இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளராக பார்க்கப்படும் இடது கை ஸ்பின்னர் பிஷன் சிங் பேடி (1967-79), 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 266 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல் 22 போட்டிகளில் இந்தியா அணிக்கு கேப்டனாகவும் வழிநடத்தியுள்ளார்.
இந்தியாவிற்கு 1983-ல் முதல் உலகக் கோப்பையை வென்ற கேப்டனான கபில் தேவ், இந்திய கிரிக்கெட்டின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார். சிறந்த ஆல்ரவுண்டர் வீரரான கபில் தேவ், டெஸ்ட் கிரிக்கெட்டில் 400-க்கும் மேலான விக்கெட்டுகளையும், 5000-க்கும் அதிகமான ரன்களையும் எடுத்த ஒரே வீரராக வரலாற்றில் தடம் பதித்துள்ளார்.
10000 டெஸ்ட் ரன்களை கடந்த முதல் வீரராக வரலாறு படைத்த சுனில் கவாஸ்கர், 34 டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார். 2009-ல் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இணைக்கப்பட்ட இந்திய வீரர்களில் பிஷன் சிங் பேடி, கபில் தேவ் உடன் சுனில் கவாஸ்கர் பெயரும் சேர்க்கப்பட்டது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலரான அனில் கும்ப்ளே, டெஸ்ட் கிரிக்கெட்டில் 619 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 337 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். மொத்தமாக தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் பயணத்தை 953 விக்கெட்டுகளுடன் முடித்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 13000 ரன்களுக்கு மேலாகவும், ஒருநாள் கிரிக்கெட்டில் 10000 ரன்களுக்கு மேலும் அடித்திருக்கும் ராகுல் டிராவிட், 36 டெஸ்ட் சதம் மற்றும் 12 ஒருநாள் கிரிக்கெட் சதங்களை அடித்துள்ளார். பயிற்சியாளராக 2024 டி20 உலகக்கோப்பையையும் வென்று கொடுத்துள்ளார் ராகுல் டிராவிட்.
ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமானது 2019-ஆம் ஆண்டு சச்சின் பெயரை சேர்த்து தன்னை அலங்கரித்து கொண்டது. 100 சர்வதேச சதங்களை அடித்திருக்கும் சச்சின் டெண்டுல்கர், எக்காலத்திற்கும் சிறந்த கிரிக்கெட் வீரராக அறியப்படுகிறார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான வினூ மன்கட், டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்கள் எடுத்து 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய கிரிக்கெட்டராவார். வெறும் 23 போட்டிகளில் இந்த சாதனையை படைத்த முதல் வீரராக வரலாற்றில் தடம்பதித்தார்.
அது மட்டுமில்லாமல் பங்கஜ் ராயுடன் இணைந்து அதிக தொடக்க பார்ட்னர்ஷிப் (413) என்ற உலக சாதனையையும் படைத்துள்ளார். 1956-ல் அடிக்கப்பட்ட இந்த சாதனையானது 2008-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் க்றீம் ஸ்மித் மற்றும் மெக்கென்சியால் (415 ரன்கள்) முறியடிக்கப்பட்டது.
ஐ.சி.சி ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்ட முதல் இந்திய பெண் கிரிக்கெட் வீரர் டயானா எடுல்ஜி. தன்னுடைய ஓய்வின் போது சர்வதேச கிரிக்கெட்டில் அதிக (120) விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த வீராங்கனையாக முடித்தார். அதுமட்டுமில்லாமல் 18 ஒருநாள் போட்டிகளிலும் 4 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தியுள்ளார்.
வரலாற்றில் மிகச்சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவரான வீரேந்தர் சேவாக், டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த முதல் இந்தியர் மட்டுமில்லாமல், அதை இரண்டு முறை செய்த ஒரே வீரரும் சேவாக் மட்டும்தான். 2007 டி20 மற்றும் 2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிகளில் சேவாக் ஒரு பகுதியாக இருந்தார்.
இந்திய பெண்கள் கிரிக்கெட்டில் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளராக பார்க்கப்படும் நீது டேவிட், சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக 182 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 10 டெஸ்ட் மற்றும் 97 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பந்துவீச்சை வைத்திருப்பவர் நீது தான். 1995-ல் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 53 ரன்களை விட்டுக்கொடுத்த அவர், 8 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்சியை ஏற்படுத்தினார்.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் சக வீரர்களால் "சுழற்பந்துவீச்சு ராணி என்றும், சுழல் மந்திரவாதி" என்றும் புகழப்படுகிறார் 'நீது டேவிட்'.
தோனியை பொறுத்தவரையில் 2004-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான மகேந்திர சிங் தோனி, கேப்டனாக 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என 3 ஐசிசி கோப்பைகளை வென்று சாதனை படைத்தார்.
அதுமட்டுமில்லாமல் 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 50.57 சராசரியுடன் 10,773 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 10 சதங்களும், 73 அரைசதங்களும் அடங்கும்.
மேலும் 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர், 38 சராசரியுடன் 4876 ரன்கள் அடித்துள்ளார். அதில் ஆறு சதங்கள் அடங்கும். விக்கெட் கீப்பராக கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட டிஸ்மிஸ்ஸல்களை கைப்பற்றியுள்ளார். ’கேப்டன் கூல்’ என்று எல்லோராலும் அறியப்படுகிறார்.