கைக்கூடத் தொடமுடியாமல் 93 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது. இதன்மூலம், 15 ஆண்டுகளுக்கு பிறகு டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது.

india

குறிப்பாக, வெறும், 30 ரன்கள் வித்தியாசத்தில் சொந்த மண்ணில் இந்தியா தோல்வியடைந்ததை அடுத்து அவ்வணி மீது கடுமையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்திய தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் பரவலான விமர்சனங்களை எதிர்கொள்கிறார்.

தோல்வி குறித்துப் பேசிய காம்பீர்

தோல்வி குறித்துப் பேசிய காம்பீர், “நாங்கள் எதிர்பார்த்த ஆடுகளம் இதுதான். நான் முன்னதாக சொன்னதுபோன்று, ஆடுகள பராமரிப்பாளர் மிகவும் உதவிகரமாக இருந்தார். நாங்கள் என்ன விரும்பினோமோ, அதுதான் கிடைத்தது. நன்றாக விளையாடாதபோது, இதுதான் நடக்கும். பிட்ச் எப்படி இருந்தாலும் 124 என்பது சேசிங் செய்யக்கூடிய இலக்கு என்று நான் நம்புகிறேன். உங்களிடம் திடமான தடுப்பாட்டம், உறுதி ஆகியவை இருந்தால் இந்த பிட்ச்சிலும் உங்களால் ரன்கள் அடிக்க முடியும். அது அதிரடியாக விளையாடுவதற்கு உதவாமல் இருக்கலாம். பிட்சில் பேய் எதுவுமில்லை. ஏனெனில் அதில் அக்சர் படேல், பவுமா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ரன்கள் அடித்தார்கள். ஒருவேளை பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருக்கிறது என்று நீங்கள் சொன்னால், உண்மையில் அங்கே வேகப்பந்து வீச்சாளர்கள்தான் நிறைய விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள்.

கவுதம் கம்பீர்

எனவே உங்களிடம் வலுவான தற்காப்பு இருந்தால், நீங்கள் ரன்கள் எடுக்க முடியாத பிட்ச் இது அல்ல. 40-50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். அழுத்தத்தை உள்வாங்கி பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால் பெரிய இலக்கும் சிறிதாக மாறியிருக்கும்” எனத் தெரிவித்தார்.

இருப்பினும், காம்பீரின் கருத்துகளை இந்திய ரசிகர்கள் ஏற்பதாக இல்லை. அவர்கள், அவரது பதவிக்காலத்தில் அணியின் மோசமான டெஸ்ட் சாதனைக்காக அவரை விமர்சித்து வருகின்றனர். கம்பீரின் பயிற்சியின்கீழ் விளையாடிய 18 டெஸ்ட் போட்டிகளில், இந்தியா ஏழு வெற்றிகளையும் ஒன்பது தோல்விகளையும் சந்தித்துள்ளது, இரண்டு டிராவாகியுள்ளன.

ஷமிக்கு வாய்ப்பளிக்க கங்குலி அறிவுரை

இந்திய அணியின் தோல்வி குறித்து முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, “எனக்கு கௌதம் மீது மிகுந்த அன்பு உண்டு; அவர் 2011 மற்றும் டி20 உலகக் கோப்பைகளில் சிறப்பாக செயல்பட்டார். அவர் பும்ரா, சிராஜ் மற்றும் ஷமி மீது நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். இந்த டெஸ்ட் அணியில் ஷமி இடம் பெற தகுதியானவர் என்று நான் நினைக்கிறேன். ஷமியும் சுழற்பந்து வீச்சாளர்களும் அவருக்காக டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவார்கள். கம்பீரும் இந்திய அணி நிர்வாகமும் நல்ல பாதையில் செல்ல வேண்டும். விரைவான முடிவைத் தேடுவதற்குப் பதிலாக ஐந்து நாட்களில் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற முயற்சிக்க வேண்டும். மேலும் தனது வீரர்களையும் நம்ப வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

கங்குலி

”மாற்றுக்காலம் என்பதை ஏற்க முடியாது” - புஜாரா

இந்திய அணியின் முன்னாள் வீரர் சத்தேஸ்வர் புஜாரா, “அணி, மாற்றுக் காலத்தில் இருப்பது என்பதற்காக சொந்த மண்ணில் தோற்பதை ஜீரணிக்கவே முடியாது. இதே அணி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் தோற்றால்கூட, அது ஒரு மாற்றுக் காலம் என்பதால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இந்தியாவில் உள்ள திறமையையும், ஆற்றலையும் பாருங்கள். யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில் போன்ற வீரர்களின் முதல் தர கிரிக்கெட் சாதனைகளைப் பாருங்கள். இவ்வளவு சிறப்பான சாதனைகளைக் கொண்ட வீரர்கள் இருந்தும், நாம் இந்தியாவிலேயே தோற்கிறோம் என்றால், அணியில் ஏதோ ஒரு பெரிய தவறு இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

முன்னாள் வீரர்களின் கருத்துகள், இந்திய அணியின் தேர்வு முறைகள், ஆடுகளத் தயாரிப்பு மற்றும் வீரர்களின் அணுகுமுறை குறித்த கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.

”கம்பீர் பேசுவதே அபத்தமானது”

முன்னாள் ஜாம்பவான் ஸ்ரீகாந்த், “இந்த பிட்சில் எந்த பிசாசோ, பேயோ இல்லை என்று கம்பீர் கூறி இருக்கிறார். இதுதான் எனக்கு புரியவில்லை. அப்படியென்றால், நல்ல பேட்டிங் டெக்னிக்கையாவது காட்டி இருக்க வேண்டாமா? இப்படியான ஒரு பிட்சில் எப்படி விளையாட முடியும். இப்படியொரு பிட்சில் விளையாடியும் ரன்கள் சேர்க்க வேண்டும் என்று பேசக் கூடாது. இந்த பிட்சில் எல்லாமே தவறுதான். இரு அணிகளாலும் ரன்கள் சேர்க்க முடியவில்லை என்றால், அது எப்படி நல்ல பிட்ச்சாகும்? கம்பீர் பேசுவதே அபத்தமானது. அனைத்து பேட்ஸ்மேன்களும் தடுமாறுகின்றனர்.

ஸ்ரீகாந்த்

அத்தனை பேட்ஸ்மேன்களும் டிஃபெண்ட் செய்ய முயன்று ஸ்லிப்பில் கேட்க் கொடுக்கின்றனர். அல்லது எல்பிடபிள்யூ ஆகி விக்கெட்டை பறிகொடுக்கின்றனர். தென்னாப்பிரிக்கா அணியிடம் அவ்வளவு வலிமையான பேட்டிங் வரிசை கிடையாது. இருந்தும் ஏன் இப்படியான பிட்ச் தயாரிக்கப்பட்டது? கம்பீர் அழுத்தத்தில் இருக்கிறாரா என்பது தெரியாது. ஆனால் இந்திய அணி அழுத்தத்தில் உள்ளது. தவறுகளில் இருந்து இந்திய அணி பாடம் கற்க மறுக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.