kohli - rohit - jadeja x
கிரிக்கெட்

ரோகித், கோலியை தொடர்ந்து ஜடேஜா எடுத்த முக்கிய முடிவு.. இன்ஸ்டாகிராமில் பதிவு!

2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்றபிறகு அதிக ஐசிசி கோப்பைகள் வென்ற வீரர்கள் பட்டியலில் மகேந்திர சிங் தோனி உடன் 3 கோப்பைகளோடு இணைந்தார் ரவீந்திர ஜடேஜா.

Rishan Vengai

2025 சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியில் சமபலம் கொண்ட நியூசிலாந்து அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி 7வது முறையாக ஐசிசி கோப்பை வென்று அசத்தியது.

இந்த வெற்றிக்கு பிறகு அதிக ஐசிசி கோப்பைகள் வென்ற வீரர்கள் வரிசையில், 4 கோப்பைகளுடன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி முதலிடத்தில் நீடிக்கும் நிலையில், 3 கோப்பைகளுடன் இருக்கும் எம்எஸ் தோனியுடன் இணைந்தார் ரவீந்திர ஜடேஜா.

jadeja

2013 சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகனாக ஜொலித்த ஜடேஜா, தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி 12 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலராக முடித்தார். 2013 சாம்பியன்ஸ் டிராபியை தொடர்ந்து 2024 டி20 உலகக்கோப்பை வென்ற ஜடேஜா 3 ஐசிசி கோப்பைகளுடன் நிறைவான இடத்தை பிடித்துள்ளார்.

2025 சாம்பியன்ஸ் டிராபி சாம்பியன் இந்தியா

இந்த சூழலில் 2024 டி20 உலகக்கோப்பைக்கு பிறகு விராட் கோலி, ரோகித் சர்மா உடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஜடேஜா. அதனால் 2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பிறகும் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா மூன்றுபேரும் ஓய்வை அறிவிப்பார்கள் என்ற செய்தி அதிகமாக வைரலானது.

ஓய்வை மறுத்த ரோகித், கோலி மற்றும் ஜடேஜா!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிப்பார்கள் என்ற வதந்தி பரவியநிலையில், கோப்பை வென்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரோகித் சர்மா, வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவித்தார். அதேபோல விராட் கோலியும் தொடர்ந்து விளையாட விரும்புவதாக தெரிவித்தார்.

இந்த சூழலில் ரவிந்திர ஜடேஜாவும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் “தேவையற்ற வதந்திகள் வேண்டாம், நன்றி” என்று பதிவிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவிந்திர ஜடேஜா 3 பேரும் 2027 உலகக்கோப்பையை இலக்காக வைத்திருப்பதாக தெரிகிறது. ரோகித் சர்மாவிற்கு 37 வயதாகும் நிலையில், விராட் கோலி மற்றும் ஜடேஜாவுக்கு 36 வயதாவது குறிப்பிடத்தக்கது.