MS Dhoni
MS Dhoni X
கிரிக்கெட்

சதமடித்த போதும் ஏன் வாய்ப்பை பறித்தீர்கள் என தோனியிடம் கேட்க விரும்புகிறேன்! - ஓய்வுபெற்ற IND வீரர்

Rishan Vengai

பொதுவாக இந்திய கிரிக்கெட் அணியின் தொப்பியைப் பெறவேண்டும் என்பது ஒவ்வொரு இந்திய வீரர்களின் பெருங்கனவாகும். பல திறைமை வாய்ந்த வீரர்கள் நிரம்பிய இந்த நாட்டில், பல சிறந்த வீரர்களுக்கு கடைசிவரை இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காமலே போயுள்ளது. அதற்கான விரக்தியை பல வீரர்களும் தங்களுடைய ஓய்விற்கு பிறகு வெளிப்படுத்தியுள்ளனர்.

அந்தவகையில் திறமைகள் இருந்தும் நிராகரிக்கப்பட்ட வீரர்களில் அம்பத்தி ராயுடு, பத்ரிநாத், தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் வரிசையில் மனோஜ் திவாரியும் அடங்குவார். 2008-ம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியிலும், 2011-ல் இந்திய டி20 அணியில் அறிமுகம் கிடைத்தபிறகும் மனோஜ் திவாரிக்கு டெஸ்ட் கேப் கடைசிவரை கிடைக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் 15 போட்டிகளுக்கு அவருக்கு மற்ற ஃபார்மேட்களிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

manoj tiwari - ms dhoni

இந்நிலையில் முதல்தர கிரிக்கெட்டில் 10ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்தபோதும், வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ரன்கள் அடித்த போதும், ஏன் எனக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்று அப்போது கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனியிடம் கேட்க விரும்புவதாக மனோஜ் திவாரி தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 14 வருட கிரிக்கெட் பயணத்திற்கு அவர் நேற்று ஓய்வை அறிவித்தார்.

அப்போதைய கேப்டன் தோனியிடம் கேட்க விரும்புகிறேன்!

ஓய்வை அறிவித்த பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய மனோஜ் திவாரி, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய பிறகு டெஸ்ட் தொப்பியைப் பெறமுடியாதது தான் மிகப்பெரிய வருத்தம் என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய மனோஜ் திவாரி, “நான் 65 முதல் தர போட்டிகளில் விளையாடி முடித்தபோது, ​​எனது பேட்டிங் சராசரி 65ஆக இருந்தது. அப்போது ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்திருந்தது, சென்னையில் நடந்த நட்புரீதியிலான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான் 130 ரன்கள் எடுத்திருந்தேன். பிறகு இங்கிலாந்துக்கு எதிராக நட்பு ஆட்டத்தில் 93 ரன்கள் எடுத்தேன். நான் அப்போது டெஸ்ட் கேப்பிற்கு மிகவும் நெருக்கமாக இருப்பதாக உணர்ந்தேன். ஆனால் அப்போது எனக்கு பதிலாக யுவராஜ் சிங்கை தேர்வு செய்தார்கள்.

tiwari - dhoni

சதம் அடித்ததற்காக ஆட்ட நாயகன் விருது பெற்றபோதும் கூட நான் புறக்கணிக்கப்பட்டேன்... ஒருமுறை இரண்டுமுறை அல்ல 14 முறை நான் புறக்கணிக்கப்பட்டேன். ஒரு வீரருக்கு தன்னம்பிக்கை உச்சத்தில் இருக்கும்போது யாரோ ஒருவர் அதை அழித்துவிடுகிறார் என்றால், அதற்குபிறகு அந்த வீரர் அங்கேயே முடிந்துவிடுகிறார்" என்று மனோஜ் திவாரி தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அவருடை இந்த பதிலுக்கு எதிர்கேள்வி எழுப்பிய செய்தியாளர், “நான் உங்களிடம் நேராகவே கேட்க விரும்புகிறேன், அப்போது கேப்டனாக இருந்தவர் எம் எஸ் தோனி தானே” என்று கூறினார்.

manoj tiwari - ms dhoni

அதற்கு ஆமாம் என பதிலளித்த திவாரி, “ஆமாம், எம்.எஸ். தோனிதான் கேப்டனாக இருந்தார். அவரிடம் ஒரு கேள்வி கேட்க வாய்ப்பு கிடைத்தால், சதம் அடித்த பிறகும் நான் ஏன் அணியில் இருந்து நீக்கப்பட்டேன் என்று கேட்க விரும்புகிறேன். குறிப்பாக அந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் யாரும் ரன் எடுக்கவில்லை, விராட் கோலியும் இல்லை, ரோஹித் சர்மா அல்லது சுரேஷ் ரெய்னா யாரும் இல்லை. இருந்தபோதும் என்னை எடுக்கவில்லை, இப்போது என்னிடம் இழப்பதற்கும் எதுவும் இல்லை” என்று மனோஜ் திவாரி விரக்தியில் பேசியதாக நியூஸ் 18 மேற்கோள் காட்டியுள்ளது.