ஹெடிங்லி டெஸ்டில் பாகிஸ்தானை 117 ரன்னுக்கு சுருட்டிய இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் ராபின்சன், ஜோஷ் டங் தலா 5 விக்கெட்டுகள் எடுத்து வரலாறு படைத்தனர்.
கிரிக்கெட்டில் கடைப்பிடிக்கப்படும் பழமையான மரபுகளிடன் படி ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தும் பந்துவீச்சாளர் அந்தபந்தை தனதாக்கி கொள்வார். ஆனால் ஒரு டெஸ்ட் போட்டியின் ஒரே இன்னிங்ஸில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தும்போது, கிரிக்கெட் பந்து யாருக்குச் சொந்தமாகும்? இந்த கேள்விக்கு பதிலாகத் தான் இரண்டு பவுலர்கள் வித்தியாசமான ஒரு முடிவை எடுத்துள்ளனர்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியை, இங்கிலாந்தின் 2 வேகப்பந்துவீச்சாளர்களான ஆலி ராபின்சன் மற்றும் ஜோஷ் டங் இருவரும் இரட்டை துப்பாக்கி என துளைத்தெடுத்தனர்.
வேகத்தில் மிரட்டிய இந்த ஜோடி முதல் நாள் ஆட்டத்திலேயே பாகிஸ்தானை 117 ரன்னுக்கு சுருட்டி எறிந்தது. அந்த நாள் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சுக்குச் சொந்தமானதாக மாறியது. ராபின்சனும் டங்கும் தலா ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி, பாகிஸ்தானின் 10 விக்கெட்டுகளையும் பகிர்ந்து கொண்டனர்.
கையில் ஏற்பட்ட காயம் காரணமாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் விளையாடாத நிலையில், ஒட்டுமொத்தமாக பேட்டிங் யூனிட்டும் சிதைந்தது. 6 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பாகிஸ்தான் அணியை, மூன்றாவது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த அப்துல்லா ஷஃபீக் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோர் 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டு எடுத்துவந்தனர். இருப்பினும் மின்னல் வேகத்தில் பந்துவீசிய ராபின்சன் - டங் ஜோடி பந்துவீச்சில் ஒரு மாயாஜாலம் நிகழ்த்தி பாகிஸ்தானை சுழன்றடித்தது. ராபின்சன் 51 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும், டங் 46 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இந்தசூழலில் முதல் நாள் ஆட்டத்திற்கு பின், ஒரே இன்னிங்ஸில் தலா 5 விக்கெட்டுகள் வீழ்த்திய 2 வேகப்பந்துவீச்சாளர்களும் பந்தை தாங்களே வைத்துக்கொள்ள திட்டமிட்டனர். அது எப்படி சாத்தியம்? என்ற கேள்வி எழவே ராபின்சன், பந்தை இரண்டாக வெட்டி வைத்துக்கொள்வோம் என்ற முடிவை டங்கிடம் கூறினார். இருவரும் அதை ஏற்றுக்கொண்டபிறகு பந்தை இரண்டாக வெட்டி பிரித்துக்கொண்டனர்.
கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக அரங்கேறிய இச்சம்பவம் குறித்து பேசிய இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டங், “நானும் ராபின்சனும் வெளியே நடந்துகொண்டிருந்தபோது பந்தை இரண்டாகப் பிரிக்கலாம் என்று ராபோ கூறினார். நாம் அதைச் செய்ய வேண்டும், அது மிகவும் அருமையாக இருக்கும். அதுஒரு நல்ல தருணமாக அமையும் என்று கூறினேன். உண்மையில் இப்படி நடப்பதை நான் முதல் முறையாகப் பார்க்கிறேன். இதை நான் நிச்சயம் எங்காவது பதிவிடுவேன் என்று கூறி ராபின்சன் இரண்டாக உடைக்கப்பட்ட பந்தை செய்தியாளர்களிடம் காற்றினார்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 2 இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தனர். இதில் குறிப்பிடும் விசயம் என்னவென்றால் 2006ஆம் ஆண்டும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தான் அந்த சம்பவமும் நடந்திருந்தது. 2006-ல் நடந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஸ்டீவ் ஹார்மிசன் மற்றும் மான்டி பனேசர் இருவரும் தலா 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.