rayudu - virat kohli web
கிரிக்கெட்

’கோலி தான் ராயுடுவை வெளியேற்றினார்..’ - பற்றவைத்த உத்தப்பா.. உண்மையை உடைத்து பேசிய அம்பத்தி ராயுடு!

2019 ஒருநாள் உலகக்கோப்பைக்காக இந்திய அணியில் சேர்க்கப்பட்ட அம்பத்தி ராயுடு கடைசி நேரத்தில் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இது அப்போது பெரிய சர்ச்சையாக வெடித்தது, அரையிறுதியில் தோற்றபோது கூட ராயுடுவை நீக்கியதே காரணம் என சொல்லப்பட்டது.

Rishan Vengai

இங்கிலாந்தில் நடைபெற்ற 2019 ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதலில் அம்பத்தி ராயுடு தேர்ந்தெடுக்கப்பட்டார். உலகக்கோப்பைக்கான முந்தைய ஒருநாள் தொடரின் போது கூட என்னுடைய நம்பர் 4 பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடு தான் என்று விராட் கோலி வெளிப்படையாக கூறினார்.

ஆனால் 2019 ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணி உறுதிசெய்யப்படும்போது அம்பத்தி ராயுடுவின் பெயர் நீக்கப்பட்டு, அவருக்கு பதில் மாற்றுவீரராக விஜய் ஷங்கருடன் சென்றது இந்திய அணி. அங்கு ஒரு போட்டியில் விளையாடிய பிறகு விஜய் ஷங்கர் இந்தியாவிற்கு திரும்பினார்.

IND vs NZ - 2019 Semi Final

அரையிறுதிப்போட்டிவரை முன்னேறிய இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இல்லாமல் படுதோல்வியை சந்தித்து கண்ணீருடன் நாடு திரும்பியது.

தன்னை அணியிலிருந்து நீக்கிய பிறகு இந்திய தேர்வுக்குழுவுக்கு எதிராக கடுமையான கருத்தை வெளிப்படுத்திய அம்பத்தி ராயுடு ஓய்வுபெறுவதாக விரக்தியில் அறிவித்தார்.

அம்பத்தி ராயுடு நீக்கத்திற்கு கோலி தான் காரணம்..

லல்லன்டோப் உடனான நேர்காணலின் போது பேசிய உத்தப்பா, "விராட் கோலிக்கு யாரையும் பிடிக்கவில்லை என்றால், அவருக்கு யாராவது சரியில்லை என்று உணர்ந்துவிட்டால், பின்னர் அவர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டார்கள். அம்பதி ராயுடு தான் அதற்கு மிகப்பெரிய உதாரணம். நீங்கள் அவருக்காக மோசமாக வருத்தப்பட வேண்டும். இங்கு அனைவருக்கும் விருப்பத்தேர்வுகள் என்பது உண்டு தான் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் ஒரு வீரரை உலகக்கோப்பை தேர்வுவரை அழைத்துச்சென்றுவிட்டு இறுதியில் நீங்கள் கதவுகளை அடைப்பது மிகவும் மோசமான செயல்.

உலகக்கோப்பையில் பங்கேற்பதற்காக அம்பத்தி ராயுடுவின் வீட்டிற்கே இந்திய அணிக்கான உடைகளும், கிட்களும் சென்றுவிட்டன. ஆனால் உலகக் கோப்பைக்கு போகப்போகிறோம் என்ற கனவோடு இருந்தவருக்கு நீங்கள் செய்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. அது என்னைப் பொறுத்தவரை நியாயமில்லை" என்று கோலி மீது குற்றச்சாட்டுகளை வைத்தார்.

கோலிதான் எனக்குஆதரவு வழங்கினார்..

ராபின் உத்தப்பா மட்டுமில்லாமல் ரசிகர்கள் கூட கோலிதான் ராயுடுவின் உலகக்கோப்பை நீக்கத்திற்கு காரணம் என்ற கருத்தை தெரிவித்துவருகின்றனர். அதன்காரணமாகவே ராயுடு ஆர்சிபிக்கும், விராட் கோலிக்கும் எதிரான கருத்துகளை கூறிவருவதாகவும் சர்ச்சைகள் இருந்துவருகின்றன.

ஆனால் ராபின் உத்தப்பாவின் கருத்தை மறுத்திருக்கும் அம்பத்தி ராயுடு, கோலி தான் தனக்கு அதிக வாய்ப்புகளை வழங்கியதாக கூறியுள்ளார். இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “உத்தப்பா சொல்ல வந்தது, கோலிக்கு விருப்பு வெறுப்புகள் உள்ளன என்பதை தான். ஆனால் என்னைப் பொறுத்தவரை, கோலி தான் எனக்கு ஆதரவளித்தார். அவர் என்னை விரும்பினார். அவரது தலைமையின் கீழ், நான் இந்தியாவுக்காக பல ஆட்டங்களில் விளையாடினேன். என்னை அணிக்குள் கொண்டு வந்தவர் அவர்தான். அவர் ஒரு எளிய பின்னணியைச் சேர்ந்தவர் என்பதால் என்னை புரிந்துகொண்டார்" என்று ராயுடு ரா டாக்ஸ் பாட்காஸ்டில் பேசுகையில் தெளிவுபடுத்தினார்.

ஆனாலும் விராட் கோலியின் கேப்டன்சியில் குறைகள் இருப்பதாக கூறிய அவர், "அவரது தலைமை சில நேரங்களில் பற்றாக்குறையாகக் காணப்பட்டது, இது அனைவருக்கும் தெரியும். உத்தப்பா குறிப்பிட்டது என்னவென்றால், அவர் தனது கேப்டன்சியின் போது தவறுகளைச் செய்தார். இது சுய விருப்பங்களைப் பற்றியது அல்ல, ஆனால் அந்தந்த நேரத்து லாஜிக்கை பற்றியது" என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் கோலி அணிக்காக மட்டுமே அந்த முடிவை எடுத்தார், இதில் தனிப்பட்ட தாக்குதல் எதுவும் இல்லை என்பதையும் ராயுடு உறுதிப்படுத்தினார். அதுகுறித்தும் பேசிய அவர், “கோலி அல்லது ரவி சாஸ்திரி அல்லது எம்.எஸ்.கே. பிரசாத் இந்த முடிவை எடுத்தார்கள் என்று நான் கூறமாட்டேன். அது ஒரு கூட்டு முடிவு. அவர்கள் தங்கள் அணிக்கு அந்த மாற்றத்தால் வேறு ஏதாவது நல்லது நடக்கலாம் என்று நினைத்தார்கள். அதனால் அந்த முடிவு தனிப்பட்ட தாக்குதல் என்று நான் நினைக்கவில்லை” என்று ராயுடு கூறியுள்ளார்.