robin, dhoni
robin, dhoni pt web
கிரிக்கெட்

தோனி சொன்ன அந்த வார்த்தை... ராபினை தூக்கிய குஜராத்! இளம் வீரரின் தந்தை நெகிழ்ச்சி தகவல்!

Angeshwar G

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் யாரும் எதிர்பாராத பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. பல முக்கிய வீரர்கள் ஏலத்தில் யாராலும் எடுக்கப்படாமல் இருந்தனர். மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் போன்றோர் மிக உயர்ந்த விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

சில புதுமுக வீரர்களும் ஏலத்தின் மூலம் கவனம் பெற்றுள்ளனர். சமீர் ரிஸ்வி சென்னை அணியால் 8.40 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். சுபம் துபே ராஜஸ்தான் அணிக்காக ரூ.5.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தோனியின் களமான ராஞ்சியில் இருந்து ஐபிஎல் தொடருக்கு குஜராத் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் ஒருவர் தற்போது அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளார்.

ஜார்கண்ட் விமான நிலையத்தில், ஓர் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிபவர் பிரான்சிஸ் சேவியர் மின்ஸ். இவரது 21 வயது மகனான ராபின் மின்ஸ் தற்போது குஜராத் அணியால் ரூ.3.60 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

பிரான்சிஸ் சேவியர் மின்ஸ் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். ராஞ்சியில் உள்ள கும்லா மாவட்டத்தின் தெல்காவ்ன் எனும் பகுதியை சேர்ந்த பிரான்சிஸ், ஆயுதப்படையில் சேர்ந்த பின் ராஞ்சிக்கு குடிபெயர்ந்தார். பிரான்சிஸ் மின்ஸின் மகன் ராபின் மின்ஸுக்கு இளவயதில் இருந்தே கிரிக்கெட்டில் ஆர்வம் இருந்தது. ராஞ்சி நாயகன் தோனியைப் போலவே ராபினும் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன்.

ராபின் மின்ஸ்

தோனியின் சிறுவயது பயிற்சியாளரான சன்சால் பட்டாச்சார்யாவிடம் ராபினும் பயிற்சி பெறுகிறார் என்று இண்டியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் “ராபினை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை எனில் நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்” என தோனி தெரிவித்ததாக ராபினின் தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “சமீபத்தில் விமான நிலையத்தில் தோனியைப் பார்த்தேன். அப்போது அவர் என்னிடம், ‘பிரான்சிஸ் ஜி... ராபினை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை எனில் நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்’ என்றார்” என்றுள்ளார்.

தற்போது ராபின் 3 பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.