2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ரேஸில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடர்வரை புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலேயே இருந்தது இந்தியா.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா தலைசிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய போதிலும் இந்திய அணியால் டெஸ்ட் தொடரை வெல்ல முடியவில்லை. அதற்கு இந்திய அணி முக்கியமான தருணத்தில் கேட்ச்களை கோட்டைவிட்டதே தோல்விக்கான முக்கிய காரணமாக அமைந்தது.
அந்த தொடரின் எதிரொலியாக ரவிச்சந்திரன் அஸ்வின், ரோகித் சர்மா, விராட் கோலி என்ற தலைசிறந்த வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்திலிருந்து திடீர் அறிவிப்பை வெளியிட்டனர்.
அதற்குபிறகு சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடிவருகிறது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரிலும் ஒரே போட்டியில் 3 கேட்ச்களை கோட்டைவிட்ட ஜெய்ஸ்வால், தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ஒரே போட்டியில் 4 கேட்ச்களை கோட்டைவிட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் பென் டக்கெட், ஓலி போப் மற்றும் ஹாரி புரூக் 3 பேரின் கேட்ச்களை கோட்டைவிட்டார் ஜெய்ஸ்வால். ஜெய்ஸ்வால் வழங்கிய வாய்ப்பு ஓலி போப்பை சதமடிக்கவும், ஹாரி ப்ரூக்கை 99 ரன்கள் அடிக்கவும், டக்கெட்டை அரைசதமடிக்கவும் அனுமதித்தது.
அதனைத்தொடர்ந்து தற்போது இரண்டாவது இன்னிங்ஸிலும் கேட்ச்சை தவறவிட்ட ஜெய்ஸ்வால் மொத்தமாக 5 கேட்ச்களை தவறவிட்டுள்ளார். இந்த கேட்ச்களை ஸ்லிப், கல்லி, பவுண்டரி லைன் என பல்வேறு ஃபீல்டிங்கில் நிலைகளில் தவறவிட்டுள்ளார்.
இதைப் பார்த்த ரசிகர்கள், சதமடித்தால் இத்தனை கேட்ச்களை தவறவிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது, இந்தப்போட்டியில் தோற்றால் ஜெய்ஸ்வால் தான் காரணம், ஸ்லிப், கல்லி, பவுண்டரி லைன் எல்லா இடத்திலும் கேட்ச்சை விட்டால் எந்த இடத்தில் தான் உங்களை நிறுத்துவது என கொந்தளித்து வருகின்றனர்.