ENG v AUS Ashes 2023
ENG v AUS Ashes 2023  Twitter
கிரிக்கெட்

வீடியோ: ‘இந்த மாதிரி அவுட்ட பார்த்ததே இல்ல’-ஆஷஸ் தொடரில் வித்தியாசமான முறையில் அவுட்டான ஹாரி ப்ரூக்!

சங்கீதா

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அபார வெற்றிபெற்று கோப்பையை தட்டிச் சென்ற ஆஸ்திரேலிய அணி, தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆஷஸ் தொடரில் பங்கேற்றுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் பாரம்பரியமிக்க ஆஷஸ் தொடர், இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான போருக்கு இணையாகக் கருதப்படும் ஆஷஸ் தொடரை, இம்முறை கைப்பற்றப் போவது யார் என்ற எதிர்பார்ப்பில் டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர்.

harry brook

ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்தப் போட்டியில், இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்களான கிராவ்லே 61 ரன்களுடனும், பென் டக்கட் 12 ரன்களுடனும் அவுட்டாகினர். போப் 31 ரன்களில் அவுட்டாக, பின்னர் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ருக் இங்கிலாந்து அணியின் ரன் ரேட்டை உயர்த்தி வந்தனர். முதல் நாளில் மதிய உணவு இடைவேளைக்குப் பின் இரண்டாவது செஷனை ஆடவந்த ஹாரி ப்ரூக் வித்தியாசமான முறையில் அவுட்டாகியுள்ளது வைரலாகி வருகிறது.

38-வது ஓவரை ஆஸ்திரேலிய வீரர் லயன் வீச வந்தார். அப்போது அந்த ஓவரின் இரண்டாவது பந்தை ஹாரி ப்ரூக் அடிக்க முயற்சித்த நிலையில், அந்தப் பந்து மேலே சென்று விக்கெட் கீப்பர் கைக்கும் வராமல் கீழே விழுந்து பவுன்சாகி ஸ்டம்பில் நேராக பட்டுச் சென்றது. இதையடுத்து 37 பந்துகளை சந்தித்த ஹாரி ப்ரூக் 32 ரன்களில் அவுட்டாகி சென்றார்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான ரிக்கி பாண்டிங், வெவ்வேறு விதமான வகையில் அவுட் ஆவதை பார்த்திருக்கிறேன் என்றும், ஆனால் இந்த மாதிரியான அவுட்டை பார்த்ததில்லை என்றும் வர்ணனையில் கருத்து தெரிவித்தார்.