Ben Stokes
Ben Stokes Shashank Parade
கிரிக்கெட்

ENGvSA | முந்தைய போட்டியின் தோல்வியிலிருந்து மீளப்போவது யார்..?

Viyan
போட்டி 20: இங்கிலாந்து vs தென்னாப்பிரிக்கா
மைதானம்: வான்கடே, மும்பை
போட்டி தொடங்கும் நேரம்: அக்டோபர் 21, மதியம் 2 மணி

2023 உலகக் கோப்பையில் இதுவரை:

இங்கிலாந்து
போட்டிகள் - 3, வெற்றி - 1, தோல்விகள் - 2, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 2
புள்ளிப் பட்டியலில் இடம்: ஐந்தாவது
சிறந்த பேட்ஸ்மேன்: டேவிட் மலான் - 186 ரன்கள்
சிறந்த பௌலர்: ரீஸ் டாப்லி - 5 விக்கெட்டுகள்
நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு இந்தத் தொடர் மோசமாகவே தொடங்கியிருக்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோற்றவர்கள், அடுத்த போட்டியில் வங்கதேசத்தைப் பந்தாடினார்கள். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் மூன்றாவது போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் படுதோல்வி அடைந்தது அந்த அணி.

Quinton de Kock

தென்னாப்பிரிக்கா
போட்டிகள் - 3, வெற்றிகள் - 2, தோல்வி - 1, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 4
புள்ளிப் பட்டியலில் இடம்: மூன்றாவது
சிறந்த பேட்ஸ்மேன்: குவின்டன் டி காக் - 229 ரன்கள்
சிறந்த பௌலர்: ககிஸோ ரபாடா - 7 விக்கெட்டுகள்
அடுத்தடுத்த 2 வெற்றிகளோடு உலகக் கோப்பையை மிகச் சிறப்பாகத் தொடங்கியது தென்னாப்பிரிக்கா. உலக கோப்பையின் மிகப் பெரிய ஸ்கோரை பதிவு செய்து இலங்கையைப் பந்தாடியவர்கள், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு ஷாக் கொடுத்தார்கள். ஆனால் நெதர்லாந்து அணியோ இவர்களுக்கு அதைவிடப் பெரிய ஷாக் கொடுத்துவிட்டது.

ஸ்டோக்ஸ் இஸ் பேக்..!

இங்கிலாந்து அணி யாரும் எதிர்பாராத வகையில் மிகவும் சுமாராகவே விளையாடி வருகிறது. அவர்களின் பந்துவீச்சு அச்சுறுத்தும் வகையில் இல்லை. பேட்டிங்கும் சீராக இல்லை. டேவிட் மலான் வங்கதேசத்துக்கு எதிராக அடித்தது தவிர்த்து அசத்தலான இன்னிங்ஸ் என்று சொல்லும் வகையில் எதுவும் அமையவில்லை. அதனால் ஒட்டுமொத்த இங்கிலாந்து அணியும் எழுச்சி காண வேண்டும். ஆப்கானிஸ்தானுடனான தோல்வி அவர்களுக்கு நிச்சயம் அதிர்ச்சியாக இருக்கும். நம்பிக்கையை உடைக்கும். ஆனால் அதற்கு மருந்திடும் வகையில் ஒரு செய்தி வந்திருக்கிறது. அது அந்த அணியின் முன்னாள் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஃபிட்டாக இருக்கிறார் என்பது. காயம் காரணமாக இந்த உலகக் கோப்பையில் இனும் அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. தொடர்ந்து வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தாலும் 100 சதவிகித ஃபிட்னஸை எட்டாததால், அவரை அணி நிர்வாகம் ரிஸ்க் எடுக்க விடவில்லை. ஆனால் இப்போது அவர் முழு ஃபிட்னஸோடு இருப்பதாக நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. ஸ்டோக்ஸின் வருகை பேட்டிங் & பௌலிங்கை பலப்படுத்துவதோடு, அவரது அனுபவமும் அணிக்கு பெரிய அளவில் கைகொடுக்கும். மிடில் ஆர்டர் நிச்சயம் பலப்படும். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு அது கூடுதல் சுதந்திரம் கொடுக்கும். அவருக்குப் பதில் பிளேயிங் லெவனில் இடம்பெற்ற ஹேரி ப்ரூக் ஓரளவு நன்றாக ஆடியிருப்பதால், பேட்டிங்கில் சொதப்பிக்கொண்டிருக்கும் லியம் லிவிங்ஸ்டன் வெளியேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்க பௌலிங் முன்னேறுமா?

Kagiso Rabada

தென்னாப்பிரிக்க அணி முதல் போட்டியை விளையாடி முடித்தபின் அவர்கள் 2023 மும்பை இந்தியன்ஸ் போல என்று குறிப்பிட்டிருந்தோம். பேட்டிங்கில் வெறித்தனம் காட்டினாலும், பந்துவீச்சு சுமாராகவே இருக்கிறது. முதலிரு போட்டிகளில் அது தெரியவில்லை என்றாலும், நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பௌலிங் காலை வாறிவிட்டது. பேட்ஸ்மேன்களையெல்லாம் வெளியேற்றிவிட்டு மிடில் ஆர்டரையும் டெய்லையும் நன்கு ஆடவிட்டனர் தென்னாப்பிரிக்க பௌலர்கள். ராபாடா மட்டும் நம்பிக்கை கொடுக்கிறார். மற்றபடி யான்சன், எங்கிடி, கொட்சியா போன்றவர்கள் கற்பனைக்கு அப்பார்ப்பட்டு ரன்களை வாரி வழங்குகிறார்கள். இங்கிலாந்து போன்ற ஒரு அதிரடி அணிக்கு எதிராக இவர்கள் பந்துவீச்சு முன்னேற்றம் காணவில்லையெனில் மிகவும் கடினம் தான்.

மைதானம் எப்படி?

புகழ்பெற்ற வான்கடே மைதானத்தில் நடக்கும் முதல் 2023 உலகக் கோப்பை போட்டி இதுதான். எப்போதும்போல் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளமாக இது இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

கவனிக்கவேண்டிய வீரர்கள்

இங்கிலாந்து - பென் ஸ்டோக்ஸ்: 2019 உலகக் கோப்பையின் ஆட்ட நாயகன் இந்தத் தொடரில் முதல் முறையாகக் களமிறங்கப்போகிறார். இந்த நான்கைந்து ஆண்டுகளில் இங்கிலாந்து அணி தடுமாறும்போதெல்லாம் அவர்களை தாங்கிப் பிடித்திருக்கிறார். இப்போது இன்னொருமுறை அந்த அணிக்காக அவர் தேவைப்படுகிறார்.

தென்னாப்பிரிக்கா - குவின்டன் டி காக்: வான்கடே ஆடுகளத்தில் மும்பை இந்தியன்ஸுக்காக ஆடிப் பழக்கப்பட்டவர். இந்த உலகக் கோப்பையிலும் ஏற்கெனவே 2 சதங்கள் அடித்திருக்கிறார். இங்கிலாந்து பௌலிங்கும் பெரிய அளவு சோபிக்காத நிலையில் இன்னொரு சதத்தை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.