லஹிரு குமாரா
லஹிரு குமாரா Shailendra Bhojak
கிரிக்கெட்

ENGvSL | ஸ்டோக்ஸ், பட்லர், லிவிங்ஸ்டன்... இங்கிலாந்தின் பெரும் தலைகளை காலி செய்த லஹிரு குமாரா..!

Viyan
போட்டி 25: இலங்கை vs இங்கிலாந்து
முடிவு: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி (இங்கிலாந்து - 156 ஆல் அவுட், 33.2 ஓவர்கள்; இலங்கை - 160/2, 25.4 ஓவர்கள்)
ஆட்ட நாயகன்: லஹிரு குமாரா (இலங்கை)
பௌலிங்: 7-0-35-3

இலங்கை அணியில் வேகப்பந்துவீச்சாளராக இருப்பது எளிதான விஷயமில்லை. சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் அதிகம் ஆடியவர்களுக்கு தங்கள் திறமையை நிரூபிக்க சரியான வாய்ப்புகள் கிடைக்காது. அதனாலேயே ஓரிரு மோசமான செயல்பாட்டுக்குப் பிறகு அவர்கள் அணியில் தங்கள் இடத்தை இழப்பார்கள். கடந்த ஒரு தசாப்தமாகவே அந்த அணியில் இதுதான் நிலை. அதனாலேயே மற்ற அணிகளுக்கு இருப்பது போல் இலங்கை அணிக்கு பௌலிங் யூனிட்டை தலைமை ஏற்கக் கூடிய ஒரு கன்சிஸ்டென்ட்டான பிளேயர் கிடைக்கவில்லை. நம்பிக்கை கொடுக்கக்கூடியவராக விளங்கிய நட்சத்திர ஸ்பின்னர் வனிந்து ஹசரங்காவும் காயத்தால் இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கவில்லை. அது இலங்கையின் பௌலிங் யூனிட்டை பலவீனமாக்கியது.

Lahiru Kumara

இருந்தாலும் அந்த அணிக்கு நம்பத்தகுந்த ஒரு வீரராக உருவெடுத்தார் தில்ஷன் மதுஷன்கா. இந்த உலகக் கோப்பையில் இலங்கையின் சிறந்த பௌலராக உருவெடுத்தார். ஆனால், மற்ற இடங்களில் அதே பழைய நிலை தான். கசுன் ரஜிதா, மதீஷா பதிரானா, தசுன் ஷனகா, சமிகா கருணரத்னே, லஹிரு குமாரா என பல பௌலர்கள் பயன்படுத்தப்பட்டுவிட்டார்கள். இந்தப் போட்டியில் விளையாடினால் அடுத்த போட்டியில் வாய்ப்பு கிடைக்காது. இதுதான் லஹிரு குமாராவுக்கும் நடந்தது.

இந்த உலகக் கோப்பையின் முதல் இரு போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எதிர்பார்த்த அளவுக்கு தாக்கம் ஏற்படுத்தாத ஸ்பின்னர் துனித் வெல்லலாகேவுக்குப் பதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் களம் கண்டார் லஹிரு குமாரா. ஆனால் அந்தப் போட்டியில் நான்கே ஓவர்கள் பந்துவீசி 47 ரன்கள் வாரி வழங்கினார். அதனால் நெதர்லாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் அதற்கடுத்த போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக வாய்ப்பு பெற்றார் அவர். அதை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ளவும் செய்தார்.

ஏஞ்சலோ மேத்யூஸ் கொடுத்த பிரேக்கைப் பயன்படுத்தி இலங்கை பௌலர்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை நெருக்கடிக்கு உள்ளாக்கினார்கள். மூன்று விக்கெட்டுகள் அடுத்தடுத்து போயிருந்த நிலையில், பென் ஸ்டோக்ஸுடன் இணைந்தார் கேப்டன் ஜாஸ் பட்லர். இந்தக் கூட்டணி எப்படிப்பட்ட தாக்கம் ஏற்படுத்தும் என்பதை 2019 உலகக் கோப்பை ஃபைனலில் பார்த்திருக்கிறோம். அதுபோல் ஒரு பார்ட்னர்ஷிப் அமைப்பார்கள் என்று இங்கிலாந்து ரசிகர்கள் நம்பியிருப்பார்கள். ஆனால் குமாரா விடவில்லை. தொடர்ந்து சீரான லைனில் பந்துவீசிய அவர், பட்லரை வெறும் 8 ரன்களுக்கு வெளியேற்றினார். அடுத்ததாகக் களமிறங்கினார் லியாம் லிவிங்ஸ்டன். கடந்த போட்டியில் அணியிலிருந்து விலக்கப்பட்டிருந்த அவர், தன் திறமையை நிரூபிக்க நினைத்திருப்பார். ஆனால் அதற்கும் குமாரா வாய்ப்பு கொடுக்கவில்லை. அடுத்த ஓவரிலேயே லிவிங்ஸ்டனை வெளியேற்றினார். தன் முதல் ஸ்பில்லில் 4 ஓவர்கள் பந்துவீசி 16 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 பெரிய விக்கெட்டுகளை சாய்த்தார் அவர்.

ஓரளவு விக்கெட்டுகள் போயிருந்தாலும், நம்பிக்கை நாயகன் பென் ஸ்டோக்ஸ் ஒரு பெரிய இன்னிங்ஸை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதனால் 29வது ஓவரில் மீண்டும் குமாராவை அழைத்துவந்தார் இலங்கை கேப்டன் குசல் மெண்டிஸ். முதல் ஓவரை கட்டுக்கோப்பாகப் பந்துவீசி 3 ரன்கள் மட்டுமே கொடுத்த அவர், அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே ஸ்டோக்ஸின் விக்கெட்டை சாய்த்தார். இலங்கை எதிர்பார்த்தது அந்தப் பந்திலேயே நிறைவேறியது. தன் கடைசி 7 பந்துகளில் கொஞ்சம் ரன் கொடுத்திருந்தாலும், மூன்று பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தி, தன் நிர்வாகம் நம்பும்படியான ஒரு செயல்பாட்டையும் அவர்களுக்குக் காட்டியிருக்கிறார்.

ஆட்ட நாயகன் என்ன சொன்னார்?

"என்னுடைய செயல்பாட்டால் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இதற்காக நான் கடுமையாக உழைத்தேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் செய்ததில் இருந்து பெரிதாக நான் எதையும் மாற்றிடவில்லை. அந்த நாள் சரியாகப் போகவில்லை. அவ்வளவுதான். ஆனால் அதன்பின் கடுமையாக உழைத்தேன். இன்று நல்ல முடிவு கிடைத்துவிட்டது. அதுமட்டுமல்லாமல் மிட் ஆஃப் திசையில் நின்றுகொண்டு ஏஞ்சலோ மேத்யூஸ் எனக்குப் பெரும் உதவியாக இருந்தார். அவரது அனுபவம் அளவிட முடியாதது. அவர் அணியில் மீண்டும் இணைந்திருப்பது எங்களுக்கு மிகவும் நல்ல விஷயம். மிடில் ஓவர்களில் எந்தத் தவறும் செய்யாமல் சீராகப் பந்துவீசவேண்டும் என்று திட்டம் தீட்டியிருந்தோம். அதை சரியாக நடைமுறைப்படுத்தினோம். அதற்குப் பலனாக விக்கெட்டுகள் கிடைத்தன" -
லஹிரு குமாரா