miller denied single web
கிரிக்கெட்

"அவர் பேட்டிங் செய்யத் தெரியாத 11-வது வீரர் அல்ல.." மில்லரின் முடிவை சாடிய முன்னாள் இந்திய வீரர்!

2 பந்தில் 2 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் சிங்கிள் செல்லாமல் கடைசிப் பந்தை எதிர்கொண்ட டேவிட் மில்லர் அங்கிருந்து அணிக்கு தோல்வியை தேடித்தந்தார்.

Rishan Vengai

ஐபிஎல் போட்டியில் டெல்லிக்கு 2 பந்தில் 2 ரன் தேவையான நிலையில், டேவிட் மில்லர் சிங்கிள் எடுக்காமல் குல்தீப் யாதவை ஸ்ட்ரைக்கில் விடாமல் முடிவு செய்தது சர்ச்சையாகியுள்ளது. கடைசி பந்தில் 2 ரன் எடுக்க முடியாமல் டெல்லி தோல்வியடைந்தது. குல்தீப் 11-வது வீரர் அல்ல, ஒரு ரன் எடுக்கக் கூடியவர்; அவரை நம்பியிருக்க வேண்டும் என முரளி கார்த்திக், மோஹித் சர்மா விமர்சித்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 210 ரன்களை அடிக்க, சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய டெல்லி கேபிடல்ஸ் அணி 2 பந்துக்கு 2 ரன்கள் மட்டுமே தேவை என்ற வெற்றிபெறும் நிலையில் இருந்தது.

கடைசி 2 பந்து இருக்கும்போது டேவிட் மில்லர் 1 ரன்னுக்கு ஓடாமல், எதிர்ப்புறம் இருந்த குல்தீப் யாதவை ரன்னுக்கு அழைக்காமல் தவிர்த்துவிடுவார். தற்போது 1 பந்துக்கு 2 ரன்கள் என்ற நிலையில், குஜராத் பவுலர் பிரசித் கிருஷ்ணா ஸ்லோ பவுன்சரை வீச, அதை அடிக்கமுடியாமல் டெல்லியை தோல்விக்கு அழைத்துச்சென்றார் டேவிட் மில்லர்.

இந்தசூழலில் தான் டேவிட் மில்லர் 1 ரன் எடுத்து கடைசி பந்தை குல்தீப் யாதவிற்கு கொடுத்திருக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய ஸ்பின்னர் முரளி கார்த்திக் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து கிறிக்பஸ்ஸில் பேசியிருக்கும் முரளி, “அவர் பேட்டிங் செய்யத் தெரியாத 11-ஆம் நிலை வீரர் அல்ல. அவர் ஒரு 11-ஆம் நிலை வீரராகவோ அல்லது பேட்டிங்கில் முற்றிலும் பயனற்றவராகவோ இருந்திருந்தால், மில்லரின் முடிவை என்னால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் குல்தீப் ஏற்கெனவே ஒரு சிங்கிள் எடுத்திருந்தார், நீங்கள் அவரிடமும் இதுபற்றிப் பேசியிருக்கலாம். ஒருவேளை அந்த 1 ரன்னை எடுத்திருந்தால் கடைசி பந்தில் 1 ரன் எடுப்பதை தவிர்க்க எதிரணியும் ஃபீல்டர்களை அழுத்தத்தில் உள்ளே அழைத்திருப்பார்கள், உங்களுக்கு எளிதாக கடைசி 1 ரன் கூட கிடைத்திருக்கும். ஏனென்றால் அவர்கள் மீதும் அழுத்தம் உள்ளது” என்று பேசினார்.

மோஹித் சர்மா இதுபற்றி கூறுகையில், “ஒரு பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டால், குல்தீப்பால் அதை எடுக்க முடியும். அந்தச் சூழ்நிலையில், நீங்கள் ஆட்டத்தைச் சமன் செய்துவிட்டீர்கள், அதிலிருந்து உங்களால் தோற்க முடியாது. எனவே, முதலில் அந்தப் பாதுகாப்பை உறுதி செய்திருக்க வேண்டும். இரண்டு பந்துகளில் ஆறு ரன்கள் தேவைப்பட்டால், என்னால் புரிந்துகொள்ள முடியும், ஏனென்றால் குல்தீப்பிடம் சிக்ஸர் அடிக்கும் சக்தி இல்லை. ஆனால் ஒரு ரன் தேவைப்பட்டபோது, ​​குல்தீப் எளிதாக ஒரு ரன் எடுத்திருக்கலாம்" என்று மோஹித் சர்மா கூறினார்.