இந்திய அணியில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த முகமது சிராஜ், அணியிலிருந்து நீக்கப்பட்டதால் மைதானத்தில் கண்கலங்கினார். முன்னாள் வீரர்கள் இந்த முடிவை கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர். ரசிகர்கள் சிராஜுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவுசெய்து வருகிறார்கள்.
இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாட்டு மைதானங்களில் கூட இந்திய அணியால் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கிய பந்துவீச்சாளர்களில் தவிர்க்க முடியாத இடத்தில் இருப்பவர் முகமது சிராஜ். பும்ரா இல்லாமல் போனால் கூட இந்திய அணிக்காக தனியாளாக போராடி கிட்டத்தட்ட 10-க்கும் மேற்பட்ட டெஸ்ட் தொடர்களை காப்பாற்றி கொடுத்துள்ளார் முகமது சிராஜ்.
2020-21 ஆஸ்திரேலியா தொடரை 2-1 என இந்தியா வென்றபோது 13 விக்கெட்டுகளுடன் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலராக இருந்தார் சிராஜ். அதேபோல வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை தொடர் என அனைத்திலும் சிராஜ் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி தொடரை வெல்ல காரணமாக இருந்தார்.
இதைக்கடந்து இங்கிலாந்து மண்ணில் 2021-22 டெஸ்ட் தொடரை இந்தியா 2-2 என சமன் செய்தபோது 18 விக்கெட்டுகளை வீழ்த்திய சிராஜ், புகழ்பெற்ற லார்ட்ஸ் வெற்றியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அதோடு தென்னாப்பிரிக்கா கண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை 1-1 என இந்தியா சமன்செய்த போது, சிராஜ் 15 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறந்த பந்துவீச்சை பதிவுசெய்தார்.
இவற்றை எல்லாம் கடந்து கடந்தாண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-2 என இந்திய அணி சமன்செய்தபோது, ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய சிராஜ் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வெற்றிபெற வைத்ததோடு, தொடரையும் 2-2 என சமன்செய்யவைத்து ஹீரோவாக ஜொலித்தார்.
மேலும் நடந்துவரும் 2026-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 11 போட்டிகளில் விளையாடி 43 விக்கெட்டுகளுடன் இந்தியாவிற்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலராக சிராஜே நீடிக்கிறார். இப்படி தொடர்ந்து இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டுவரும் முகமது சிராஜை தான் இந்திய அணி பெஞ்சில் அமரவைத்து வருகிறது. அதிலும் அவருக்கு பதிலாக அன்ஷூல் கம்போஜ், குர்னூர் ப்ரார் போன்ற பவுலர்கள் இடம்பெறுவது இந்திய ரசிகர்களை வேதனைக்குள்ளாக்கி வருகிறது. ’ஏன் யா சிராஜ் உங்களுக்கு அவ்வளவு கேவலமா போய்ட்டாரா’ என ரசிகர்கள் வருத்தத்தை பதிவுசெய்துவருகின்றனர்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிராஜ் இடம்பெறாததால் தான் இந்திய அணியால் கடைசி நாளில் விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிபெற முடியவில்லை என சொல்லப்பட்ட நிலையில், இரண்டாவது டெஸ்ட்டிலும் சிராஜ் நீக்கப்பட்டுள்ளார். ஆடும் லெவனை இந்தியா அறிவித்தபிறகு உடைந்துபோன சிராஜ், கண்கள் கலங்கிய நிலையில் மைதானத்தில் நடந்துசென்ற காட்சிகள் இடம்பெற்றன. சோனி ஸ்போர்ட்ஸ் கமெண்டரியில் இருந்த முரளி கார்த்திக் மற்றும் அஜிங்கியா ரஹானே இருவரும் சிராஜ் அழுகிறார் என்றும், இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் கூறினர். அதேபோல முகமது கைஃப், ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்களும் சிராஜ் நீக்கப்பட்டதை கேள்வி எழுப்பியுள்ளனர்.
இப்படி தான் வாய்ப்பு கொடுக்காமல் நிராகரித்து அஸ்வின், கோலி, ரோகித், ஷமியை எல்லாம் ஓய்வை அறிவிக்க வைச்சீங்க, சிராஜையாவது விட்டுவைங்க என ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.