சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ROAR 2026 நிகழ்ச்சியில் தோனி, ஓய்வு குறித்து கேள்வி எழுப்பிய சிவகார்த்திகேயனுக்கு, 'WAIT FOR IT' என பதிலளித்தார். இந்த நிகழ்ச்சியில் சிஎஸ்கேவின் HALL OF FAME பட்டம் ஹைடன் மற்றும் ரெய்னாவிற்கு வழங்கப்பட்டது. சஞ்சு சாம்சன் உள்ளிட்ட புதிய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஐபிஎல் தொடரின் 19வது சீசன் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. இதற்காக 10 அணிகளும் தீவிரமாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஒருபக்கம் OG சாம்பியன் அணிகளான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் 6வது கோப்பைக்காக தயாராகிவரும் நிலையில், 17 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பை வென்ற ஆர்சிபி அணி அடுத்த கோப்பைக்காக தயாராகி வருகிறது. வலைப்பயிற்சியில் விராட் கோலி சக வீரர்களுக்கு உத்வேகம் அளிப்பதும், சிஎஸ்கேவில் சஞ்சு சாம்சனுடன் தோனி உரையாடுவதும் என தொடர்ந்து வீரர்கள் வலுவாக தயாராகி வருகின்றனர்.
இந்தசூழலில் ரசிகர்களை எப்போதும் நெருக்கமாக வைத்துக்கொள்ளும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரசிகர்களை கவரும் வகையில் 'ROAR26’ என்ற தலைப்பில் சில நிகழ்ச்சிகளை நேற்று ஏற்பாடு செய்திருந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயணத்தை கொண்டாடும் வகையில் ROAR 2026 நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொண்டாட்டமாக நடைபெற்றது. முன்னாள் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, முத்தையா முரளிதரன், மேத்யூஹெய்டன், பிராவோ, மைக்கேல் ஹசி, பத்ரிநாத், முரளி விஜய், ஹர்பஜன் சிங், ஜகாத்தி, பார்தீவ் பட்டேல் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக முன்னாள் வீரர்கள் தற்போதைய சென்னை அணிவீரர்களுக்கு இடையே போட்டிகள் நடைபெற்றது. சென்னை அணியில் புதிதாக இந்த ஆண்டு இணைந்த சஞ்சு சாமானுக்கு ரசிகர்கள்மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதேபோல U19 உலக கோப்பையை வென்ற ஆயுஷ் மாத்ரே மற்றும் டி20 உலக கோப்பையை வென்ற சஞ்சு சாம்சன் மற்றும் சிவம் துபேவிற்கு நினைவு பரிசை தோனி வழங்கினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் அணியின் HALL OF FAME புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், மாத்யூ ஹைடன் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு HALL OF FAME என்ற பட்டம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய சஞ்சு சாம்சன், இந்த அணியில் இருப்பது மிகவும் பெருமையாக உள்ளது. அடுத்த இரண்டு மாதங்கள் சென்னை அணிக்கு விளையாடுவதில் மிகவும் ஆர்வமாக உள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் BALLஆ பார்த்து சுத்தூரோம் முடிஞ்ச வர சிக்சர் அடிக்கிறோம் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன் தோனியிடம், MSD சார் நான் சேப்பாக்கத்திலிருந்து 25 கிமீ தொலைவில் இருக்கிறேன். நீங்கள் சேப்பாக்கத்தில் எண்ட்ரி கொடுக்கும் போது எழும் சத்தம் எனக்கு அங்கு கேட்கிறது என்று கூறினார். மேலும் கடந்த ஆண்டுகளில் உங்களிடம் ஓய்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, நீங்கள் DEFINITELY NOT என்ற பதிலை சொன்னீர்கள். ஒவ்வொரு வருடமும் நாங்கள் அந்த பதிலையே தான் எதிர்பார்க்கிறோம் என கூறினார். அதற்கு பதிலளித்த தோனி எனக்கு வயதாகிக் கொண்டே இருக்கிறது, என்னுடைய ஃபிட்னஸும் உயரத்தில் செல்லாமல் குறைந்துகொண்டே போகிறது என்று சொன்னார். மேலும் ஓய்வு குறித்து WAIT FOR IT என சொல்லி முடித்தார்.
அர்ஜுன் தாஸ், சிவகார்த்திகேயன் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்க ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.