சூர்யகுமாரிடம் கைக்குலுக்காமல் சென்றாரா பாகிஸ்தான் கேப்டன் web
கிரிக்கெட்

சூர்யகுமாரிடம் கைக்குலுக்காமல் சென்றாரா பாகிஸ்தான் கேப்டன்..? வெளியான உண்மை தகவல்!

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதட்டமான சூழ்நிலைக்கு இடையே இரண்டு நாட்டு கிரிக்கெட் அணிகளும் UAE-ல் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்றுள்ளன.

Rishan Vengai

இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் கைக்குலுக்காமல் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா வெளியேறியதாக செய்திகள் வெளியான நிலையில், உண்மையில் என்ன நடந்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

2025 ஆசிய கோப்பை தொடரானது டி20 வடிவத்தில் செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 28 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறகிறது. மொத்தம் 19 போட்டிகள் துபாய் மற்றும் அபுதாபி மைதானங்களில் நடைபெற உள்ளன.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஹாங்ஹாங், ஓமன் முதலிய 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, ஓமன் முதலிய அணிகள் ஏ பிரிவிலும், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் முதலிய அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.

IND vs PAK

இந்த சூழலில் 8 அணிகளும் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பு நேற்று தொடர் தொடங்குவதற்கு முன்னர் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இந்திய கேப்டன் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் இருவரும் கைக்குலுக்கவில்லை என்ற தகவல் வேகமாக பரவி சர்ச்சையை கிளப்பியது.

உண்மையில் என்ன நடந்தது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கை குலுக்காமல் சென்றாரா பாகிஸ்தான் கேப்டன்..

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா பதிலடி கொடுத்தது.

இந்த மோதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், இருதரப்பிலான கிரிக்கெட் தொடர்களும் இனி நடைபெறாது எனக் கூறப்பட்டது. இதன் காரணமாக, நடப்பாண்டு ஆசியக் கோப்பை திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்விகளும் தொடர்க்கு முன் எழுந்தன.

ind vs pak

ஆனால் திட்டமிட்டப்படி ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டதோடு ஒரே பிரிவில் இந்தியாவும் பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளன. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து இந்திய அரசியல் கட்சிகள் சார்பிலும், மனோஜ் திவாரி, கேதார் ஜாதவ் போன்ற பல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது.

இந்த சூழலில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இடம்பெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் கேப்டன்கள் மேல்தான் முழுகவனமும் செலுத்தப்பட்டன. ஆனால் செய்தியாளர் சந்திப்பு முடிந்த சிலநொடியில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்ற கேப்டன்களுக்கு கைலுக்க ஆரம்பித்தார். ஆனால் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா யாரிடமும் கைக்குலுக்காமல் மேடையிலிருந்து வெளியேறினார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலான நிலையில், பின்னர் மேடையிலிருந்து கீழறிங்கிய பிறகு காத்திருந்த சல்மான் ஆகா சூர்யகுமாரிடம் கைலுக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

உண்மையில் நடந்தது என்ன?

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பு நடந்த இடத்திலிருந்து செய்தியாளர் ஒருவர் உண்மையில் அங்கு என்ன நடந்தது என்று விளக்கியுள்ளார்.

இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “பெரும்பாலான பத்திரிகையாளர்கள் இந்தியாவிலிருந்து வந்திருந்தனர். பாகிஸ்தான் மற்றும் இலங்கையிலிருந்து மிகக் குறைவு, வங்கதேசத்திலிருந்து கொஞ்சம் பேர் வந்திருந்தனர்.

உண்மையில், நான் மிகவும் சிறந்த, அன்பான பத்திரிகையாளர் சந்திப்பைப் பார்த்தேன். அங்கு இரண்டு கேப்டன்களுக்கும் இடையே எந்த விரோதமும் இல்லை.

அந்த பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த சிறிது நேரத்திலேயே, கேப்டன்கள் மேடையை விட்டு வெளியேறினர், சூர்யா மேடையின் பின்புறம் செல்ல முயன்றார், அப்போது சல்மான் ஆகா கைகுலுக்கினார், அதனால் நாம் கைக்குலுக்கினார்களா? இல்லையா? என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டியதில்லை” என்று வெளிப்படையாக ஸ்போர்ட்ஸ் டுடே உடன் பேசினார்.