இங்கிலாந்து எக்ஸ் தளம்
கிரிக்கெட்

SaVsEng T20| ரன்மழை பொழிந்த இங்கிலாந்து.. 304 ரன்களை குவித்து அதிரடி!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் 304 ரன்களை குவித்து இங்கிலாந்து சாதனை படைத்தது.

Prakash J

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் 304 ரன்களை குவித்து இங்கிலாந்து சாதனை படைத்தது.

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி, அந்நாட்டு அணியுடன் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தற்போது இவ்விரு அணிகளும் டி20 தொடரில் பங்கேற்றுள்ளன. முன்னதாக, இந்த தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வென்றிருந்த நிலையில், 2வது போட்டி நேற்று மான்செஸ்டரில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் ஜெயித்த தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து இங்கிலாந்து முதலில் பேட் செய்தது. அவ்வணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பிலிப் சால்ட்டும், ஜோஸ் பட்லரும் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைச் சிதறடித்தனர். இதில் பிலிப் சால்ட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 60 பந்துகளில் 15 பவுண்டரி, 8 சிகஸ்ருடன் 141 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் ஜோஸ் பட்லர் 30 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் ஹாரி புரூக்கும் 41 ரன்கள் விளாச, அந்த அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்தது. டெஸ்ட் விளையாடும் இரண்டு நாடுகளுக்கு இடையிலான டி20 போட்டியில் ஓர் அணி 300 ரன்களை எட்டியது இதுவே முதல் முறை ஆகும். கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் பங்களாதேஷுக்கு எதிராக இந்தியா 297/6 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில் டி20 போட்டியில், ஜிம்பாப்வே அணி 344 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளது. அது, கடந்த ஆண்டு காம்பியா அணிக்கு எதிராக அந்த ரன்னை எடுத்தது. அதற்கு அடுத்த இடத்தில், நேபாள அணி 314 ரன்களுடன் உள்ளது. 2023ஆம் ஆண்டு, அவ்வணி மங்கோலியாவிற்கு எதிராக இந்த ரன்னை எடுத்தது. எனினும், டி20யில் இங்கிலாந்தின் அதிகபட்ச ஸ்கோராக இது பதிவாகியுள்ளது. அவ்வணி, 2022இல் டெர்பிஷையருக்கு எதிராக சோமர்செட் 5 விக்கெட்டுக்கு 265 ரன்கள் எடுத்திருந்தது. அதேபோல், பில் சால்ட் எடுத்த 141 ரன்கள், ஆண்கள் டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அதிகபட்ச ஸ்கோர் ஆகும். தவிர, ஆண்கள் டி20 போட்டிகளில் ஏழாவது அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

பின்னர் 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியில், தொடக்க வீரரும் கேப்டனுமான எய்டன் மார்க்ராம் அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்தார். ஆனால், பின்னர் வந்த வீரர்கள் சோபிக்கத் தவறியதால் அந்த அணி, 16.1 ஓவர்களில் 158 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 3 வீரர்கள் டக் அவுட் முறையில் பெவிலியன் திரும்பியிருந்தனர். இதையடுத்து, இங்கிலாந்து அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்களையும், சாம் கரண், தாவ்சன், ஜேக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இந்தத் தொடரில் இவ்விரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்று சமநிலையில் உள்ளன. 3வது மற்றும் கடைசிப் போட்டி நாளை நடைபெற இருக்கிறது.