dhoni in icc hall of fame web
கிரிக்கெட்

தோனிக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்.. ’ICC Hall of Fame’-ல் 11வது இந்திய வீரராக இடம்!

தலைசிறந்த உலக கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் கௌரவமாக பார்க்கப்படும் ஐசிசியின் ஹால் ஆஃப் பேமில் தோனியும் இடம்பிடித்துள்ளார். 11வது இந்திய வீரராக தோனி சேர்க்கப்பட்டுள்ளார்.

Rishan Vengai

உலகின் தலைச்சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் "ஹால் ஆஃப் ஃபேம்" விருது வழங்கி கௌரவித்து வருகிறது ஐசிசி. இது கிரிக்கெட் வீரர்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. இதை முதலில் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FICA) வழங்கிவந்த நிலையில், 2009-ல் இருந்து ஐசிசி பொறுப்பேற்று இணைந்து வழங்கி வருகிறது.

டயானா எடுல்ஜி ( ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இணைக்கப்பட்ட முதல் இந்திய பெண் கிரிக்கெட்டர்)

இதுவரை 115 வீரர்கள் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பிடித்துள்ள நிலையில், இந்திய கிரிக்கெட்டிலிருந்து,

1. சச்சின் டெண்டுல்கர்,

2. பிஷன் சிங் பேடி,

3. சுனில் கவாஸ்கர்,

4. கபில் தேவ்,

5. வினூ மன்கட்

6. அனில் கும்ப்ளே,

7. ராகுல் டிராவிட்,

8. வீரேந்தர் சேவாக்,

9. டயானா எடுல்ஜி ( ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இணைக்கப்பட்ட முதல் இந்திய பெண் கிரிக்கெட்டர்),

10. நீது டேவிட் (இரண்டாவது இந்திய பெண் கிரிக்கெட்டர்),

முதலிய 10 இந்திய வீரர்கள் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது 11வது இந்திய வீரராக மகேந்திர சிங் தோனி இணைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

தோனிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்..

நடப்பாண்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில்,

1.மேத்யூ ஹெய்டன் (ஆஸ்திரேலியா),

2. மகேந்திர சிங் தோனி (இந்தியா),

3. ஹசிம் ஆம்லா (தென்னாப்பிரிக்கா),

4. க்றீம் ஸ்மித் (தென்னாப்பிரிக்கா),

5. டேனியல் விட்டோரி (நியூசிலாந்து),

6. சனா மிர் (பாகிஸ்தான் பெண் கிரிக்கெட்டர்),

7. சாரா டெய்லர் (இங்கிலாந்து பெண் கிரிக்கெட்டர்),

முதலிய 7 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

லண்டனில் நடைபெற்ற ஒரு ஐசிசி நிகழ்வின் போது, மகேந்திர சிங் தோனி உள்ளிட்ட 7 வீரர்கள் ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பிடிப்பதாக அறிவிக்கப்பட்டனர்.

தோனியை பொறுத்தவரையில் 2004-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான மகேந்திர சிங் தோனி, கேப்டனாக 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என 3 ஐசிசி கோப்பைகளை வென்று சாதனை படைத்தார்.

அதுமட்டுமில்லாமல் 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 50.57 சராசரியுடன் 10,773 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 10 சதங்களும், 73 அரைசதங்களும் அடங்கும்.

மேலும் 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர், 38 சராசரியுடன் 4876 ரன்கள் அடித்துள்ளார். அதில் ஆறு சதங்கள் அடங்கும். விக்கெட் கீப்பராக கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட டிஸ்மிஸ்ஸல்களை கைப்பற்றியுள்ளார்.

தோனி

ஐசிசி ஹால் ஆஃப் பேமில் இடம்பெறுவது குறித்து ஐசிசியிடம் பேசியிருக்கும் தோனி, “தலைமுறைகளாக உலகம் முழுவதிலுமிருந்து கிரிக்கெட் வீரர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் ஐ.சி.சி ஹால் ஆஃப் ஃபேமில் பெயர் இடம்பெறுவது என்பது ஒரு மரியாதை. இதுபோன்ற எல்லா காலத்திலும் சிறந்த வீரர்களுடன் உங்கள் பெயரையும் நினைவில் கொள்வது ஒரு அற்புதமான உணர்வு. அதை நான் என்றென்றும் போற்றுவேன்” என தெரிவித்துள்ளார்.

ஐசிசி ஹால்ஆஃப் பேமில் இடம்பிடிப்பதற்கான தகுதிகள் என்ன?

ஒரு கிரிக்கெட் வீரர் ஓய்வு பெற்ற ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட தகுதி பெறுகிறார்.

ஒரு பேட்ஸ்மேன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் என்ற இரண்டு முக்கிய வடிவங்களில் ஏதேனும் ஒன்றில் குறைந்தபட்சம் 8000 ரன்கள் மற்றும் 20 சதங்களை அடித்திருக்க வேண்டும் அல்லது இரண்டு வடிவங்களிலும் சராசரியாக 50க்கு மேல் வைத்திருக்க வேண்டும்.

பந்து வீச்சாளர்களை பொறுத்தவரையில் ஏதேனும் ஒரு வடிவத்தில் குறைந்தபட்சம் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்க வேண்டும். ஆனால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஸ்ட்ரைக் ரேட்டானது 50 மற்றும் 30 க்கும் குறைவாக இருக்க வேண்டும்.

விக்கெட் கீப்பர்கள் இரண்டு வடிவங்களிலும் 200 முறையாவது ஆட்டமிழக்கச் செய்திருக்க வேண்டும்

ஒரு கேப்டன் இந்த கௌரவத்திற்கு தகுதி பெறவேண்டுமானால், அவர் தனது அணியை குறைந்தது 25 டெஸ்ட் அல்லது 100 ஒருநாள் போட்டிகளில் வழிநடத்தியிருக்க வேண்டும். அதேபோல இரண்டு வடிவங்களிலும் 50 அல்லது அதற்கு மேற்பட்ட வெற்றி சதவீதத்துடன் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்திருக்க வேண்டும்.