மதுரை கிரிக்கெட் ஸ்டேடியத்தை திறந்துவைக்கும் தோனி pt
கிரிக்கெட்

இனி மதுரையிலும் ஐபிஎல் போட்டி.. பிரம்மாண்ட ஸ்டேடியத்தை திறந்துவைக்கும் எம்எஸ் தோனி!

மதுரையில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட கிரிக்கெட் ஸ்டேடியத்தை முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி திறந்துவைக்க உள்ளார்.

PT WEB

மதுரையில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட கிரிக்கெட் ஸ்டேடியத்தை முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி திறந்துவைக்க உள்ளார்.

சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுடன் ஒப்பிடுகையில் மதுரை மாவட்டத்தின் வளர்ச்சி குறைந்த அளவிலேயே இருந்து வந்தது. அதிகளவிலான தொழில்கள், ஆலைகள், மத்திய அரசு நிறுவனங்கள் என்று மதுரையில் அதிகளவில் இடம்பெறவில்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மதுரையில் அடுத்தக்கட்ட வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே மதுரையில் டைடல் பார்க் பணிகள் தொடங்கவுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முதற்கட்ட பணி ஜனவரி மாதம் முடிவடை உள்ளது.

மதுரை கிரிக்கெட் ஸ்டேடியம்

இதனிடையே மதுரையில் உள்ள இளைஞர்களின் கிரிக்கெட் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், கிரிக்கெட் ஸ்டேடியம் கடந்த 2023ஆம் ஆண்டில் கட்டப்படத் தொடங்கியது. மதுரை சிந்தாமணி ரிங்ரோடு பகுதியில் அமைந்துள்ள வேலம்மாள் மருத்துவமனை வளாகம் அருகில் இந்த கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் பிரம்மாண்ட ஸ்டேடியம்..

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு பின் தமிழ்நாட்டின் 2வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமாக உருவாகி உள்ள இந்த மைதானத்தில் 20 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் இருக்கைகள் கொண்ட வசதி, இரு அணிகளின் வீரர்களுக்கான ஓய்வறை, அவர்களுக்கான ஜிம் வசதி, ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனை வசதி, கார் பார்க்கிங் வசதி உள்ளிட்டவையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பெங்களூர் மைதானத்தை போல் மழை பெய்தாலும் ஆட்டம் விரைவாக தொடங்கும் வகையில் வடிகால் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மைதானத்தை சுற்றி 5 அடியளவில் மழைநீர் வெளியேறும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை கிரிக்கெட் ஸ்டேடியம்

மொத்தமாக ரூ.36 கோடி செலவில் மதுரையில் கிரிக்கெட் ஸ்டேடியம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட கிரிக்கெட் மைதான வல்லுநர்களுடன் ஆலோசித்து மைதானத்தின் லைட்ஸ் அமைக்கப்பட்டுள்ளது.

திறந்துவைக்கும் தோனி..

இந்த மைதானத்தை நாளை மறுநாள் 9-ம் தேதி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி திறந்து வைக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மதுரையில் உள்ள இந்த மைதானத்தில் டி.என்.பி.எல், ஐ.பி.எல் மற்றும் ரஞ்சி டிராபி போட்டிகள் நடத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. 

மதுரை கிரிக்கெட் ஸ்டேடியம்

இதுகுறித்து மதுரை கிரிக்கெட் வீரர்களிடம் கேட்டபோது, திண்டுக்கல், திருநெல்வேலி மாவட்டங்களில் டிஎன்பிஎல் நடத்துவதற்கான சிறிய மைதானங்கள் உள்ளது. ஆனால் மதுரையில் இந்த மைதானத்தின் மூலமாக தற்போது இங்கேயும் போட்டிகளை நடத்த வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், எதிர்கால கிரிக்கெட் வீரர்களுக்கும் இந்த மைதானம் பெரிய வாய்ப்பாக அமையும் என தெரிவித்தனர்.

மதுரை கிரிக்கெட் ஸ்டேடியம்

கிரிக்கெட் போட்டிகளை காண சென்னை பெங்களூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் இருந்த நிலையில் மதுரையில் இனிமேல் நடக்கப் போவது பாக்கலாம் என்பது மகிழ்ச்சி ஏற்படுகிறது.